Friday, December 31, 2010

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் *** தீதும் நன்றும் பிறர் தர வாரா!

ImageShack, share photos, pictures, free image hosting, free video hosting, image hosting, video hosting, photo image hosting site, video hosting site

If you can't read Tamil, here are the Wishes in English!2010ல்...

  • 'எரிமலை எப்படிப் பொறுக்கும்?' என்று விவேக் சிங்கமாக விடைத்தது நன்றாக இருந்ததென்றால், எய்யாப்யாட்ல்லயோகுல் குமுறித் தீர்த்து கொஞ்ச நாட்களுக்கு எங்கெங்கு காணினும் சாம்பலடா! அதையும் தாண்டிப் புனிதமாக பல முறை பூமியன்னை, 'நீங்கள் செய்கிற அட்டூழியம் தாங்கவில்லை' என்று அதிர....

  • ஆ ராசாவின் ஊழல் எண்ணுக்குப் பின்னால் வரும் பூஜ்யங்களின் எண்ணிக்கைக்கு அளவே இல்லை என்று எல்லோரும் கும்மியடித்துக் கொண்டிருக்கும் போது, இந்தி கோடீஸ்வரர் நிகழ்ச்சியில் ஒரு கோடி வென்ற ராஹத் தஸ்லீம் புண்ணுக்கு ஒரு மயிலிறகு!

  • மிஷ்கின் போன்றோர் 'ரெமி மார்ட்டின், சரோஜா தேவி' என்று வாபு, மாபு செய்தாலும், இலக்கியம் என்றாலே வேப்பங்காய் என்று ஓடும் சமூகத்தை, 'நில்லுங்கள் ராசாவே!' (இது வேற ராசா!) என்று கடிவாளம் போட்டு, தென்னமெரிக்கா, பிரான்ஸ், பின் நவீனத்துவம் என்று சாரு, எஸ்ரா, மனுஷ்யபுத்திரன் போன்றோர் அறிமுகப்படுத்த முயலுவது ஆறுதல்!
  • சச்சின் ரசிகர்கள் எல்லோரும் சேர்ந்து கருப்பு வசியம் செய்து ரிக்கி பாண்டிங்கின் கை விரல், மன உறுதி இத்யாதிகளை உடைத்து ஒன்றுமில்லாமல் ஆக்கியது கிரிக்கெட் ரசிகனின் வருத்தத்தின் உச்சி என்றால், சென்னை சூப்பர் கிங்ஸ் IPL3 மற்றும் CLT20 இரண்டையும் வென்றது ராயபுரம் ஏகாம்பரத்தின் வயிற்றில் பீர் வார்த்தது.

  • ஏகாம்பரம் என்றவுடன் நினைவுக்கு வருவது 'எந்திரன்'. என்னதான் தமிழ்த் (இந்தியத்?) திரைப்பட வரலாற்றில் பல 'முதல்'களைப் பெற்றிருந்தாலும், மைனா, களவாணி, பாஸ் போன்ற படங்களே மனதில் நின்றன என்பது நம் ரசனை இன்னும் மரத்துப் போகவில்லை என்பதற்குச் சான்று!

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

இந்தக் 'காடுகள்' ஆண்டில், வீட்டிற்கு ஒரு மரம் வளர்த்துப் பேணுவோம்!

Thursday, December 23, 2010

மன்மதன் அம்பு: புயலில் சிக்கிய காகிதக் கப்பல்!

முதலில் மன்னிப்பு. கதை - Hitch படத்தைத் தழுவியது என்று எழுதியிருந்தேன். இல்லை - Romance on the High Seas என்ற படத்தின் தொள தொள பிட்டிங்.

For an English review visit here.

கமல் உஷார் பார்ட்டிதான். சிங்கப்பூரில் கதை கேட்டவுடன் வேறு பக்கம் திசை திருப்பி விட்டது போலத் தோன்றுகிறது.

மதனும் (மாதவன்) அம்புஜாக்ஷி என்கிற அம்பு என்கிற நிஷாவும் (த்ரிஷா) ரொம்ப லவ்ஸ். அம்பு ஒரு சினிமா நடிகை. சூர்யாவுடன் அம்மணி ஆடும் டூயட்டைப் பார்த்து சந்தேகப் பேயாக மாறி மதன் அவரைப் புண்படுத்த அம்பு காயமடைந்த காதல் மனத்துடன் தூணியை விட்டுச் சென்றுவிடுகிறார்.

அங்கே கட் பண்றோம்.

மூணு வருஷம் கழித்து, இன்னும் காதலை மறக்க முடியாமல், தோழி தீபாவுடன் (சங்கீதா) ஐரோப்பிய விடுமுறைக்குச் செல்லும் அம்புவை வேவு பார்க்க மேஜர் ராஜமன்னார் என்கிற மன்னாரை (கமல்) மதன் நியமிக்கிறார். புற்று நோயால் அவதிப்படும் தன் நண்பன் ராஜனுக்கு (மொட்டை ரமேஷ் அரவிந்த்) வைத்தியம் பார்க்க மேஜருக்கு மேஜராக பண முடை. பணம் அதிகம் தேவைப்பட, இல்லாத அம்புவின் காதலனாக தன்னையே உருவகமாக்கி, மதனை தண்ணி பார்ட்டி ஆக்கி, கடைசியில் கிரேசி மோகன் கிளைமாக்ஸ் மாதிரி எதையோ இடித்துச் சொதப்பி... வரலட்சுமி அம்மா!!


இனி பிடித்த எட்டு:

1. ஐரோப்பிய நாடுகள் + கடல்களை படிகம் போலப் படம் பிடித்துக் காட்டிய மனுஷ் நந்தனின் ஒளிப்பதிவு.
2. நீல வானம் என்ற அந்த பின்னோக்கிச் செல்லும் அருமையான பாடல் + தலை சிறந்த ஒளிப்பதிவு. அதுவும், எல்லா நிகழ்ச்சிகளும் அசைவுகளும் பின்னோக்கிச் செல்லும் போது, பாட்டுக்கான உதட்டசைவு மற்றும் முன்னோக்கிச் செல்வது டாப்! (Just to show off: The idea is from Enigma's Return to Innocence song!)
3. கமலின் வசனங்கள். "நேர்மையானவர்களுக்கு திமிர்தான் வேலி; யாராலும் அதைத் தாண்டி வரமுடியாது"; வரலட்சுமியை வேண்டி எழுதிய அந்த சர்ச்சைக்குரிய கவிதையை விட 'கண்ணெல்லாம்' என்ற கவிதை நன்றாக இருந்தது.

4. த்ரிஷாவின் நடிப்பு மற்றும் எந்த உடையிலும் எழிலுடன் இருந்த பாங்கு.
5. சங்கீதாவின் மிக இயல்பான நடிப்பு. அதுவும் அந்த 'Good seats are already taken' வசனம் இயல்பின் உச்சி.
6. அவரின் குழந்தைகளாக வரும் அந்த வாண்டுகள் (ரவிக்குமாரின் குழந்தைகள்??) - வயதுக்கு மீறிய சில பல வசனங்கள் பேசினாலும்... Delightful!
7. கடைசி அரை மணி நேரம் வரை அமைதியான ஆற்றின் ஓட்டத்தைப் போல ஒடிய திரைக்கதை
8. ஒய்யாலே பாட்டுக்கு கௌரவ ஆட்டம் போட்ட சூர்யா!பிடிக்காத எட்டு:

1. பல இடங்களில் இளித்த லைவ் ரெகார்டிங். முடியலேன்னா விட்டு விட வேண்டியது தானே! விருமாண்டியிலிருந்து பல படங்களில் இது உதைத்திருக்கிறது.
2. வழக்கம் போல கமலின் குழப்பம் - இது காதல் படமா? காமெடிப் படமா?
3. இசை - DSP absent.
4. இன்டெர்வலின் போது, குடும்பத்திடம் '(சாப்பிட) என்ன வேண்டும்?' என்று கேட்டவுடன் வந்த பதில்: கொஞ்சம் படம் வேகமாகப் போக வேண்டும் என்று பதில் வந்தது. சில இடங்களில் படம் 'பூட்டாத பூட்டுக்கள்' அளவுக்கு ஸ்லோ!
5. தேவையில்லாத இடங்களில் கமலின் போதனைகள்: 'நான் புத்தி மானா என்னன்னு தெரியாது! என்னப் போயி பக்திமான்னு சொன்னா?", "அகிம்சைதான் பெரிய வீரம்; அது தெரிஞ்சு இருந்தா நான் யாரையும் கொன்னுருக்க மாட்டேன்"...
6. அளவுக்கு மீறிய டாய்லெட் நகைச்சுவை! அதுவும் மாதவன் தொலைபேசியை டாய்லெட்டிலேயே போட்டு விடுகிறார் :-((

7. அந்த கிளைமாக்ஸ்! அது வரைக்கும் மூளைக்கு வேலை கொடுத்தது போதும் என்று கமல் எண்ணினாரோ என்னவோ தெரியவில்லை!
8. படத்துக்காக வேஸ்ட்டான $13 x 4 + பாப் கார்ன் + தண்ணி செலவு!

மொத்தத்தில், ஒரு இயல்பான காதல் கதையைக் கொடுக்க எண்ணிய கமல் பாதியில் பயந்து நெளிந்து.... ஹ்ம்ம்ம்...

விரைவில் கலைஞர் டிவியில் 'இந்தியத் தொலைக்காட்சிகளில் முதல் முறையாக, திரைக்கு வந்து சில மாதங்களே ஆன...' என்று மன்மதன் அம்பு ஆவதற்கு நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன.7

Wednesday, December 22, 2010

Loosely Based...

இன்னும் 16 மணி நேரங்களில் 'மன்மதன் அம்பு' கதை, நம்ம கதை மாதிரி இருக்கிறதா என்பதை அறிய வாருங்கள்!
என்ன செய்வது? நம்ம லைப் அப்படி ஆயிடுச்சு! காப்பி அடிச்ச படங்களுக்கு எல்லாம் விமர்சனம் எழுத வேண்டியதாயிடுச்சு!

(சரி, சரி, நீ எழுதலேன்னு யார் அழுதான்னு, நீங்க வீரப்பா வசனம் பேசுறது கேட்பதனாலே, இத்துடன் என் உரையை முடித்துக் கொள்கிறேன். நன்றி, வணக்கம்!)

Friend wrote that the movie is 'loosely' based on 'Romance on the High Seas' and not 'Hitch'.


அது என்ன 'loosely'? ஓ! படம் பார்ப்பவர்கள் loose என்பதை base பண்ணி எடுப்பார்கள் போல :-)

Thursday, December 2, 2010

மன்மதன் அம்பு கதை!


For the English one, you can go here.


டாக்டர் மன்னார் (கமல்) கைதேர்ந்த கில்லாடி. எதில்? பெண்களை வசியப் படுத்துவதில். அவருடைய பேஷன்டுகள்(?) "ஸார்! எப்படி இந்தப் பெண்ணை ப்ராக்கெட் போடுவது?' போன்ற அதி முக்கியமான பிரச்சினைகளுடன் அணுக, நம்ப மன்னாரு, 'பலானது பலானது செய்ஞ்சின்னா, பலானது, பலானது நடக்கும்' என்று அறிவுரை கொடுக்க, அவர்கள் அதைக் கடைபிடித்தால் வெற்றி என்பது உள்ளங்கை நெல்லிக்கனியாம்.


இப்படி இருக்கையில் திரு மாதவன் (கேரக்டர் பேர் தெலியேது :-() சினிமா நடிகை திரிஷாவுக்கு லைன் போட முற்பட, அந்த லைன் படு கோணலாக ஆகிவிட, அவர் டாக்டர் மன்னாரிடம் தஞ்சமடைய, இது வழக்கமான கமல்-ரவிக்குமார்-கிரேஸி(?) காம்பினேஷன் என்பது தெள்ளத் தெளிவாகும்.

நடுநடுவே கதைக்களன் கடலுக்குச் சென்று அதி நவீன சொகுசுக்கப்பலில் ஐரோப்பாவைச் சுற்றி வர... (பின்ன, கறுப்பெல்லாம் வெள்ளையாக வேண்டாமா? கமல் கூட 'ரொம்ப செலவாகும் உதய்! வேணும்னா சிங்கப்பூரிலே போயி பத்து நாள்ல முடிச்சிடலாம்னு சொல்ல, அதுக்கு வாரிசு 'அதெல்லாம் வேண்டாம், ரிச்சா செய்யலாம்'னு சொன்னதாக வாரிசே ஒரு பேட்டியில சொன்னாரு!)

முடிக்கிறதுக்கு முன்னாடி:

1. இந்தக் கதை நம்ம சிங்கை செய்தித்தாள்களில் ஆடியோ ரிலீசுக்குப் பின்னால் அவுட்லைன் குடுத்து இருந்தாங்களா... அதிலே கொஞ்சம் மசாலா சேர்த்து... ஹி ஹி...


2. இந்த மாதிரிப் படம் எங்கேயோ பார்த்து இருக்கோமேன்னு நீங்க நினைத்தால்... Check out for 'Hitch'...

சென்றிடுவீர் எட்டுத் திக்கும்; கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்!!
 
கமல் இதை நன்றாகவே கடைபிடிக்கிறார் - ஆனா, HITCH கலையா, இல்லை செல்வமா என்று தெரியவில்லை?

Saturday, November 6, 2010

தலைவரின் பேட்டி!

தீபாவளி அன்று நடந்த TV Spamக்கு ஏற்றார்போல் ஏதாவது பில்டர் (அதாங்க, வடிகட்டி) வைத்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது.

நல்ல வேளை, சென்னையில் இல்லை! பொன் முட்டையிடும் திரைத்துறையை எவ்வளவு நாள் உயிரோடு வைத்திருப்பார்கள் என்று தெரியவில்லை! இதைத்தான் பிரகாஷ்ராஜ் 'சிங்கம்' படத்தில் வேறு எதற்காகவோ சூர்யாவிடம் ஜெர்க் விடுவார்... (அதையும் சிங்கை அலைவழியில் நேற்றுதான் காட்டினார்கள்!)

ரசித்த மூன்று நிகழ்ச்சிகள்...

1. விஜயில் 'நீயா? நானா?'


வெற்றிக்கு உழைப்பு முக்கியமா? அதிர்ஷ்டம் முக்கியமா? என்ற அரத பழசான தலைப்புதான் - வந்திருந்த அனைவரும் ஏதோ ஒரு வகையில் திரைத்துறையிலும் சின்னத்திரையிலும் கால் ஊன்றியோ, ஊன்றவோ உழைத்துக் கொண்டிருக்கும் கனவான்கள்/பெண்மணிகள். அதிலும் பிரபு சாலமன், அதிர்ஷ்டத்தால் ஒரு வாய்ப்பு கிடைக்கலாம்; ஆனால் அதுவே நிரந்தர வெற்றி தராது என்று கூறி தன்னுடைய மைனா படத்தின் மூலம் தான் மீண்டும் ஒரு பெரும் சக்தியாக வருவேன் என்று தன்னம்பிக்கையுடன் கூறியது கேட்டு லேசாக மயிர்கூச்சல் எடுத்தது என்னவோ உண்மைதான்!

(கவலைப்படாதீங்க பிரபு! முதல் குடும்பத்தினைச் சேர்ந்த யாரோதான் அந்தப் படத்தை வாங்கியிருப்பதாகக் கேள்விப்பட்டேன்...ஸோ...)

2. அதே விஜயில் சித்தப்பாவுடன் அனு நடத்திய நல்ல ஒரு உரையாடல்

திரும்பவும் உங்களை மாதிரி உண்டா? கமல் ஒரு சகாப்தம்; கமல் ஒரு பல்கலை கழகம்; அவர் ஒரு டுடோரியல் காலேஜ் என்ற ரீதியில் முதுகு தட்டல்கள் (சொரியல்கள்?) இருந்தாலும், கமல் தன்னுடைய கருத்துக்களை வழக்கம் போல பாமரர்களுக்குப் புரியாமல் பேசினார், பேசினார், பேசிக் கொண்டே இருந்தார்.

பாலச்சந்தர் என்கிற தயாரிப்பாளர், கமல் கால்ஷீட் வேண்டுமோ என்னமோ தெரியவில்லை, வருஷத்துக்கு ரெண்டு படம் பண்ணேன் என்று விண்ணப்பித்தார்.

கடைசியில் காந்தியைப் பற்றியும் (டெல்லியில் அந்தப் பச்சைக் கிணற்றில் அவரைத் தேடாதீர்கள்!) ஆத்திக நாத்திகம் பற்றியும் (மதம், செக்ஸ் மாதிரி; வீட்டுக்குள்ளேயே இருக்கட்டும்!) அவர் கூறிய கருத்துக்களைக் கூறினாலும், கலைஞரின் உரை கேட்டு 'வேணாம் நான் அழுதிடுவேன்' என்ற ரீதியில் ஜல்லி விட்டது கேட்டு ஹ்ம்ம்ம் என்று கருத்துச் சுதந்திரம் பற்றி பெருமூச்சு விட முடிந்தது.

(By the way, பச்சைக் கிணறு = நாடாளுமன்றம்... நான் முன்னாடியே சொல்லலை?)

3. சன் வழங்கிய எந்திர தீபாவளி

படத்தை எப்படி எடுத்தார்கள் என்று இரண்டரை மணி நேரம் காட்டிக் காட்டி இன்னும் கொஞ்சம் எந்திரன் ஜூஸ் பிழிந்தார்கள். அருமையாக இருந்தது என்பதைவிட பொறுமையைச் சோதிக்கவில்லை என்பதே மிகப் பெரிய வெற்றி.

அதைத் தொடர்ந்து தலைவரின் பேட்டி. சன் டிவி அடிக்கடி 'இந்தியத் தொலைக்காட்சிகளைல் முதல் முறையாக', 'உலகத் தொலைக்காட்சிகளில் முதல் முறையாக' என்று பல முறை எது எதற்கோ விட்ட உதார்கள் அனைத்தையும் இந்தப் பேட்டிக்கு விட்டிருக்கலாம்.

எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து ரஜினியின் இவ்வளவு நீள பேட்டி எதிலும் படித்ததில்லை, பார்த்ததில்லை. 

சிவாஜிராவும் சிம்பிளாக வரிச்சட்டை, ஜீன்ஸ், (பாபா?) படம் போட்ட கைக்கடிகாரம், ருத்திராட்ச மோதிரம் என்று வந்திருந்தார்.
எந்திரன் பற்றிய ரெகுலர் கேள்விகளுக்கு சம்பிரதாயமாக கலாநிதியையும் சங்கரையும் புகழ்ந்தார்.

இருந்தாலும் திட்டமிடுதல் பற்றிய அந்தக் குட்டிக் கதை சூப்பர்! பின்னர், என்னதான் இந்தியர்கள் புத்தாக்கத்தில் பிஸ்தா என்று பீலா விட்டாலும், டிசிப்ளினில் ஜீரோ என்று அவர் கூற, அதற்கு விஜய் ஆனந்த் 'நீங்க ரொம்ப டிசிப்ளின் ஆச்சே!' என்று ஐஸ் வைக்க, அதற்கு ரஜினி தன்னையும் அறியாமல் 'அதனாலதான் இங்க இருக்கேன்' என்று கூற... நைஸ்!
 

ரிக்கி பாண்டிங்கிடம் எது அவர் ஆடியதிலேயே கஷ்டமான பந்து என்று கேட்டால் 'அடுத்த பந்து!' என்று கூறுவார். அது போல ரஜினியும், ஒரு நடிகனோ, கலைஞனோ அவனுடைய ஒவ்வொரு படமும் முதல் படம் போலத்தான் என்று கூற, நேற்றைக்குரிய வாழ்க்கைக் கல்வி முடிந்தது.

எப்படி சார் இவ்வளவு வேகம் என்று கேட்டால், வெள்ளந்தியாக, 'கண்டக்டராக இருந்த போது கூட எவ்வளவு கூட்டமாக இருந்தாலும் நூறு டிக்கெட் கொடுக்கணும்னாக்கூட பத்தே நிமிஷத்துலே கொடுத்து இந்த பக்கத்துலே போய் அந்த பக்கத்துல வந்திடுவேன்' அப்படியன்னு ரஜினி சொன்னவுடன் வந்த வார்த்தை, 'தலைவா!' 

முத்தாய்ப்பாக, 'சார்! உங்களுக்காக ஒரு சிறப்பு பரிசு!' என்று விஜய் ஆனந்த் ஒரு மெகா பில்டப் கொடுத்துப் பின் சட்டென்று பாய்ந்து தலைவரின் கன்னத்தில் ஒரு 'பச்சக்' வைக்க...அவர் ஜென்மம் சாபல்யம் அடைந்து விட்டது என்று சித்ரகுப்தன் ஈமெயில் அனுப்பியதாகக் கேள்வி.... 

பி.கு. எந்திரனில் அந்த கருப்பு ஆடு 'மே...' நடிப்பைப் பற்றிக் கேட்டவுடன், பதில் சொல்லும் முன்னர், ரஜினி, 'Liked it?' என்று ஒரு குழந்தையை மாதிரிக் கேட்க, அதற்கு 'Yes, very much!' என்று சொன்னவுடன் அவர் கண்ணில் மின்னிய ஒரு கண நேரப் பெருமை... ஆயிரம் கோடி கொடுத்தாலும், கலைஞனுக்குக் கிடைக்கும் கைத்தட்டல்தான் மிகப் பெரிய செல்வம் என்று மீண்டும் நிரூபிக்கப்பட்டு விட்டது!

Tuesday, October 19, 2010

உயிரின் மதிப்பு?

கடந்த சில பல நாட்களாக (வாரங்களாக!) நடந்த உலக நடப்புகளில் உயிரின் மதிப்பை ஒட்டி நடந்த சில நிகழ்வுகள் பற்றிய பார்வை:

முதலில் பாஸிடிவ் செய்தி:


Trapped miner Edison Pena arrives at Copiapo hospital for a full checkup after he was rescued from the San Jose mine October 13, 2010. REUTERS/Mariana Bazo* 33 சிலே சுரங்கத் தொழிலாளிகள் 69 நாட்கள் தரைக்கு அரை கிலோமீட்டருக்குக் கீழ் சிக்கித் தவித்து வெறும் சாக்லேட் பானம் அருந்தி, கொஞ்சூண்டு பிஸ்கெட் சாப்பிட்டு, உடற்பயிற்சி செய்து, ஆஸ்பிரின் சாப்பிட்டு, கடைசியில் ஓக்லீ கூலிங் கிளாஸ் அணிந்து வெளியே வந்த போது, மனித உயிரின் மதிப்பை அறிய முடிந்தது. 

முக்கியமாக நாசா அணியினர் வடிவமைத்து அளித்த அந்த ஸ்பெஷல் வண்டி! சந்திரனுக்கு விட்ட(விடப் போகும்) நூறு ராக்கெட்டுக்குச் சமம்!

(ஆமா! கோல் இண்டியா IPOவுக்கு அப்ளிகேஷன் போட்டாச்சா?)


* ஜப்பானுக்கும் சீனாவுக்கும் இடையே நடைபெற்றுக் கொண்டிருக்கும் மீனவப்பிடி சம்பவத்தைப் பார்த்தால்...

நம் தென்கிழக்குக் கடலோர மாவட்டங்களிலிருந்து சாண் வயிற்றுக்காக கடலில் சென்று மீன் பிடிக்கச் செல்லும் மக்களை, இலங்கை கடற்படை 'டேய், இன்னிக்கு செவ்வாய்க்கிழமை! வா! போய் கொஞ்சம் தமிழ் நாட்டு மீனவர்களைப் பிடித்து வைத்து விளையாடலாம்!" என்று ஏதோ வஞ்சிரம் பிடிப்பது போலக் கைப்பற்றி, படகை உடைத்து, வலையைக் கிழித்து, மொத்தத்தில் அக்கிரமம் செய்தது குறித்து அரசியல் கட்சிகள் அறிக்கை விட்டு, அம்மக்கள் மாக்களாக பத்து நாட்கள் கழித்து பதைபதைக்கும் குடும்பத்தை அடைந்தது கனமாக மனதில் நிழலாட, மனித உயிரின் மதிப்பற்றதன்மையை அறிய முடிந்தது.* துரித உணவகத்தில் உண்டால் துரிதமாக மருத்துவமனைக்கும் பின்னர் அதைவிடத் துரிதமாக நம்மைப் படைத்தவனையும் பார்த்து விடுவீர்கள் என்று நம் பாட்டி முதல் நேற்று வந்த மால்கம் ஸ்பர்லாக் (Malcolm Spurlock - Super Size Me)வரை எல்லோரும் கதறித் தீர்த்துவிட்டார்கள்.

இப்போது அதைத் தூக்கிஅடிக்கும் விதமாக மெக்டோனல்ட்ஸில் வாங்கிய ஒரு பர்கர் (இரண்டு ரொட்டித் துண்டுகளுக்கிடையே வட்ட வடிவ மாமிசத் தட்டு!) கடந்த - அதிகமில்லை ஜெண்டில்மேன், ஆறு மாதங்களாக அப்படியே இருக்கிறதாம். 'ஙே!'

ஒரு புழு பூச்சி காளான் எதுவும் அண்டவில்லை என்றும், முதல் இரண்டு நாட்களுக்குப் பிறகு வாடை கூட அடிக்கவில்லை என்றும் இந்த கலைப்பணியை (?) செய்துள்ள அம்மையார் தெரிவித்துள்ளார்.

இத்தகைய உணவு வகைகளைச் சாப்பிட்ட பின் அதை செரித்து வெளியே தள்ளும் நம் குடல் நிஜமாகவே 'கல்க்குடல்' தான்! முன்னொரு காலத்தில் மேலே சொன்ன அதே பாட்டி, 'சின்னப்பசங்க நீங்க, எதைத் தின்னாலும் செரிக்கணும்!'னு சொன்னது ஞாபகத்துக்கு வருகிறது.

நம் உயிருக்குக் கண்டிப்பாக மதிப்பே இல்லை :-))

எந்திரன் புயல் இன்னும் முடியவில்லை என்றும், அந்தப் புயலே பிலிப்பைன்ஸ் நாட்டை மெகி என்ற பெயருடன் தாக்கிக் கொண்டிருப்பதாகவும் நம்பத் தகுந்த வட்டாரங்களிலிருந்து செய்தி.  - கண்டிப்பாக நம்ம சன் டிவி ஸக்ஸ் சொல்லலீங்க!


உயிரா? அப்பிடின்னா?

Monday, October 4, 2010

ஏகாம்பரத்தின் பார்வையில் எந்திரன்!

Once you read this, you might want to check the english review here, thus showing that everyone of us is schizophrenic at some level :-))


என் உயிரினும் மேலான பாயும் புலி ரஜினி தலைவனுக்கு,


ராயபுரம் 'ரஜினி' ஏகாம்பரம் எளுதிக்கறது.

நானும் என் குடும்பமும் நல்லா இருக்கோம்.

அங்க அண்ணி லதாம்மாவும், தங்கச்சிங்க ஐசுவரியாவும் சௌந்தரியாவும் நல்லா இருக்காங்களா?  கொளந்த சௌந்தரியா கல்யாணத்துக்கு நம்ம யாரையுமே கூப்பிடல. பரவாயில்ல. நீதான் எவ்வளவு எங்களுக்கு செஞ்சிருக்கே... இது என்னா பெரிசு?

அது போவட்டும்...

அதுக்கு பதிலாத்தான் 'எந்திரன்' குடுத்திருக்கியே...

சிவாஜிக்கு அப்புறம் ரொம்ப ஆசை ஆசையா காத்திருந்தோம். நேத்து வந்தவனெல்லாம் சுறா, எறான்னு பிகிலு வுடும்போது, நீ மட்டும் ரெண்டு வருசமா காணோமா, ரொம்ப பேஜாரா பூடிச்சு. நடுவுல அந்த குசேலன் வேற, இன்னும் உசுப்பேத்திடுச்சி.

ஆனா வெயிட் பண்ணதுக்கு தகுந்த மாதிரி சூப்பர் படம் குடுத்துட்ட தலைவா!


ஒரு நிமிசம் இரு... இந்த கை ஒரே வலி... 

அது வேற ஒண்ணியும் இல்ல...

வியாளக்கிழம நம்ம ஆல்பட் தியேட்டர்ல உன் கட் அவுட்டுக்கு பால் அபிசேகம் செய்யச் சொல்லோ, கொஞ்சம் வழுக்கி வுயிந்திட்டேன். வூட்டுல ஆத்தா 'டேய்!  புத்தூருக்குப் போயி கட்டு போட்டுட்டு வாடான்னு' அளுவுது. நீ வேற அம்மா சொன்னாக் கேக்கணும்னு சொல்லிக்கீறியா... தோ, நாளக்கி நம்ம சிட்டிப்பயல போய் மூணாவது தபா பாத்துட்டு போலான்னுகீறேன்.

ஆனா, படம் டாப் டக்கருப்பா...

உன் தாடி என்ன? சிட்டியா வந்து கருணாசையும் சந்தானம் பயலையும் கலாய்க்கிறது என்ன? சூப்பரு தலைவா!

அப்பறம் நம்ம ஐஸுக்கிட்ட 'நான் குடுத்த முத்தம்லாம் தா'ன்னு சொல்றது பழசுன்னாக்கூட ஷோக்குதான்...

ஆமா! உன் கைக்கு என்னாச்சு? நம்ம சிட்டி ரோபோவுக்கு கண்ணாடி மாட்டச்சொல்லோ அந்த மாதிரி தடவுன? எங்களுக்காக ரொம்ப உழச்சிட்ட தலைவா! இமயமலைக்கு போயி கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துட்டு வா!

நீயும் ஐஸுவும் நம்ம சேரிக்குள்ள வந்தப் பின்னால நம்ம எல்லயம்மா கணக்கா எல்லா பொருளையும் வச்சிட்டு போஸ் குடுத்த உடனே லேடீஸ் எல்லாம் கொலவை கொட்றது படா தமாஸு!

அது என்னா தலைவா? சங்கரு படத்துல யாராவது துணி இல்லாம இருக்கணுமா? பாய்ஸு, முதல்வன், இப்போ எந்திரன்... ஆனாலும் அந்த பேமானி போரா, உன்கிட்ட டகல்பாஜி காட்டும் போதே அவன நாலு தட்டியிருக்கணும்... அடுத்த தபா கவுனிச்சிக்கோ என்ன?

அந்த ட்ரெயின் சண்ட பாத்து என் உடம்பெல்லாம் மயிர் கூச்சாலாயிடுச்சிப்பா! அதுவும் நீ அந்த ட்ரான்ஸ்பார்மர்ல கை வச்ச உடனே எனக்கு ஷாக்கு! அப்புறம் நம்ம கோபாலுதான் சொன்னான்.. நீ மெசினுன்னு... என்னா நடிப்பு!!

இன்ட்ரோலுக்கு அப்பால, நீ ஐஸுவுக்கு சைடு கட்டலான்னு பாக்கறப்போ, ஒரே குஜால்தான்... அதுவும் ஒரு ரஜினிக்கே சிங்கி அடிச்சிக்கிட்டு இருந்த எங்களுக்கு ஒரே சமயத்துல 100 ரஜினி பார்த்தா எப்படி இருத்திருக்கும்... டாஸ்மாக் கடையே வீட்டுக்குள்ள வந்தா மாதிரி ஒரு கிக்கு!

அதுக்கு அப்பால நம்ம சங்கரு உன்ன வச்சி பாம்பு மாதிரியும், ராட்சசன் மாதிரியும், பெரிய சுவர் மாதிரியும் காட்டுனது ஒரே மெரசலாயிடுச்சி! படத்துக்கு முன்னால நானும் கோபாலும் அடிச்ச ரெண்டு குவார்ட்டர் மப்பும் அப்படியே இறங்கிடுச்சின்னா பார்த்துக்கோயேன்...

அப்புறம் சிட்டிய உன்னோட கம்ப்யூட்டர் நாலட்ஜி வச்சி 'மேட்டர் ஓவர்' பண்ணதுக்குப் பிறகுதான் எங்களுக்கு மூச்சு வந்துச்சி... எப்போ கம்ப்யூட்டர் படிச்சே, தலைவா?

போட்ட குவார்ட்டர்லாம் வேல செஞ்சிடுச்சா? அதுனால பாட்டுங்களை எல்லாம் ஒளுங்கா பார்க்க முடியல. ஆனாலும், 'அரிமா, அரிமா' பாட்டுக்கும் 'கிளிமஞ்சாரோ' பாட்டுக்கு மட்டும் அடக்கிட்டு உட்கார்ந்திட்டேன்னா பாரேன்!
ஆனாக்கூட நம்ம சிட்டிப்பயல், ஆடு மாதிரி சிரிக்கறது, 'ரோபோடா' அப்படின்னு ரவுசு வுட்ரறது எல்லாம் 'கமாய் பத்னி ரைட்டு!!'


கடோசில, நீயே உன் கை, கால் எல்லாம் உடைச்சி வைக்கும் போது, அப்படியே போய் ஸ்க்ரீனை கீசிடலாமான்னு தோணிச்சி.. நம்ம கோபாலுதான், 'டேய் ஏகாம்பரம், அது மெசினுடா'ன்னு சொன்னான்.

அதான் இல்ல?

யோசிச்சுப் பார்த்தா, அதான் தோணுது.

நீ பாஷாவுல, ஆனந்தராஜை மொதல் தடவயா போட்டுத் துவைக்கும் போது நானே அவனை நாஸ்தி பண்றாமாதிரி இருந்திச்சு!

அண்ணாமலைல, 'மலைடா, அண்ணாமலை' அப்படின்னு ராதாரவிகிட்ட பிலிம் காட்டும் போது, நானே அந்த ஹோட்டல் முதலாளி ஆயிட்ட மாதிரி இருந்திச்சி!

ஏன், நம்ம பாபாவுல, 'பாபா, கவுண்டிங் ஸ்டார்ட்ஸ்'ன்னு நீ சொல்லும்போது, என்னா சொல்றன்னு புரியலேன்னா கூட, தியேட்டர்ல உன்னோட சேர்ந்து எல்லாரும் ஒண்ணு, ரெண்டு,மூணு சொல்லியிருக்கோம்!

இதோ, இந்த சங்கரு எடுத்த சிவாஜியில நீ 'கண்ணா! பன்னிங்கதான் கூட்டம் கூட்டமா வரும்! சிங்கம் சிங்கிளாத்தான் வரும்'னு சொல்லி எங்க வயித்தில பீர் வார்த்தியே, அது பஞ்ச் டயலாக்!

எந்திரன் சூப்பர்தான். புத்தூர்ல கட்டு போட்டுகிட்டு இன்னும் ரெண்டு தபா பார்த்திடுவேன். என்ன? வூட்டுல கொஞ்சம் குண்டான்லாம் அடகு வெக்கணும். அதுக்கென்னா, உன் படம் பார்க்க இது கூட செய்யலயின்னா எப்படி? அது தாண்டி, நம்ம கலைஞர் இருக்கும் போது என்னா கவலை? சன் டிவி காட்டியே நம்ம வயித்த ரொப்பிடுவாரு இல்ல?

ஆனா பாரு, நடுவுல கொஞ்சம் டாஸ்மாக் இல்லாதவே தூக்கம் வருது. இந்த விஞ்ஜானி எல்லாம் ஒரே ப்ரைம் நம்பரு, பிபோனக்கியா - அது என்னா கருமாந்தரமோ தெரியல, ஒரே கொட்ச்சலு :-(

கொஞ்சம் புரியறாப்போல, 

'நம்ம நமீதா இடுப்பு சைசு என்ன?' 
'பிரபு தேவாவும் நயன் தாராவும் கண்ணாலம் கட்டிக்குவாங்களா?' 
'அடுத்த தபா எலீக்சன்லே ஒரு ஓட்டுக்கு எவ்வளவு துட்டு தருவாங்கோ?

இப்படி நல்ல ஜெனரல் நாலட்ஜி கேள்வி கேட்டிருந்தா நல்லா இருந்திருக்கும்... நானும் தூங்கியிருக்க மாட்டேன்...

ஆமா? அது என்னா ஆ, ஊன்னா 'டெர்ரா, ஜெட்டான்னு' ஏதோ சொல்லிக்கினே இருந்தியே! படா ஷோக்குப்பா! அதெல்லாம் தானா வர்றது இல்ல!


அதுனாலதானோ என்னாவோ இங்கிலீஷு படம் பார்க்கறாமாதிரியே இருந்துது... வெள்ளக்காரன் படம்ன்னாக்க பலான சீனு ஒண்ணு ரெண்டு இருக்கும் - உன் படமாச்சே, அதெல்லாம் எதிர்பார்க்கக் கூடாது.... தப்பு, சாமி கண்ணக் குத்திடும்...


ஆக மொத்தம், சங்கரு உன்ன அவன் படத்துல நடிக்க வெச்சிட்டான். நாங்களும் எங்களால முடிஞ்ச அளவுக்கு படத்துக்கு துட்டு சேர்த்துட்டோம். பாவம்! நீ கூட படத்துக்கு சம்பளம் வாங்கலியாம்! நம்ம கோபாலுதான் தந்தியில படிச்சு சொன்னான்...

பொண்ணுக்கு கண்ணாலம் செஞ்சிருக்கே!
ரெண்டு வருசம் ஒரு படம் நடிச்சு அதுக்கு டப்பு வாங்கல!
தலைவா! உன் தியாகமே, தியாகம்!

முடிக்கிறதுக்கு முன்னாடி ஒரு சின்ன சந்தேகம், தலைவா! தப்பா நெனச்சுக்காதே...

நம்ம கோபாலுதான் சொன்னான்... நீ என்னவோ அரசியலுக்கு வரவே மாட்டியாம். உனக்கு துட்டுதான் முக்கியமாம். அத்தோட நாங்கள் எல்லாம் அம்பேல்தானாம்...

உண்மையா தலைவா?

நீ 'உம்'னு சொல்லு... உடல் மண்ணுக்கு, உயிர் உனக்கு, கோட்டை நமக்கு!

உடம்பை பார்த்துக்கோ தலைவா! ரொம்ப சிகரெட் பிடிக்காதே! சீமை சரக்காவே சாப்பிடு!

இப்படிக்கு - டாஸ்மாக் கடை 916லிருந்து
உனக்காகவே உயிரோடு இருக்கும்,
ராயபுரம் ஏகாம்பரம்.

Saturday, September 18, 2010

எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்... (அல்லது) முப்பது நாளில் 150 கோடி செய்வது எப்படி?

எந்திரன் 3000 தியேட்டர்ல ரிலீஸ் செய்யராங்களாம்... 150 கோடி செலவு ஆச்சாம்.

அட சங்கரு... அம்புட்டு பணத்துல பாலம் கட்டுனியா? இல்ல ரோடு போட்டியா? ஓ! ரெண்டும் இல்ல, ஒரு மிசினு படம் காட்டுரியா? சரி, சரி...

1000 பிரிண்டு போட்டுருக்காகளாம்.. ஒரு தியேட்டர்ல 200 பேரு, தலக்கி 40 ரூவா குடுத்து 'கிளிமஞ்சாரோ' பார்த்தா...முப்பதே நாள்ல போட்ட பணத்த எடுத்திடலாம்...

நான் கணக்குல கொஞ்சம் வீக்கு. ஒரு நாள் முழுக்க எட்டு ஷோ ஓட்டி பத்தே நாள்ல 200 கோடி கூட பண்ணுவாங்களா இருக்கும்... அதான் நம்ம தலவரே 'எட்டு எட்டா வாழ்க்கையப் பிரிச்சுக்கோ'ன்னு சொல்லியிருக்காருல்ல!

இதத் தவிர தெலுங்குல வேற நம்ம ரோபோ மாட்லாடுவாரு; இந்தில ரொம்ப பஹூத் போல்தா ஹை செய்வாரு...

ஆனா படம் பண்டல் ஆயிடுச்சின்னா, அப்பறம் தலவர் ராகவேந்திரா மண்டபத்தை விப்பாரா, இல்ல K கொஞ்சம் ஷேர் விப்பாரான்னு தெரியாது...

பை தி வே, படம் பாட்டு கேட்டீங்களா?

என்ன ஒரு வறட்சி?

ரஹ்மான் டியூன் எல்லாம் இறைவன் மேல பாரத்தப் போட்டு எளுதியிருக்கிறதாத் தோணுது.

சரி அதுதான் போவட்டும், ரெண்டு பாட்டுல ஒரே மாதிரி லிரிக்ஸு...

"ரோபோவே போ போ"ன்னு ஒரு பாட்டுல ஒலக அளகி பாடராங்களா... இன்னோரு பாட்டுல நம்ம மிசினு "ரோபோவ போ போன்னு சொல்லாதே"ன்னு பதில் சொல்லுது... அட ராவணா?!

அதுக்கும் மேல, நம்ம மக்களுக்கு சயன்ஸுன்னாலே நியூட்டன் விட்டா யாரையும் தெரியாது போல (சரி சார்! ஐன்ஸ்டைன், அசிமோவ் அவிய்ங்களும் ஒரு பாட்டுல வராங்க!)... ஆனாக்க, நம்ம ஆப்பிள் நியூட்டன் மட்டும் ரெண்டு பாட்டுல வராரு.. எனக்குதான் கொஞ்சம் டவுட்டு ஆயிடுச்சி... என்னடா அதே பாட்டக் கேக்குறோமான்னுட்டு.

சிவாஜில 'சஹானா' பாட்டு கொஞ்சம் மெலடியா இருந்திச்சி... இதுல எதுன்னு கேட்டா நம்ம வீட்டுப் பையன் 'காதல் அணுக்கள்' பாட்டுப்பா, அப்புடீன்னான்...

அட மக்கா! அத மெலடின்னு சொன்னா 'நாக்க முக்க' கூட மெலடிதாண்டா!

பாலையா 'திருவிளையாடல்' பட்த்துல சொன்னா மாதிரி...
"என்னடா இது மதுரைக்கு வந்த சோதனை???"

Tuesday, April 13, 2010

வங்கம் வென்ற விசயர்கள்!உடன்பிறப்பே!

கடும் கழகப் பணிகள்
நெடும் நாட்டுப் பணிகள்
இவற்றுக்கு இடையே
நான் படும் அவதிகள்
இவற்றையெல்லாம் மூட்டை கட்டி
வாருங்கள் சேப்பாக்கத்திற்கு என்று
அழைத்துச் சென்றனர் தம்பிகள்
துரைமுருகனும் நேருவும்.

உனக்குத் தெரியும், உடன்பிறப்பின் வேண்டுகோளை
என்னாளும் நான் தட்டுவதில்லை என்று.

அதுவும் கிரிக்கெட் ஆட்டம்...
நம் தமிழரின் கில்லி விளையாட்டினை அப்படியே ஒட்டி எடுத்தது
என்பது உள்ளங்கை நெல்லிக்கனியாம்.

பின்னாளில் திருக்குவளையிலும் அதைச்
சுற்றி உள்ள காடுகளிலும் நாம் கில்லி விளையாடியதை
இன்று எண்ணிட்டாலும் தெவிட்டா இன்பம்தான்.

அம்பேத்கர் பிறந்த நாளுக்கு முதல் நாளில்
சன் அலைவரிசையின் 17ஆம் ஆண்டு விழாவுக்கு முதல் நாளில்
அவற்றைக் கொண்டாடும் வண்ணம் அருமையான ஆட்டத்தை
சென்னை மக்கள் மகிழக் கொடுத்த பெருமை
எனக்குத் துணை நில்முதல்வருக்கே!

ஆட்டம் தொடங்கிய ஐந்து ஓவரிலேயே
அஞ்சா நெஞ்சன் அசுவின்
வீழ்த்தியது மூன்று வங்காளிகளை!

ஆனால் நடுவர் சைமன் செய்ததோ
மூன்று தவறுகளை!

பின்னால் வந்த சுரேசனும் விசயனும்
சென்னைக்கு ஈட்டித் தந்ததோ
அருமையான இரு புள்ளிகளை!

இருப்பினும் நண்பர் அர்சாவுக்கும்
தானைத் தலைவர் தோணிக்கும்
இந்தத் தமிழன் கூறிக் கொள்வது
ஒன்றுதான்!

நாளை (ஏப்ரல் 14) தமிழ்ப் புத்தாண்டல்ல!

அண்ணாவின் வழிவந்து
தமிழர் திருனாளாம்
பொங்கலையே
எல்லா தமிழரும்
புத்தாண்டாக ஏற்று
ஆண்டுகள் பல ஆகிவிட்டது!

பிரபவ, விபவ என்று
வடமொழிச் சொற்களையிட்டு
அதையே தமிழர் புத்தாண்டு
என்று கொணர்ந்தனர்
ஆரியப் பிரகிருதிகள் அன்று.

ஆனால் அதை எல்லாம்
தமிழன் மறந்து,
இரண்டு ரூபாய் அரிசி,
அடுத்த வருடம் இலவச வீடு,
கண்மணிகளின் கட்டாயத்தில் என் பெயர் இட்ட
கலைஞர் காப்பீட்டுத் திட்டம்
என்று உழைத்து வாழ்கிறான்...

எல்லாவற்றிடினும் மேலாக,
நம் நல்லாட்சியின் பயனாக
கிடைத்த இலவசத் தொலைக்காட்சியின்
வழியாக இன்றைய
வெற்றியை நீ பசிமறந்து
பார்த்திருப்பாய், ரசித்திருப்பாய்,
களித்திருப்பாய், சிரித்திருப்பாய்!

ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்கிறேன்
என்ற அந்தத் தலைவன் அதோ
சேப்பாக்கத்தினின்று கூப்பிடு தூரத்தில்
உறங்குகிறான்.

நீ உறங்கிடாதே! அடுத்த இடைத்தேர்தல்
வருகிறது!
வெற்றி சுலபம் என்று எண்ணாதே!
ஓட்டுக்களை எண்ணு!
நோட்டுக்களை எண்ணு!

கழகத்தின் களப்பணியாளர்களே!
கடமை அழைக்கிறது!

அடுத்த சென்னை வெற்றிக்குக்
கடும் உழைப்பைக் கொடுத்து
கனிவெற்றியைக் கவர்ந்திடுவோம்!
தமிழர் மானத்தைக் காத்திடுவோம்!

அன்புடன்,
மு.க.