ஏகாம்பரத்தின் பார்வையில் ‘பேட்ட’
For a schizophrenic view of this move in English - read this.

(Mild Spoilers ahead)

அன்புள்ள கபாலி தலைவன் ரஜினிக்கு,

உன் தம்பி ஆர்கே நகர் ஏகாம்பரம் எளுதிக்கிறது.
எப்புடி க்கீறே கண்ணு? ரெண்டு மாசமாச்சு உன்னாண்டே பேசி…
அதாம்பா, ரெண்டு புள்ளி சைபர் படம் வர்றச்சொல்லோ கண்டுக்கினோமே…

நேத்துதான் திருவாரூர்லேர்ந்து வந்துக்கினேன். நம்ம டிடிவி தினகரு கட்ச்சிலேந்து கூப்புட்டாங்க. தனலெச்சுமியும், ‘மாமா, ஒரு பத்து குக்குரு போட்டுக்கினு வா. கொஞ்சம் துட்டு பாக்கலான்’னுச்சு. போனாக்கா, கஸ்மாலம் புடிச்சவுனுங்கோ, எலீக்சனே இல்லேன்னுட்டாங்க!

சரி, போ பரவாயில்லை. பொங்கலுக்குத்தான் நம்ம அரப்பாடி,, ஐயே, நம்ம எடப்பாடி, ரேசன் கார்ட்டு வெச்சிக்கினு இருந்தா ஆயிரம் ரூபான்னு சொல்லிக்கினாரா, கொஞ்சம் ஓக்கே ஆயிடுச்சுப்பா!

என்னா கண்ணு கேட்டே? ‘கார்ட்டு இன்னா கலரா?’ பச்சைதாம்பா. :)

துட்டு வாங்கிக்கினு உடனே நம்ம பொர்சவாக்கம் சரவணா ஸ்டோர்ஸுக்குப் போயி தனத்துக்கு ஒரு சேலையும், சேகருக்கு ஒரு சட்டை, கால் சராய் எல்லாம் எடுத்தாந்தோம்பா. அவ்வளவுதான், பொங்கலு வந்திடுச்சி!

அப்போதான் சேகரு ‘நைனா! ரோகிணி தேட்டர்லே தல படம் விஸ்வாசம் பாக்கணும்’னு சொல்லச் சொல்லோதான் எனுக்கு சுர்ருன்னு ஆச்சு… ஆஹா, நம்ம தலீவரு படம் பேட்டயும் வருதே!

’சரிடா, நீ ரோகிணி போய்க்கோ. நானும் உங்கம்மாளும் ஆல்பட்டு போயி தலீவரை பார்க்கறோம்’னு சொல்லவும் பய உடனே கயண்டுகினான்!

நமக்கு ஆல்பட்டுதான் ராசி தலீவா! இன்னா ஜனம்!
படம் ஆரம்பிக்கச் சொல்லோ ஒரே பிகிலு. இன்னாவோ திருவிழா கணக்கா இருந்திச்சிப்பா! ஏன்னே தெர்லே, எனுக்கே ஒரு தெம்பா இருந்திச்சின்னா பாத்துக்கோயேன்!

தலைவா! சும்மா சொல்லக்கூடாது, பேட்ட பட்டைய கெளப்பிடுச்சுப்பா!

மொதோ சீன்லே தொடங்கி இண்ட்ரோல் வரீக்கும் மூச்சுக்கூட வுட முடிலேப்பா, அவ்ளோ மாஸு!

சிவாஜிக்கு அப்புறம் எந்திரன், லிங்கா, காலா, கபாலி, ரெண்டு புள்ளி சைபர் – அப்புடி இப்புடீன்னு ஒரே கலீஜாயிடுச்சு கண்ணு! உன் இஸ்டைலு எங்க? உன் டஃப் எங்க? உன் வேகம் எங்க? அவன் அவன் வர்றான் – உன்னிய வெச்சு நல்லா படம் எடுடான்னா, சொம்மா டகல்பாஜி காட்டிக்கினு போயிட்டானுங்கோ!

நம்ம சுப்பராஜி புள்ள கார்த்திதான் கணக்கா படம் எடுத்துக்கீது! டாங்க்ஸ் சொல்லுப்பா அந்த புள்ளைக்கு!

நீ ஆஸ்டலுக்கு வார்டனா வர்றதுக்கு நம்ம மோடிதான் ரெகமண்டாமே! பெரிய ஆளு தலைவா, நீ!

அப்பாலே அந்த டெரர் பாய்ஸாமே அவனுங்கள அல்லு இல்லாமே ஆக்குறது, ‘நான் ஸ்டைலா? நேச்சுரலி!’ அப்புடீன்னு உதார் வுடறது, சிம்ரனாண்டே போய் லவ்ஸு காட்டுறது (ஆமா, அந்த அம்மா பிரியாணி கடையா வச்சிருக்காங்க? இன்னாமோ கையை உன் மூஞ்சிலோ வெச்சி காட்டுச்சி? வாசனை புடிக்கச் சொன்னாங்களா?), புரூஸ்லீ கணக்கா அந்தக் குச்சியை வச்சி பேமானிங்களை காட்டுறதுன்னு போன ஸ்பீடு சூப்பருப்பா! நடுவுலே அந்த மரண மாஸு பாட்டு வேற சூடு கெளப்பிடுச்சி! ஆனாலும் தனத்துக்கு உல்லாலா பாட்டுதான் புடிச்சு இருந்திச்சு!

அது சரி, கைலே என்னா பச்சை குத்தியிருந்தே பாஸு? இன்னாவோ, மிசா 109ன்னு எளுதியிருந்திச்சு. மிசாவுலே ஜெயிலுக்கு எல்லாம் போனியா கண்ணு? எனுக்கு தெரியவே தெரியாதே? எவ்ளோ கஸ்டப்பட்டுக்கீறே நீயு?

அதுக்கப்பறம் பாட்சா மாதிரி எல்லாரும் நீ யாரு, நீ யாருன்னு கேக்கவும், அந்த கலெக்டரு உன் கதையை சொல்லவும், கொஞ்ச நேரம் தூங்கிட்டேம்பா. அந்த சிங்காரம் பய – அதாம்பா, தம்மாத்தூண்டு இருந்தானே -அந்த நவாசு செத்தகையோ பீச்சாங்கையோ இன்னாவோ - பாம் ஒண்ணு போடவும்தான் முளிப்பு வந்திச்சு. கொடுவா மீசையோட செம கெட்டப்புப்பா! டோபான்னாலும் கல்க்கிக்கினே போ!

பின்னாடி நீ வண்டிலே ஏறி உத்திரப் பிரதேசம் போனியா (ரெண்டு டவுட்டு: டெல்லி வேற, இது வேறவா தலைவா? அப்பொறம் எதுக்கு அங்க போனே?)
அங்க போயி நம்ம விஜய் சேதுபதி, அந்த சிங்காரம் பய எல்லாராண்டையும் டுப்பு டுப்புன்னு பொம்மை துப்பாக்கி வச்சி சண்டை போட்டியா,
கடோசிலே ஒரு டுவிஸ்டு காட்டி எல்லாரையும் பேஜார் பண்ணிக்கினியா –
அப்டியே ஒரு இருவது வருஷம் பின்னாடி போனா மாதிரி இருந்திச்சுப்பா! அய்யே, கிண்டல் இல்லப்பா! ஆத்தா சத்தியமா மனிதன் படம் கவனத்துக்கு வந்துச்சு கண்ணு! அதுலே தான் நீ பாம் எல்லாம் கையிலியே புடுச்சி கிரிக்கெட்டு வெளயாடுவியே!

படம் முடிஞ்சி வெளிய வரும்போது நல்லா ரெண்டு ஃபுல் மீல்ஸ் கட்டுன மாதிரி சொகமா இருந்திச்சுப்பா. என்னா, கொஞ்சம் நேரம் கொறச்சு இருந்திருக்கலாம். அது எல்லாம் பரவாயில்லே! உன்னிய இந்த மாதிரி பார்க்காம கண்ணு பூத்திடுச்சா, அதுனால டபுள் ஓக்கே!

அதுவும் மாஸா ‘கொலை காண்டுலே இருக்கேன்’ ‘சுவீட் சாப்புடப் போறோம்’ காட்டு காட்டுன்னு காட்டவும் ஜிவ்வுன்னு ஏறிடுச்சுப்பா! கண்ணு, நடுவுலே சிகரெட் ஒரு வலிப்பு வலிச்சிக்கினு ‘இது ஒடம்புக்கு சரியில்லேன்னு’ சொல்லவும், தனலெச்சுமி கண்ணுல தண்ணி வுட்டுடுச்சி! நீ நீதான் தலைவா!

வாட்ஸாப்புலே சிங்கப்பூரிலேர்ந்து நம்ம தொத்தா பையன் குமாரு ஒரு படம் அனுப்பியிருந்தான் – கீளே பாரு - நம்மளவுட அங்க பசங்க பவர் காட்டறாங்கப்பா!திரும்ப வர்றச்சொல்லோ, தனத்தாண்டே, ‘திரிசா வரவேயில்லையே, என்னச்சும்மே?’ன்னு கேட்டேன். அதுக்கு அது சிரிச்சிக்கினே, ‘அப்போதான் நீ கொறட்டைதான் வுட்டுகினு தூங்கிட்டே’ன்னு கொமட்டுலே ஒரு குத்து குத்துச்சு! என்ன இருந்தாலும் என் தனம் அளகு!

வூட்டுக்கு வந்தா சேகரு சோகமா, ஆராரோ ஆராரிரோன்னு இஸ்த்துகினு இருந்தான். இன்னாடா விஸ்வாசம் புட்டுக்கிச்சான்னேன். அவனுக்கு ஒரே கோபம். படம் செரி ஃபேமிலி செண்டிமெண்டு; தல கலக்கிட்டாரு! நயனு கலக்கிடுச்சி – அப்படி இப்படின்னு ஒரே அலப்பறை…நானும் வுடுவேனா, ஒன்னியப் பத்தியும் பேட்டயப் பத்தியும் செமையா ஏத்திவுட்டுக்கினேன். எனக்கு இன்னாவோ, ஏதோ ஒரு படத்துலே வடிவேலு ‘அப்படியே மெயிண்டெயின் பண்ணு சுனா பானா’ன்னு சொன்ன டைலாக்குதான் தோணுச்சி!

ரெண்டு படமும் ஓடிடும். எல்லாரும் துட்டு பண்ணிடுவாங்க. நாங்களும் ஜாலியா பொங்கலு நல்லா கொண்டாடிடுவோம். அப்பொறம் இன்னா? மஜாதான்!

சரி தலைவா! ஒடம்ப பார்த்துக்கோ!

ரொம்ப இஸ்டெயின் பண்ணிக்காதே.

அரசியலிலே எல்லாராண்டையும் ஜாக்கிரதையா இருந்துக்கோ! உன்னிய யூஸ் பண்ணிக்குவாங்க!

என்னையப் பத்திக் கவலைப்படாதே. இப்போதைக்கு குக்கரு சோறு போடுது. ஆச்சு இன்னும் ரெண்டு வருசத்துலே சேகரு படிச்சு முடிச்சுடுவான். அப்பாலே, புதுசா இட ஒதுக்கீடு ஒண்ணு மோடி கொணாந்துருக்காராமே, அதும் வழிலேயாவது ஒரு வேலை வாங்கிடலாம்.

கம்பளிச் சித்தர் சொன்னா மாதிரி ஒரு டான்ஸு வுட வேண்டியதுதான்!

இப்படிக்கு,
உன் தம்பி ஏகாம்பரம்.

Comments