ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க!!



வீட்டில் ஒரு டீன் ஏஜ் பையன் இருந்தால் பல வழிகளில் சுவாரசியம்தான். நாட்டில் உள்ள ஆட்டம், பாட்டம் சம்பந்தப்பட்ட சில பல ட்ரெண்டுகள் வேண்டுமோ, வேண்டாமோ நம் முன்னால் விழுந்துவிட, இளசுகளோடு ஒன்றாக இணைய முடியாவிட்டாலும், குறைந்த பட்சம் பின் தொடரவாவது முடிகிறது. அது சரி, அதுங்க பின்னாடி நீ ஏன் போறே? விதி வலியது...

ஆனால், எப்படி வாழ்க்கையில் கஷ்டமும் துக்கமும் மாறி மாறி வருகிறதோ, அது போல நம்மை புது ட்ரெண்டுகளும், புதுப் படங்களும் மாறி மாறி போட்டுத் தாக்குகின்றன!

அப்படி மிக அண்மையில் தாக்கியது "ஏகன்" என்ற தல (வலி?) படம்தான்.
ராஜு சுந்தரம் இயக்கத்தில் அஜித், நயந்தாரா மற்றும் பலர் நடித்து (அதாவது நடிக்க முயன்றிருக்கும்) இப்படத்தை விமர்சனம் செய்ய முயற்சி செய்வது என்பது... ம்ஹூம் முடியலே! இருந்தாலும் ட்ரை பண்ணுவோம்...

அஜித் ஒரு உதாரண போலீஸ் அதிகாரி - தொப்பை உள்பட.ஒரு தொழிலதிபரைப் பிடிக்க வேண்டி அப்ரூவரைத் தேடித் தேடி ஹாங்காங்கிலிருந்து ஊட்டிக்கு ஸ்டூடன்டாக (ஆமாஙக!) வந்து, கிண்டலும் கேலியும் பட்டு, நயனைக் கெமிஸ்ட்ரி கரெக்ட் பண்ணி, கொஞ்சம் சென்டிமெண்ட் பிழிந்து, வில்லனைக் கொலை செய்து... ஆஆஆஆ...

இசை/பாடல்கள்: காது காலி.
சண்டைகள்: ராஜு ஒரு நடன இயக்குனர் என்பதால் சண்டைக் காட்சிகளில் ஒரு நளினம் இருக்கின்றது.
நயனின் உடைகள்: என்னதான் மாடர்ன் ட்ரெஸ் வேண்டும் என்று தல கேட்டாலும், அந்த ஸ்பெஷல் புடவை + கர்ச்சீப் காம்பினேஷனே சூப்பர்.

அஜித்: சமீபத்தில் எந்த ஒரு கதாநாயகனும் இந்த அளவுக்குத் தன்னையே இவ்வளவு கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாக்கிக் கொண்டதில்லை. அவர் வாயாலேயே வரும் வசனங்கள்: "என்னப் பாருங்க! என் தாடியும்,தொப்பையும்..." "அதுதான் நானே ஒத்துக்கிட்டேன் இல்ல, பின்னே ஏன் திருப்பி திருப்பி என் தொப்பையைப் பற்றி..."

நகைச்சுவை: எப்படி சூரியன் கிழக்கில் உதிப்பது மாறாதோ அது போல அஜித்க்கு காமெடி வராது என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. அதையும் தாண்டி படம் பார்க்க வந்த ஆன்மாக்களை கிச்சு கிச்சு மூட்டியாவது சிரிக்க வைக்க வேண்டும் என்று ராஜு மெனக்கெட்டு இருப்பது கண்டு அவரைப் பெற்ற மனம் பூரிப்படைவது உறுதி. ஆனால், அதற்கு அவர் கொடுத்த விலை... ஏறத்தாழ படம் முழுக்க எல்லோரும் காமெடி மற்றும் கீமெடி பண்ணுகிறார்கள்.

ஹனீfஆ, சுமன் (விஜய் மல்லையா பார்த்தால் மான நஷ்ட வழக்கு நிச்சயம்), ஸ்ரீமன், ஸ்ரீஜித், ஜெயராம், லிவிங்ஸ்டன், நாசர், நயன் என்று எல்லோரும் அஜித்தின் சிரிப்பு முயற்சிக்கு தங்கள் உடல், பொருள், ஆடை, (நம்) ஆவி என்று எல்லாவற்றையும் படையல் இடுகிறார்கள்.

அதையும் தாண்டிப் புனிதமாக அஜித் சத்தம் போட்டால் சவமாக்குகிறார்; தலையில் தட்டினால் துவட்டி எடுக்கிறார்.


ஆமா, படத்திலே எல்லோரும் சிரிப்பா சிரிச்ச காரணத்தாலோ என்னவோ, தேவையில்லாம நாசர்/சுஹாசினி சென்ட்டி சீன்களோ? படம் மொத்தம் 2:05 மணி நேரம்தான். பத்து நிமிடம் வருகிற சுஹாசினி சீன்களை எடுத்து விட்டால்... நீங்களே கணக்கு போட்டுக்கொள்ளுங்கள்...


ஆக மொத்தம், ஏகன் படத்தால் தமிழ் திரைப்பட உலகத்தில் ஒரு மிகப் பெரிய மாற்றம் உண்டாவது நிச்சயம். எல்லா இயக்குனர்களும் 'தல'யிடம் வந்து 'சார்! இது ஒரு முழு காமெடி படம்! நீங்க ஒரு ஆர்மி கமாண்டர்; ஒரு தீவிரவாதியைப் பிடிக்க வேண்டி, நர்சரி ஸ்டூடன்டா வரீங்க!..." என்று ஆரம்பித்தால்...

அடப் போங்கப்பா!!!

Comments

Post a Comment