Tuesday, December 30, 2008

41 x 49 - புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!


இன்றைய காலகட்டத்தில், 2009ன் தேவைப்பட்டியலை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் நான் அளவில்லாத மகிழ்ச்சியை அடைந்திடுகிறேன் என்பதைக் கூறக் கடமைப் பட்டுள்ளேன் என்பதைச் சிரம் தாழ்த்திக் கரம் கூப்பி தாங்களிடம் சொல்ல விழைவதில் நான் பெருமிதம் கொள்கிறேன் என்பதை இந்த அரங்கில் பகர்வதில் பேரானந்தம் பெறுகிறேன் என்று இன்றைக்கு நான் கூறினால் அது மிகையாகாது~! (அப்பாடா!)

* பங்குச் சந்தைகளின் பத்து மாத நிறைப்பிரசவம் (பாக்கி ரெண்டு மாசம் அமுக்கி வாசி!)


* சச்சினுக்கு இன்னும் ஒன்பது டெஸ்ட் சதம் (ரெளண்டா அம்பது ஆயிடும்லே!)

* சூப்பர் ஸ்டார் சொன்ன மாதிரி, எப்போதும் சரியான எட்டில் இருக்க வேண்டும் (எட்டாத இடத்தில் ஏறாம இருந்தா சரி!)

* டோடோவில் வெல்ல அந்த ஏழு ஆட்கள் - மன்னிசுக்க பிரதர் - எண்கள்!

* ஆறாம் மாதத்தில் T20 உலகக் கோப்பை வெற்றி (கனவு காணும் வாழ்க்கை எல்லாம்...)

* ஐந்து மாத போனஸ் (இது ரொம்ப டூ டூ மச்!)

* சரிய்யா... ஒரு நாலு மாசம்? (யாரங்கே! இந்தாளைக் கொண்டுபோய் CDO டிபார்ட்மெண்டில விடு)

* ஹாரி பாட்டரின் மூன்று மணி நேர மேஜிக் (அரை ரத்தமோ, முழு ரத்தமோ, தியேட்டரில மூட்டைபூச்சி ரத்தம் குடிக்காம இருந்தா சரி)

* இரண்டு மனம் வேண்டும் (நமீதா பற்றி நோ கமெண்ட்ஸ்!)

* அந்தக் கடன்கார அமெரிக்காவை வழிக்குக் கொண்டு வர ஒரு பலமான ஒபாமா! (நெனப்புதான் மனுஷனை கெடுக்கிறது - வேலயப் பாருங்கப்பா!)

* எல்லாவற்றையும் விட இது மாதிரி மொக்க லிஸ்டின் தேவை: பூஜ்யம்! (நாக்க முக்க...)

வாழ்க வளமுடன்!!

Sunday, October 26, 2008

ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க!!வீட்டில் ஒரு டீன் ஏஜ் பையன் இருந்தால் பல வழிகளில் சுவாரசியம்தான். நாட்டில் உள்ள ஆட்டம், பாட்டம் சம்பந்தப்பட்ட சில பல ட்ரெண்டுகள் வேண்டுமோ, வேண்டாமோ நம் முன்னால் விழுந்துவிட, இளசுகளோடு ஒன்றாக இணைய முடியாவிட்டாலும், குறைந்த பட்சம் பின் தொடரவாவது முடிகிறது. அது சரி, அதுங்க பின்னாடி நீ ஏன் போறே? விதி வலியது...

ஆனால், எப்படி வாழ்க்கையில் கஷ்டமும் துக்கமும் மாறி மாறி வருகிறதோ, அது போல நம்மை புது ட்ரெண்டுகளும், புதுப் படங்களும் மாறி மாறி போட்டுத் தாக்குகின்றன!

அப்படி மிக அண்மையில் தாக்கியது "ஏகன்" என்ற தல (வலி?) படம்தான்.
ராஜு சுந்தரம் இயக்கத்தில் அஜித், நயந்தாரா மற்றும் பலர் நடித்து (அதாவது நடிக்க முயன்றிருக்கும்) இப்படத்தை விமர்சனம் செய்ய முயற்சி செய்வது என்பது... ம்ஹூம் முடியலே! இருந்தாலும் ட்ரை பண்ணுவோம்...

அஜித் ஒரு உதாரண போலீஸ் அதிகாரி - தொப்பை உள்பட.ஒரு தொழிலதிபரைப் பிடிக்க வேண்டி அப்ரூவரைத் தேடித் தேடி ஹாங்காங்கிலிருந்து ஊட்டிக்கு ஸ்டூடன்டாக (ஆமாஙக!) வந்து, கிண்டலும் கேலியும் பட்டு, நயனைக் கெமிஸ்ட்ரி கரெக்ட் பண்ணி, கொஞ்சம் சென்டிமெண்ட் பிழிந்து, வில்லனைக் கொலை செய்து... ஆஆஆஆ...

இசை/பாடல்கள்: காது காலி.
சண்டைகள்: ராஜு ஒரு நடன இயக்குனர் என்பதால் சண்டைக் காட்சிகளில் ஒரு நளினம் இருக்கின்றது.
நயனின் உடைகள்: என்னதான் மாடர்ன் ட்ரெஸ் வேண்டும் என்று தல கேட்டாலும், அந்த ஸ்பெஷல் புடவை + கர்ச்சீப் காம்பினேஷனே சூப்பர்.

அஜித்: சமீபத்தில் எந்த ஒரு கதாநாயகனும் இந்த அளவுக்குத் தன்னையே இவ்வளவு கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாக்கிக் கொண்டதில்லை. அவர் வாயாலேயே வரும் வசனங்கள்: "என்னப் பாருங்க! என் தாடியும்,தொப்பையும்..." "அதுதான் நானே ஒத்துக்கிட்டேன் இல்ல, பின்னே ஏன் திருப்பி திருப்பி என் தொப்பையைப் பற்றி..."

நகைச்சுவை: எப்படி சூரியன் கிழக்கில் உதிப்பது மாறாதோ அது போல அஜித்க்கு காமெடி வராது என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. அதையும் தாண்டி படம் பார்க்க வந்த ஆன்மாக்களை கிச்சு கிச்சு மூட்டியாவது சிரிக்க வைக்க வேண்டும் என்று ராஜு மெனக்கெட்டு இருப்பது கண்டு அவரைப் பெற்ற மனம் பூரிப்படைவது உறுதி. ஆனால், அதற்கு அவர் கொடுத்த விலை... ஏறத்தாழ படம் முழுக்க எல்லோரும் காமெடி மற்றும் கீமெடி பண்ணுகிறார்கள்.

ஹனீfஆ, சுமன் (விஜய் மல்லையா பார்த்தால் மான நஷ்ட வழக்கு நிச்சயம்), ஸ்ரீமன், ஸ்ரீஜித், ஜெயராம், லிவிங்ஸ்டன், நாசர், நயன் என்று எல்லோரும் அஜித்தின் சிரிப்பு முயற்சிக்கு தங்கள் உடல், பொருள், ஆடை, (நம்) ஆவி என்று எல்லாவற்றையும் படையல் இடுகிறார்கள்.

அதையும் தாண்டிப் புனிதமாக அஜித் சத்தம் போட்டால் சவமாக்குகிறார்; தலையில் தட்டினால் துவட்டி எடுக்கிறார்.


ஆமா, படத்திலே எல்லோரும் சிரிப்பா சிரிச்ச காரணத்தாலோ என்னவோ, தேவையில்லாம நாசர்/சுஹாசினி சென்ட்டி சீன்களோ? படம் மொத்தம் 2:05 மணி நேரம்தான். பத்து நிமிடம் வருகிற சுஹாசினி சீன்களை எடுத்து விட்டால்... நீங்களே கணக்கு போட்டுக்கொள்ளுங்கள்...


ஆக மொத்தம், ஏகன் படத்தால் தமிழ் திரைப்பட உலகத்தில் ஒரு மிகப் பெரிய மாற்றம் உண்டாவது நிச்சயம். எல்லா இயக்குனர்களும் 'தல'யிடம் வந்து 'சார்! இது ஒரு முழு காமெடி படம்! நீங்க ஒரு ஆர்மி கமாண்டர்; ஒரு தீவிரவாதியைப் பிடிக்க வேண்டி, நர்சரி ஸ்டூடன்டா வரீங்க!..." என்று ஆரம்பித்தால்...

அடப் போங்கப்பா!!!

Saturday, August 30, 2008

திருநெல்வெலி அல்வாடா!


சென்ற வாரம் திருநெல்வெலியில் மூன்று நாட்கள்...

இந்தப் பயணம் பல வகைகளில் மிகவும் அருமையாக இருந்தது.
==> அந்த ATR-72 டெக்கான் ஏர்வேஸ் விமானம் (சூரன் தலை போல ஆடியது!)

==> வாகைகுளம் - தூத்துக்குடியின் அதி நவீன விமான நிலையம் (ஐதராபாதாவது, பெங்களுராவது - இங்கே வாரும்லா - லக்கேஜ் சீட்டைக் கொடுத்தால், ஒருவர் உங்கள் பெட்டியை தனியாக எடுத்துக் கொடுப்பார் - Last saw this in Hey Ram, when UN goes to Pune with a nubile Vasundara Das - கன்வேயர் பெல்டா? அப்படின்னா? எக்ஸ்-ரே கைப்பைக்களுக்கு மட்டும் தான். இப்போதான் புதுசா லக்கேஜ்க்கும் வாங்கப் போறாங்களாம்)

==> சார்பதிவாளர் அலுவலகம் இரவு 10:30 மணிவரை வேலை செய்த மாயம் (என்னதான் காந்தி நோட்டு வேலை செய்தாலும், இந்த ஒரு கடமை உணர்ச்சியை என்னால் மறக்க முடியாது!)
==> திருச்செந்தூர் சித்ரா பார்க் லாட்ஜ் ரூ. 1500க்கு பல உலக நகரத்து ஹில்டன்களுக்கு, 'இந்த வசதி போதுமா? இன்னும் கொஞ்சம் வேணுமா?' என்று விடுத்த சவால்
==> முருகனை தரிசித்துவிட்டுத் திரும்பும்போது, அவர் மாமனை நவதிருப்பதியிலும் பார்த்தது (நான் ஸ்ரீ வைகுண்டம் மட்டும் பார்க்க இயலவில்லை - பாழாய்ப் போன கான்ஃபிரன்ஸ் கால்!)
==> கூடவே வந்த அப்பா மற்றும் சுவாரசியமான CK
==> எல்லாவற்றுக்கும் மேலாக திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வா!!

ஸ்ரீ வைகுண்டம் முடித்த கையோடு அப்பாவும் CKயும் நேராக சாயங்காலம் ஆறரைக்கு இருட்டுக்கடையில் ஆஜர்.
நெல்லையப்பர் கோயில் வாசலில் இருக்கும் பெயர்ப்பலகையற்ற, இரண்டே இரண்டு பல்புகள் மட்டும் எரியும் இந்தக் கடையில் அன்று ஐம்பது பேர் வரை கும்மியடித்துக் கொண்டிருந்ததாக அப்பாவும் CKயும் சத்தியம் செய்தனர். பிறகு CK முண்டியடித்துக் கொண்டு சில பல கிலோக்கள் அல்வாவை வாங்கி வெற்றித் திருமகனாக மீண்டு வெளியே வந்தது எல்லா அல்வாக்கடைகளிலும் பொறிக்கப் படவேண்டிய செய்தி! நிற்க.


மேலாண்மை மற்றும் பொருளாதார நிபுணர்களின் ஆய்வுக்கு: ஒரு நாளைக்கு இருட்டுக்கடையில் 500 கிலோ அல்வா கிண்டுவதாகவும் அதை அவர்கள் ஒரு கிலோ தலா ரூ. 100க்கு விற்பதாகவும் தமிழ் கூறும் நல்லுலகில் நவில்கிறார்கள். 20% லாபம் என்றால் ஒரு நாளைக்கு ரூ. 10000 ஈட்டும் அந்த கடை சரியான பாதையில் செல்கிறதா? ஒரே ஒரு பொருள் மட்டுமே உற்பத்தி செய்வதால் அவர்களின் தொழிலுக்கு ஆபத்து வந்துவிடாதா?
(டேய்! டேய்! பொட்டலம் மடிக்கறதை நிறுத்து!)


டெயில் பீஸ் #1: ஒரிஜினலுக்கு மிக அருகில் மற்றொரு கடை "திருநெல்வேலி அல்வா கடை" - அல்வாவுக்கே அல்வாவா?


டெயில் பீஸ் #2: இரவு மையிடம் பேசினேன்...

மை: 'இருட்டுக்கடையை விட சாந்தி கடையில் அல்வா நல்லா இருக்கும்'

நான்: 'அது எங்கே இருக்கு?'

மை: 'அடுத்த கடை தாண்டா!'

நான்: 'ஙே'


மேலே உள்ள புகைப்படத்தில் CK இருட்டுக்கடை முன் பெருமிதமாக நிற்பது நியாயமே என்பது என் கருத்து. ஐம்பது பேரைத் தாண்டி அவர் எப்படி சென்றிருப்பார் என்பதும் உங்களுக்குப் புரிந்திருக்கும் :-) க்கும்... இங்கே மட்டும் என்ன வாழுதாம்? எடை மிஷினில் ஏறினால் அது 'சுற்றும் பூமி சுற்றும்'னு அழுகை பாட்டு பாடுது!!

பக்கத்தில் 1000 வாட் பல்புகளுடன் இருப்பது சாந்தி அல்வாக் கடை??