Tuesday, December 11, 2012

வாழ்வின் விகிதங்கள் (Life of Pi Review)

(You may also want to read the English review)
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்

இறைவன் அடிசேரா தார்.

ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நம்ம வள்ளுவர் சொன்னதை நிறைய புலி, கொஞ்சம் வரிக்குதிரை, நிறைய கடல், சின்ன படகு, ரகவாரியாக மீன், காது கொள்ளாமல் தத்துவம் என்று திரு. ஆங் லீ கண்கவர் வண்ண ஓவியமாக வழங்கியிருப்பது: பை படேலின் வாழ்க்கை (Life of Pi).
From NewYorker

 கதை: பாண்டிச்சேரியிலிருந்து வெளிநாட்டுக்கு ஒரு மிருகக்காட்சி சாலை கிளம்புகிறது – அதன் சொந்தக்காரக் குடும்பம் உட்பட. அதில் நம் கதாநாயகன் பை படேலும் அடக்கம். நடுக்கடலில் புயல். உறவுகளை இழந்த பை, படகில் தப்பிக்கிறான். படகில் நான்கு மிருகங்களும் கூட – வரிக்குதிரை, மனிதக்குரங்கு, கழுதைப்புலி, மற்றும் புலி. புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது. அதனால், மற்ற மிருகங்கள் காலி. பைக்கு புலி மேல் பயம். பக்கத்தில் சின்ன படகில் தஞ்சம். பின்னர் சிறிது சிறிதாக இரண்டு பேரும்(?) ஒரு பரஸ்பர அவநம்பிக்கை மற்றும் பயம் கலந்த எழுதப்படாத உடன்படிக்கையின்படி கடல் கடந்து நிலத்தை எப்படி அடைகிறார்கள் என்பதை வெள்ளித்திரையில் காண்க!

பிடித்த எட்டு:

1   இந்த மாதிரிக் கதைகள் வழக்கமாகப் புத்தகமாக வரும். இதுவும் அப்படித்தான். யான் மார்டெல் எழுதிய இந்தப் புத்தகம் ஒரு சூப்பர் டூப்பர் ஹிட் என்று பட்டி தொட்டிகளில் எல்லாம் முழக்கம் இடப்பட்டது. அதே சமயம் அப்புத்தகத்தை திரைப்படமாக ஆக்க முடியாது என்பதும் ப.தொ.எ.மு.இ. அதை எல்லாம் தாண்டி ஒரு இரண்டு மணி நேரம் நம்மைக் கட்டிப் போட்டமை ஒரு சிறிய சாதனை!

2.   அது என்ன மாதிரி ஒளி/ஒலிப்பதிவு சார்? கூண்டுக்குள் அந்த புலி நடந்து வரும் போது அதன் மெல்லிய காலடி ஓசையின் நுணுக்கம், நடுக்கடலில், இரவில், மாபெரும் திமிங்கிலம் பாய்ந்து வரும் வண்ணக்கோலம், அந்தப் பாசித்தீவின் பற்பல ஜகஜ்ஜோதியான காட்சிகள்…முடியலே!

3.   பாம்பே ஜெயஶ்ரீயின் நெஞ்சை உருக்கும் தமிழ்த் தாலாட்டு (சற்று ஏறத்தாழ ‘தென்பாண்டிச் சீமையிலே’வைத் தொட முயன்றது என்றே சொல்லலாம்!)

4.   பைக்கும், ஆனந்திக்கும் இடையே வரும் அந்தப் புதுக்கவிதையான காதல் (அந்தத் தாமரை முத்திரை அபாரம்!)

5.   புஷ்டியாகத் தொடங்கி கடைசியில் நோஞ்சானாக நடந்து போகும் அந்த கிராபிக்ஸ் புலி

6.   படம் முழுதும் விரவிக் கிடந்த மெல்லிய நகைச்சுவை

7.   கப்பலின் புரட்டலால் அவதியுறும் மிருகங்களுக்கு வாழைப்பழத்தில் வைத்து தூக்கமாத்திரை கொடுப்பார்கள். அதுபோல நமக்கும் வாழ்வின் தத்துவங்களை சில/பல காட்சிகளின் வழியே கொடுத்து இருப்பது – பரவாயில்லையே!

8.   கடைசியில் இர்பான் கான் விடும் அந்த இரண்டு துளிக் கண்ணீர்.பிடிக்காத ஐந்து:

1.  அடிக்கடி திரைக்கதையில் வரும் தொய்வு. அதைச் சரிக்கட்ட இயக்குனர் கலர் கலராய் காட்சிகளைக் காட்டி நம்மைத் திசைதிருப்பினாலும்… ம்ஹூம்!

2.   வசனங்கள்! ரஜினி பட பஞ்ச் டயலாக் மாதிரி – விடாமல் வந்து கொண்டே இருக்கின்றன. நன்கு மனப்பாடம் செய்து கொண்டால், ஏதாவது தண்ணி பார்ட்டியில் பீட்டர் விட்டு அலம்பல் செய்யலாம் – முக்கியக் குறிப்பு: இரண்டு பெக் விஸ்கியாவது உள்ளே போயிருக்க வேண்டும் – அப்போதுதான் சீரியசாக எடுத்துக் கொள்வார்கள் J

3.   இது கடவுளைப் பற்றிய படமா, இல்லை தன்னம்பிக்கை பற்றிய படமா என்று அவ்வப்போது எழும் சந்தேகம் – ஒரு வேளை அதுதான் படத்தின் நோக்கமோ என்னவோ?

4.   கிட்டத்தட்ட மூன்று மாதங்களுக்கு மேல் கடலில் இருந்தாலும் பால்மணம் மாறாத பையின் முகம் – நல்ல்ல்ல மேக்கப் சார்!

5.   சில டைரக்‌ஷன் டச் எல்லாம் கொஞ்சம் ஓவர் டைப் – (அந்த பாசித்தீவு ஒரு படுத்திருக்கும் மனிதனைப் போல இருப்பது – மஹாவிஷ்ணு?, “உனக்கு எந்தக் கதை வேண்டும் – கடவுளைப் பார்க்கும் கதைதான் வேண்டும்” என்ற அந்தக் கடைசி காட்சி!...)

மொத்தத்தில் படத்தைத் தராசில் இட்டுப் பார்த்தால் வாழ்க்கையின் விகிதமே மிஞ்சுகிறது. பை படேல்,π (அதுதாங்க, வட்டத்தின் சுற்றளவு / விட்டம்) போலவே பல விகிதங்களின் கலவையாக இருக்கிறான்.
  • தந்தையின் பகுத்தறிவு / தாயின் ஆன்மீகம்
  • புலியிடம் கொண்ட அச்சம் / தைரியம்
  • காதலில் காட்டும் கற்பனை வளமும் / ஆணித்தரமும்
  • கடைசியில் கரைக்கு வந்து அவன் சொல்லும் கதைகளின் (நம்பமுடியாத) உண்மையும் (மற்றவரை நம்ப வைக்க வேண்டிய) நிதர்சனமும்


இப்படிப்பட்ட பை படேலின் வாழ்க்கை நமக்குக் கற்றுக் கொடுக்கும் தத்துவம் நம்பர் 8347 என்னவென்றால்…

வாழ்க்கை முடிவற்றது (π விகிதம் போலவே)
வாழ்க்கை பல்வேறு சமயங்களில் பற்பல மனிதர்களையும் சந்தர்ப்பங்களையும் கொண்டு நம்மைத் தாக்கும்.
சில கொல்லும்; சில கொல்லப்படும்; சில கொல்வதைத் தடுக்கும்; சில தடுக்கக் கொல்லும்.
உன் மனம் வரிக்குதிரையாக இருக்கலாம்; கழுதைப்புலியாக இருக்கலாம்; மனிதக்குரங்காக இருக்கலாம்; புலியாக இருக்கலாம்.
நீ எந்த விலங்காக இருக்கிறாய் என்பது உன் வளர்ப்பைப் பொறுத்து இருக்கிறது.
வாழ்க்கையில் கஷ்டமும் இன்பமும் துக்கமும் மாறி மாறி வரும். ஆனால் எதுவுமே நிரந்தரம் இல்லை.
உன் வாழ்க்கையில் இருந்து எல்லா விலங்குகளும் விலகும்போது நீ பேரின்பம் அடைவாய். (அவை போகும் போது உன்னிடம் ‘போய் வருகிறேன் நண்பா!’ என்று சொல்லாது!)
எப்போதும் கடவுளையும் நம்பிக்கையையும் நம்பு!
ஸோ... மறுபடியும் சொல்லுங்க!: “பிறவிப் பெருங்கடல் நீந்துவர்…”

ஆமீன். ஆமென். ஓம்.

Friday, July 13, 2012

பில்லா - II (இதுக்கெல்லாம் விமரிசனம் தேவையா?)

சரி, சரி... விஸ்வரூபத்தின் முன்னோட்டத்திற்கே ஜல்லி விட்ட நமக்கு இது என்ன ஜுஜுபி!?


படத்துல தலயோட ஒரு வசனம் வரும்:
நல்லவங்கள கண்டுபிடிக்கறது தான் கஷ்டம்!
Actually, அவர் சொல்ல வந்தது... 

நல்ல படங்கள கண்டுபிடிக்கறது தான் கஷ்டம்!


பின் வருவது பில்லா பார்த்துவிட்டு நொந்து போய், ஓட்டலுக்குச் சாப்பிட வரும் ஒரு ';தல' ரசிகனுக்கும், அதைவிட நூடுல்ஸ் ஆன ஒரு சர்வருக்கும் இடையே நடந்த / நடந்து கொண்டிருக்கும் / நடக்க இருக்கும் கற்பனை கலக்காத உரையாடல்!

கதை என்ன தெரியுமா? டேய்! சாருக்கு அல்வா எடுத்துட்டு வா! படத்துல கொடுத்த அல்வா போதாது போல இருக்கு?


நடிப்பு பத்தி... சார்! நம்ம மைசூர் பாக்கு பார்க்குறீங்களா - even அது கூட நல்ல எமோஷன் காட்டும் சார்!


ம்யூசிக் என்னமா இருந்திச்சின்னா... என்ன சொல்றீங்க! இந்த ஆட்டுக்கல் சத்தம் தாங்க முடியல!


சின்ன படம்தாம்பா... இட்லிக்கு உளுந்து மூணு மணி நேரம் ஊறப் போடணும்பா! அப்பதான் மல்லிகைப்பூ மாதிரி இருக்கும்...


செமை ஸ்டைலு... மூணாம் நம்பர் டேபிளுக்கு ஒரு ராக்கெட் தோசை! அது ஸ்டைலு!


என்ன இருந்தாலும் தமிழ் படம் இல்லியா? ஸ்பஸீபா, பழவுஸ்தா... இஸ்வினீட்ஸ் - ஏக் காவ் மே ஏக் கிஸான் ரகுதாத்தா!


கலக்கலான ஹீரோயினுங்க! சாரிங்க, ஊசிப்போன வடைக்கு ஊறுகாய் எல்லாம் தர முடியாது!

டைரக்ஷன்: இதுக்கு முன்னாடி நான் மணி பார்லே வேலைப் பார்த்துட்டு இருந்தேன்.. அதுனால இந்த சாம்பார், நாயகன் சாம்பார் மாதிரி ஆயிடுச்சி! அதுக்கு அப்புறம் அமெரிக்காவுல கூப்புட்டாக! போனா நம்ம தோஸ்த் எல்லாம் 'என்னா மேன் சாம்பார்! இப்ப எல்லாம் ஸூப்புதான்ன்னு சொல்லிட்டாங்க!' அதுனால அவங்களையும் ஓட்டல்ல சேர்த்துக்கிட்டேன்'. என்னா பயபுள்ள எல்லாம் ஸூப்புன்னு சொன்னா உடனே 'யோ பாய்ஸ், சூப் சாங்!'னு சொல்லிட்டு கொலவெறி ஆட்டம் போடறாங்க!

தல போல வருமா? தலக்கறிதான் என்னிக்கும் பெஸ்ட் சார்... ஆனா, ஒழுங்கான மசாலா இல்லாட்டா அதுகூட வேஸ்ட்டு தான்...

எதுக்கும் ஒரு தடவை படத்தைப் பார்த்துட்டீங்கன்னா... "டேய்! என்னோட வாழ்க்கையில ஒவ்வொரு டாலரும், ஒவ்வொரு அம்பது சென்ட்டும், ஒவ்வொரு இருபது சென்ட்டும், ஏன், ஒவ்வொரு பத்து சென்ட்டும் என் ரத்தத்தை சிந்தி சம்பாதிச்சது டா! சதக்! சதக்! டுமீல்! டுமீல்!


மறுநாள் தினத்தந்தி தலைப்புச் செய்திகள்:

சிங்கப்பூரில் பில்லா-II படம் பார்த்துவிட்டு நடந்த கைகலப்பில் வாலிபர் தன்னை மொக்கைக் கத்தியால் குத்திக் கொண்டு, ஓட்டலில் சாப்பிட வந்தவரை பொம்மைத் துப்பாக்கியால் சுட்டதில் இரண்டு பாட்டில் டிங்க்சர் செலவு!

பில்லா ஒண்ணோடவே நிறுத்தியிருக்கணும்! ஹ்ம்ம்ம்...

கொசுறு: ராத்திரி, பையனுக்காக, படத்துல ஏதாவது நல்லது சொல்ல முடியுமான்னு மல்லாக்கப் படுத்து யோசிச்சப்போ ரெண்டு விஷயம் தோணிச்சு: (1) டைட்டிலில் வரும் அந்த Sepia-toned இலங்கை புகைப்படக் கதை (2) கடைசியில் பாக்கி credits போடும் போது யுவன் வரும் அந்த MTV Don, Don பாட்டு! 


தான் ஆடவில்லையம்மா, சதை ஆடுது!!

Sunday, June 10, 2012

விஸ்வரூபம் - முன்னோட்ட விமர்சனம்
விஸ்வரூபம் - முன்னோட்டம் (டிரெய்லருக்கு தமிழாமாங்!) பற்றிய நம் தாழ்மையான கருத்து: (கிளிஞ்சுது!)  • கதக் நடன தாளங்களுக்கு இணையாக மெஷின் துப்பாக்கியின் 'டட்டட்டட்'
  • நடு வகிடு எடுத்த நளினமான கதக் மாஸ்டர் கமல்
  • குண்டு துளைத்தபின் கொப்பளிக்கும் ரத்தத்தின் நுணுக்கம்
  • கமலுக்குப் பிடித்த பிளாஸ்திரி மேக்கப்
  • ஹைடெக் ட்ரோன் (அதுதாங்க தும்பி!)
  • ஆண்டிரியா 'எல்லாருக்கும் இந்தக் கதையில டபுள் ரோல்' என்று சிடுசிடுப்பது...


...வழக்கம் போல ஆர்வத்தைக் கிளப்புகிறது.


கமல் கதையை சிங்கப்பூரில் இதுதான் என்று கோடிட்டுக் காட்டியிருக்கிறார். ஆனால் அதை நம்புவது மண்குதிரையை நம்பி ஆற்றில் இறங்குவது போலத்தான். மன்மதன் அம்பு கதையையும் இப்படித்தான் சிங்கையில் 'அவுட்' செய்தார். ஆனால் சொன்னது ஒன்று திரையில் வந்தது வேறு.

எனினும் நம் கதை அட்டெம்ப்டு, இதோ...

கதக் மாஸ்டர் விஸ்வம் (விஸ்வநாத், விஸ்வேச்வரன், விஸ்வக்சேனன்) எப்படி இந்தியாவின் சிறந்த உளவாளி மற்றும் கமாண்டோக்களில் கமாண்டோக்களின் ஒருவராக இருந்து அமெரிக்காவையும் உலகையும் காப்பாற்றுகிறார் என்பதை வெள்ளித்திரையில் காண்க!

(அதுக்கு எதுக்கு அமெரிக்கா போகணும்? அப்பதானே இந்தியா கலையிலும் சரி, கொலையிலும் சரி வல்லரசு என்று காட்ட முடியும்!)

- பூஜா 'நீங்க நல்லவரா? கெட்டவரா?' என்று கேட்பது கொஞ்சம் நகைப்புக்கு உரியதாக இருக்கிறது.

Some classics are better left untouched.

- அதற்கு கமல் 'I am a hero; I am a villain' என்று உதார் விட்டு டாலர்களை தூக்கி வீசுவது - மங்காத்தா comparison is inevitable and I think that Ajith was fabulous in that 'Money, Money, Money!' scene.

கொசுறு: கமல் Barrie Osborne உடன் பணி புரிய இருப்பாதாக வந்துள்ள செய்திகள் வரவேற்கப்பட வேண்டியது. இந்தியாவில் இருந்து, உலகளவில் சினிமா முத்திரை படைக்கத் தற்போது தகுதி உடையவர் அவர் ஒருவர்தான்.

கொலவெறி, love anthem, sachin anthem, மூளைக்கு வேலையற்ற மரம் சுற்றும் so-called musicals (யோவ், மேற்கத்திய விமர்சகர்கள் நம்ம படத்தை musicalனு சொல்றது வஞ்சப்புகழ்ச்சி அணி! இது தெரியாம குதிச்சிட்டு இருக்காதீங்க!) இப்படி எவ்வளவோ இருந்தாலும் கொஞ்சமாவது மூளைக்கு வேலை கொடுக்கும்திரைப்படங்களைக் கொடுப்பதற்கு உ.நா மெனக்கெடுவது பேருண்மை. அம்முயற்சிகள் வாழ்க, வளர்க!!

ஏகாம்பரத்தின் பி.கு.: இன்னாதான் கன் பைட்டு குட்த்தாலும், மூஞ்சிலோ பிளாஸ்டர் போட்டுகின்னாலும், பொம்பள மாதிரி டான்ஸ் ஆட்னாலும், சும்மா நச்சுனு கோச்சடையான் வர்றான் பாரு... அது பிகிலு... கோபாலு, இன்னோரு குவார்ட்டரு சொல்லு... அது செரி, கோச்சடையான்னா இன்னாபா?

Friday, May 4, 2012

நல்லதுதானே?!

சென்ற வாரம் முடிந்த சிங்கை தமிழ் மொழி மாதக் கொண்டாட்டத்தில் பல நல்ல நிகழ்ச்சிகள் இருந்தன.

வழக்கம் போல சில பள்ளிகளின் போட்டி நிகழ்ச்சிகள், நாடகப் போட்டிகள், விழாக்கள், சொற்களம் என்று சிங்கப்பூர் தமிழ் மக்கள் கொஞ்சம் திக்குமுக்காடிப் போனது என்னவோ உண்மைதான்.

ஷப்பீர் இசையமைத்த 'தமிழை நேசிப்போம், தமிழில் பேசுவோம்' பாடல் இன்னாட்டின் தமிழ் பேசும் பட்டி தொட்டிகளில் எல்லாம் முழங்கியது என்றால் அது மிகையாகாது.

இந்த நிகழ்ச்சிகளில் ஒன்று 'கலக்கல்'. இவண் (எவ்வளவு நாளாச்சு இந்த வார்த்தையைக் கேட்டு?) நாடகக் குழு நடத்திய தொடக்க/உயர் நிலைப் பள்ளிகளுக்கான நாடகப் போட்டி. இறுதிப் போட்டியில் 3 தொ.ப; 3 உ.ப. ஒவ்வொரு பள்ளியும் பழமொழியை ஒட்டி நாடகம் போட வேண்டும். 'திடீர்' நாடகமும் நடிக்க வேண்டும். நல்ல பலத்த போட்டி.

உட்லேண்ட்ஸ் நூலகத்தில் நடந்த போட்டியைக் காண அரங்கம் நிறைந்திருந்தது. படிகளில் எல்லாம் மக்கள் உட்கார்ந்து (நெளிந்து கொண்டே :-() ரசித்தார்கள் என்பதற்கு அடியேன் சாட்சி.

சரி, இது இவண் குழுவிற்கான plug இல்லை ;-)

நிகழ்ச்சியின் போது ஒரு மாணவனைச் சந்தித்தேன். என் இருக்கைக்கு அருகில் தரையில் அமர்ந்திருந்தான். கொஞ்சம் மங்கலான எனக்கே அவன் ரொம்ப சூட்டிகை என்று புரிந்து விட்டது.


எங்கள் இருவருக்கும் இடையே நடந்த முதல் உரையாடல்:

- தம்பி, உன் பேர் என்ன?
- யுகேஷ் சார்!
- எந்த பள்ளியில படிக்கிறே? (தமிழ் விழா பாருங்க, அதனால பள்ளின்னு கேட்கணும், இல்லன்னா, 'எந்த ஸ்கூல் பா?')
- உட்லேண்ட்ஸ் ரிங் (Woodlands Ring)
- எது? உட்லேண்ட்ஸ்-ஆ?
- இல்லே சார்! உட்லேண்ட்ஸ் ரிங்! மோதிரம், மோதிரம் (செய்கையுடன்)
- (மனதிற்குள்ளே) ஆஹா, கிளம்பிட்டான்ய்யா!

யுகேஷ் நாடகங்களை மிகவும் உன்னிப்பாகவும், உற்சாகத்துடனும் பார்த்து, ரசித்துக் கொண்டிருந்தான். அவ்வப்போது சிலபல கமெண்டுகள் வேறு!

போட்டியில் பங்கு பெற்ற ஒரு பள்ளியின் நாடகத்தின் கான்செப்ட் (அதுதாங்க, கருப்பொருள்!) சிறிது வித்தியாசமாக இருந்தது. அவர்களுடைய பழமொழி: 'தனிமரம் தோப்பாகாது'.

வானத்தில் இருக்கும் நட்சத்திரங்களை நிலவு அரசன் ஒரு வீட்டைக் கட்டச் சொல்கிறான். கட்டி முடிக்க ஒரு மாத அவகாசமும் தருகிறான். கட்டவில்லை என்றால் அந்த நட்சத்திரங்களை பூமிக்கு அனுப்பி மனிதப்பிறவி எடுக்க வைத்துவிடுவதாக பயமுறுத்துகிறான்.

இதைக்கேட்டு அந்த விண்மீன்கள் 'ஐய்யய்யோ! மனிதப்பிறவியா? வேண்டவே வேண்டாம்!' என்று அலறுகின்றன.

அதுக்கு நம்ம யுகேஷ் அடித்த கமெண்டுதான் இன்றைய பதிவின் தலைப்பு!

யோசித்துப் பார்த்தால், 'அரிது, அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது!' என்று ஔவையார் கூறியதை அவன் புரிந்து கொண்டுவிட்டானோ என்று தோன்றுகிறது.

மனிதனாய்ப் பிறந்தால் எவ்வளவு வலி, கோபம், தாபம், துன்பம், துக்கம் உண்டு - அது எதுவும் வேண்டாம் என்ற யுடோப்பியன் கனவை அக்கதாபாத்திரங்கள் பரப்பினாலும், யுகேஷின் அந்த ஒரு 'நல்லதுதானே!' என்ற சொல், மேலே சொன்ன அத்தனைக் 'கெடுதல்களுக்கும்' மேலாக, அன்பு, பாசம், வெற்றி, மகிழ்ச்சி, இன்பம் என்ற மறுபக்கங்களும் உண்டு என்று புரிய வைத்தன.

எதற்கு எடுத்தாலும் வாழ்வின் ஆச்சரியங்களைக் குறை கூறும் நமக்கு இந்த 'நல்லதுதானே!' நல்ல ஒரு நிறைதானே!!

பி.கு: இன்னொரு நாடகத்தில் ஒரு குழந்தை பள்ளியில் நன்கு படிக்காததால் அவளை அவள் ஆசிரியையும் அம்மாவும், மனோதத்துவ நிபுணரிடம் (அதாங்க, Psychiatrist!) அழைத்துச் செல்ல முடிவு செய்கிறார்கள். அதற்கு யுகேஷின் கேள்வி: " Psychiatrist-ஆ? எதுக்கு? அந்தப் பொண்ணுக்கு Bipolar disorder-ஆ என்ன ?

தம்பி தனுசு! நம்ம கொயந்தங்களுக்கு நல்லா சயன்ஸு சொல்லிக் கொடுத்துட்டே!!

Saturday, January 14, 2012

ஆல் ஈஸ் வெல், சற்றேறக் குறைய!

அன்பு நண்பர்களுக்கு இனிய புத்தாண்டு, பொங்கல் வாழ்த்துக்கள்!

பல நாட்களுக்குப் பிறகு மீண்டும் வலைப்பதிவுக்கு...

வழக்கம் போல சினிமா விமர்சனம்தான்...

அதற்கு முன் சிங்கையில் டாக்சி அராஜகங்கள் பற்றிப் புலம்பி வாயை மெல்லும் (அரைக்கும்?) மக்கள்ஸுக்கு இன்னும் ஒரு நற்செய்தி:

போன மாதம் சிங்கை விமான நிலையத்திலிருந்து ஜுரோங் செல்ல டாக்சியில் ஏறிய திரு. கொச்சுமாதவனுக்கு ஒரு வல்லிய அதிர்ச்சியாணு... வீடு போய்ச் சேர ஒன்றரை மணி ஆன அவஸ்தை ஒரு புறம் இருக்க, அந்த வாடகை மகிழூந்து மீட்டரில் காட்டிய சார்ஜ் அவரை திரும்பத் திருவனந்தபுரத்துக்கே துரத்தும் வண்ணம் இருந்தது என்பதுதான் உண்மை! எவ்வளவு சார்ஜ்? ரொம்ப கம்மிதான்... $85.26...ஹ்ம்ம்ம்ம்!ரொம்ப நாள் கழித்து கடந்த மூன்று வாரங்களில் இரண்டு தமிழ்ப்படங்களை தியேட்டரில் பார்க்க முடிந்தது. ஒஸ்தி சென்னை சத்யத்திலும், நண்பன் சிங்கை அங் மோ கியோவிலும்.

இதில என்ன டமாஸுன்னா, ரெண்டும் இந்திப் படத்தோட அட்டக் காப்பி...

ஒஸ்தியில் சிம்புவின் டுமீலுதான் பாட்டில் படுத்துக் கொண்டே குதித்து ஆடும் அந்த ஸ்டெப்பும், சந்தானத்தின் கலாய்த்தலும், ஈஸ்வரியின் கலாசலாவும்தான் எம்மைக் கவர்ந்தன. மற்றெல்லாம் சல்மான் கானின் பின் தொழுது செல்ல வேண்டும் என்பது என் ஒஸ்தியான கருத்து! Of course, நம்ம ரிச்சா, சகல விதமான பரிபாலனங்களோட பானை செஞ்சது கண்டு இன்னமும் வியக்கேன்!


நண்பன்...

3 இடியட்ஸ் படத்தின் ஜெராக்ஸ்தான் என்றாலும், ஷங்கர்/விஜய் கூட்டணி எப்படி இருக்கும் என்ற ஒரு சுவாரசியமான கேள்வியும், வீட்டில் உள்ள விஜய்-விரும்பி டீன் ஏஜ் பெண்ணின் நச்சரிப்பும் நம்மை நேற்று படத்தைப் பார்க்க வைத்தன.

ஷங்கர் SACயின் துணையாக இருந்து வேலை கற்றுக் கொண்டதால்தான் விஜய்க்கு இந்த சான்ஸ் கொடுத்துள்ளார் என்று சில சல்லிகள் பேசியது உண்மைதான்.

ஆனால், இந்தப்படத்தில் விஜய் நிறையவே மெனக்கெட்டிருக்கிறார். ஆமீர் கானுடன் ஒப்பிடுவது ஏறத்தாழ தவறுதான் என்றாலும், சிலபல காட்சிகளில் (மெஷின் பற்றி விளக்கும் போது, பாடல் காட்சிகள், லைப்ரரியில் சைலன்ஸரை கலாய்க்கும் போது) ஒரிஜினலைவிட சூப்பருங்ணா!.


எந்திரனுக்காக ஷங்கர் எல்லா கற்பனையும் செலவழித்து விட்டார் எனத் தோன்றுகிறது. காட்சிக்கு காட்சி அப்படியே எடுத்திருந்தாலும் (ரீமேக் ஒப்பந்தம் அவரை அப்படி நிர்ப்பந்திருக்கலாம்... சேத்தன் பகத் எப்படி எல்லாம் மாட்டிக் கொண்டு விழித்தார் என்பது வாசகர்களுக்கு நினைவிருக்கலாம்). ஷங்கர் எழுதிய வசனங்களிலேயே அன்னியக் கும்பிபாகம், பாய்ஸ் படக் குசுப்பாடல், சஹானா பாடல் செட் என்று ஒரே deja vu!

ரீமேக் சரிதான். ஒரிஜினலில் குஜராத்தி உணவு பற்றி கரீனா கடிப்பார். அதற்காக சம்பந்தமே இல்லாமல் விஜய்க்கு பர்மா சாப்பாடு பிடிக்கும் என்று நுழைத்து அதற்காக இலியானா கடிக்க... மச்சி, ஐ வாண்ட் த மப்பு, ஓபன் த பாட்டில்!

ஸ்ரீஜித் சத்யன், ஜீவா, ஸ்ரீகாந்த் மூவரும் கிடைத்த வாய்ப்பை நன்கு பயன்படுத்தி இருக்கின்றனர். இலியானா, சத்யராஜ் - ஸாரிங்க ஆபிஸர்!

தமிழுக்காக கொஞ்சூண்டு புதுசாக செய்திருக்கிறார்கள். பாம்பு வந்து முட்டை போட்ட பேப்பரைத் தின்னுவது; அஸ்கு லஸ்கா பாடல், வாத்துப் பண்ணை வைத்துள்ள அப்பா, வசனங்களில் லோக்கல் விளையாட்டு - (ஜீவா: சார், கடைசி செமஸ்டரில் ஒரு பேப்பர் புட்டுகிச்சுன்னா) என்று அரசல் புரசலாக புருவங்கள் உயர்த்தப்படுகின்றன.

தமிழ்த் திரைப்பட வரலாற்றிலேயே மிக அதிகமாக இடுப்பு காட்டப்பட்ட பாடல் என்ற சிறப்பை 'இருக்கானா' பாடல் பெற்றுள்ளது என்பது சான்றோரின் தீர்ப்பு! (இதற்காகவே இப்படத்திற்கு வரிவிலக்கு அளித்திருக்கிறார்கள் என்று கூறினால் அது அராத்துத்தனம் ஆகிவிடும் என்பதால்...)

3 இடியட்ஸ் படம் பார்க்கும் போது குறைந்தது மூன்று இடங்களிலாவது இன்றும் என்னையும் அறியாமல் அழுவாச்சி ஆகிவிடும். நான் இத்தனை நாளும் அது நடிப்பினாலும், வசனத்தினாலும் ஏற்பட்ட பாதிப்பு என்று கருதியிருந்தேன். நண்பனைப் பார்த்த பிறகு - அதே இடங்களில் நமக்குக் கண்ணீர் வரவில்லை. யோசித்துப் பார்த்ததில், ஒரு விடயம் புலப்பட்டது. 

பின்னணி இசை. 

ஹாரிஸு... கலச்சிட்டியே பரட்டை! ஒன்றிரண்டு பாடல்கள் சுமார் என்றாலும், BGM தாங்க முடியவில்லை... விளைவு? அழ வைக்க வேண்டிய இடங்களில், 'So what?' என்று கேட்கத் தோன்றுகிறது.

கார்க்கியின் பாடல் வரிகள் (எந்தன் கண் முன்னே, அஸ்கு லஸ்கா) கலக்கல். இளமை வாழ்க!
ஸ்ரீஜித்தின் சத்யனின் அந்த ஆசிரியர் தினப் பேச்சின் ஊடே ஏற்படுத்தப்பட்ட களேபரங்கள் கிச்சுகிச்சு மூட்டினாலும், கலவி என்றால் என்ன, கொங்கை என்றால் என்ன என்று புளி போட்டுத் தேய்த்து, நம்ம மூளை எல்லாம் ஒரே பளப்பளா! அது சரி, கொலவெறிக்கு நடுவே, இப்படியாவது தமிழ் வளர்ப்போம் என்று நினைத்துவிட்டார்களோ? (வரிவிலக்குக்கு இன்னுமொரு காரணம்!)

மற்றபடி, ஆல் ஈஸ் வெல், சற்றேறக் குறைய!