Friday, July 22, 2016

ஏகாம்பரத்தின் பார்வையில் கபாலி!!


For a schizophrenic look at the same movie in English, you can go here.

அன்புள்ள பாயும் புலி ரஜினி தலைவனுக்கு,
ராயபுரம் ஏகாம்பரம் வணக்கம் சொல்லிக்கிறேன்.


எப்டி கீறே தலைவா? எந்திரனுக்கு அப்பால உன்னிய பார்த்து ரொம்ப நாளாச்சு.
அதான் கபாலி வந்திடுச்சேன்னு சொல்றியா? கரீட்டுதான்.


நானும் கோபாலும் மட்டும் போலான்னுதான் இருந்தோம். அப்பால வூட்டுல ஒரே ரவுசு. தனலெச்சுமி 'என்னையும் சேகரையும் இட்டுகினு போ'ன்னு அழுதிச்சு.


சரின்னு மருந்துக்கு வச்சிக்கினு இருந்த காசை எடுத்து நாலு டிக்கிட்டு எடுத்தோம். மருந்து எதுக்குன்னு கேக்குறியா? அது ஒண்ணியும் இல்ல, கொஞ்சம் உடம்பு சரியில்ல. போன வருசம் ஒரே வவுத்து வலி. ஜிஎச்சுல நம்ம கோபாலுதான் இட்டுகினு போனான். ஏதோ லிவராமே, அதுல ஏதோ அபீட்டு ஆயிடுச்சாம். இப்ப பரவாயில்ல, தலைவா. இன்னா ஒரே பேஜாரு, சரக்கு அடிக்க முடியாது - ஐயோ, இது மலேசியா சரக்கு இல்லபா, டாஸ்மாக்கு!
ஆல்பட்டுல கூட்டத்த பார்க்க சொல்லோ நம்ம புள்ள சேகருக்கு ஒரே குஜாலாயிடுச்சு. 'அப்பா! பாலபிசேகம் செய்யலாம்ப்பா!'ன்னான். அப்பால நான்தான் வேணாம்னு சொன்னேன். ஆயா பால் வேஸ்டு செய்யக்கூடாதுன்னு சொல்லிக்கீது. அத்தோட எந்திரன்ல உனுக்கு அபிசேகம் செஞ்சி கை உடைஞ்சதையும் சொன்னேன். பையனுக்கு கொஞ்சம் புஸ்ஸுதான். அதுக்காக வுட்டுற முடியுமா?
நீ சொன்னா மாரியே புள்ளைய படிக்க வைக்கிறேன், தலைவா. அஞ்சாவது படிக்கிறான். இங்கிலீஸு இஸ்கூலு! துட்டுதான் சாஸ்தியாவுது. அது பரவாயில்ல. தோ, இப்பதான் எலீக்சன் முடிஞ்சிச்சி. அத்தோட அம்மாதான் ஆ ஊன்னா எதாவது ஃப்ரீயா குடுக்கறாங்களே. இத அத வித்து அஜிஸ்ட் பண்ணுறேன்.


கபாலி படம் சூப்பர் தலைவா!


மொதல் சீன்ல ஜெயில் உள்ளருந்து வர்ரச் சொல்லோ கலக்கிட்டே! அந்த தாடி, கோட்டு, சூட்டு, வாட்ச்சி, மொத தபா 'மகிள்ச்சி'...சூப்பரு!


அதுவும் 'கபாலிடா!' அப்புடீன்னு உதார் காட்டுறப்போ சேகரே ஆடிப் போயிட்டான்!
'அப்பா! இந்த தாத்தா ரொம்ப ஸ்டைலா இருக்காருப்பா!'
நான்தான் தலைல தட்டினேன்: 'டேய், அது தாத்தா இல்லடா! என் தலைவன்டா!'
என்னதான் புள்ளையா இருந்தாலும் உன்னிய வுட்டு குடுக்க முடியுமா?


ஆனா, அதுக்கப்புறம் விசில் அடிக்கவே ரொம்ப நேரம் ஆச்சு, கண்ணு! நீ பாட்டுக்கு ஏதோ இஸ்கூலு நடத்துறியாம். பெரிய தாதாவாம்! தமிளனுக்கு நல்லது எல்லாம் செய்வியாம். அது வரைக்கும் புரிஞ்சுது.

அதுக்கப்பால நிறைய விசயம் பிரியலே! அது யாரு 43? கோசம்ன்றான், கட்டைன்றான், கட்டின்றான், சாவடின்றான், மண்டைன்றான், பொன்னான்றான், ஜோக்குன்றான், காடின்றான்... எது எடுத்தாலும் 'லா, லா'ன்றான்.

இன்ட்ரோல்ல கோபாலுதான் சொன்னான், அதெல்லாம் மலேசியாவுல அப்புடித்தான் தமிள் பேசுவாங்களாம். படா பேஜாரா போயிடுச்சுபா!
ஜீரோ, பொருளு, பவுடரு, தில்லு, தல, கலக்கலு, சூப்பரு, சுமோவண்டின்னு பிரியர மாதிரி சொல்ல வேண்டியதுதானே!அப்பாலே, நீயும் பொண்ணும் சேர்ந்து உன் வீட்டுக்காரம்மாவைத் தேடி, கடோசில பாண்டிச்சேரியில புடிச்சி, அந்த சீனாக்காரனையும் போட்டுத் தள்ளறதுக்குள்ளோ எத்தினி துப்பாக்கி, எத்தினி குண்டுங்கோ...

நம்மூர்ல 'யூ'ன்னு தாணு டிவில சொன்னாரு! அதுனாலதான் சேகரயும் இட்டாந்தேன். ஆனா இவ்ளோ ரத்தம் பார்த்துட்டு பத்து வயசுப்புள்ள பயந்துடுச்சி. அதுவும் பொட்டியில தினேசு வெட்டுன கையப் பாத்துட்டு, 'அப்பா, ஒண்ணுக்குப் போவணும்'னுட்டான். எப்பவும் தனம்தான் இட்டுகினு போவும். இந்த தபா, நானே அழச்சிக்கினு போனேன். பாவம், தனம் சீட்டுலியே தூங்கிடுச்சி!

எல்லாஞ் சரி! அது இன்னாது அந்த வில்லனுங்க எல்லாரும் அத்தினி கலர் கலரா சூட்டு, சட்டை போட்டிருந்தானுங்கோ? நல்ல, அய்கா, நம்ம சரவணா இஸ்டோருல துணி எடுத்திருக்கலாம்ல?


கிளைமாக்சுல, ஷோபாவுல குந்திக்கினு டோனியாண்ட பராசக்தி வசனம் மாதிரி, 'நான் கோட்டு சூட்டு போடுவேண்டா, கெத்துடா!' ன்னு சொன்னப்போ, தேட்டரே கலகலத்திடுச்சி! ஒரே பிகிலு! எனுக்கு கண்ணுல தண்ணி!


போடணும் தலைவா! நீ சூட்டு போடணும். நான் போடலேன்னாலும் என் புள்ள உன்ன மாதிரி சூட்டு போடணும். தஸ்ஸு புஸ்ஸுன்னு இங்கிலீஸுல பேசணும். அதுதான் எனுக்கும் தனத்துக்கும் வேணும். உன்ன வச்சி அத புரியவச்சதுக்கு நம்ம ரஞ்சித்துக்கு டாங்க்ஸுப்பா!

ஒண்ணு கேக்கணும்னு இருந்தேன், கடோசில பேரு போடச் சொல்லோ, 'டப்புன்னு' துப்பாக்கி சத்தம் கேட்டுச்சே? உனுக்கு ஒண்ணியும் இல்லல்ல! ஒரே 'டர்' ஆயிடுச்சி. அப்பால, கோபாலுதான் சொன்னான். ஒரே ஒரு குண்டு மட்டும் பாக்கி இருந்திச்சாம். அத்த எதுக்கு வேஸ்ட்டு பண்ணனும்னு சுட்டுட்டாங்களாம். அவன் சொன்னா கரீக்டாத்தான் இருக்கும்.


இன்னொண்ணு கவனிச்சேன். நீ படத்துல தம்மு அடிக்கலே, தண்ணியும் அடிக்கலே! என்ன மாதிரியே ஆயிட்டியா? 'மகிள்ச்சி!'

அப்பால தனம் வூட்டாண்ட போய் சமைக்க முடியாதுன்னுடிச்சி. சரின்னுட்டு தலப்பாக்கட்டி பிரியாணி துண்ட்டு இப்போதான் வூட்டுக்கு வந்தோம். சேகரு 'நெருப்புடா'ன்னு பாடிக்கிட்டே, விஜய் டிவியில 'கோடீஸ்வரன்' பார்க்கப் போயிட்டான். நிறைய கேள்விக்கு கரீக்டா பதில் சொல்றான் தலிவா!எனுக்கு ஒரு யோசனை தலைவா! நீ ஏன் கோட்டு சூட்டு போட்டுகிட்டு சும்மா இஷ்டைலா 'கோடீஸ்வரன்' கேள்வி கேக்கக் கூடாது? இந்தியில நம்ம ஐசுவரியா மாமனாரு அம்மிதாப்பு, செஞ்சாருல்ல? அதே மாதிரிதான். எந்திரன் ரெண்டாவது பார்ட்டு முடிஞ்சதும் ஆரம்பிச்சுக்கலாம். சாவடியா இருக்கும் லா! (அய்யா! எனக்கும் மலேசியா தமிள் ஒட்டிக்கிச்சு!)

உடம்ப பாத்துக்க தலீவா! உன்ன வச்சி இன்னும் நாலு பேரு காசு பாக்கணும்.
இப்படிக்கு என்னிக்கும் உன் ரசிகன்,
ராயபுரம் ஏகாம்பரம்.


பி.கு. பக்கத்து வூட்டு பிரியாதான் இதை கம்பூட்டருல டைப் பண்ணுச்சி! கபாலி டிக்கிட்டும் நெட்டுல வாங்கித் தந்துச்சு. நல்ல பொண்ணு தலைவா அது! தரமணியில வேலை செய்யுது. 'ரெயில்வே டேசன்ல உஷாரா இரும்மா!'ன்னு சொல்லின்னுகீறேன்!

Wednesday, March 16, 2016

தனிமை நன்று! (Solitude is Good!)


Sometimes solitude is good.

Especially in a long commute when you are cocooned in your own musical world aided by iPhone  and pair of earphones.

Today, was one such instance.

We have all watched the movie. We enjoyed 'that' interview. We yearned for such a leader.
We grooved with Sushmita 'Shakalaka Baby' Sen. We 'wowed' those pots in 'Azhagana Ratchasiye'

We cringed at those graphics in 'Mudhalvane'. And 'kuthified' along with 'Uppu Karuvadu'!

But after all these years, there is this 'one' song that really moves me still.

Shankar had a beautiful overture through உளுந்து விதைக்கையிலே, where the not-so-good-looking village belle Manisha sings about nature in general. He then opens it up wider with a more sophisticated version when Arjun falls head-over-heels for Manisha and sings 'அனிச்ச மலரழகே'.

But the full-blown impact of the song set to ragam Vaasanthi comes out in குருக்கு சிறுத்தவளே!The pining of the lovesick pair is brought about so nicely through the five elements: Water, Wind, Earth, Sky and Fire.

Yes, we can be pardoned to have missed the powerful lyrics by Vairamuthu, as the visuals were simply breathtaking.

Thanks to today's commute the audio part of the song got its Andy Warhol moment :-)

Alternating  between the physical and the profound, Vairamuthu takes you on a fabulous roller coaster ride at the end of which you are unconsciously reaching out to the 'replay' button!

ஒரு கண்ணில் நீர் கசிய
உதட்டு வழி உசிர் கசிய
உன்னாலே சில முறை இறக்கவும்
சில முறை பிறக்கவும் ஆனதே!
அட ஆற்றோட விழுந்த இலை,
அந்த ஆற்றோட போவது போல்,
நெஞ்சு உன்னோடுதான் பின்னோடுதே!
அட, காலம் மறந்து காட்டு மரமும் பூக்கிறதே!

If that anupallavi is delicious, then the coda of second charanam is vintage Kaviarasu!

உடம்பு மண்ணில் புதைகிற வரையில் உடன் வரக் கூடுமோ?
உயிர் என்னோடு இருக்கையிலே, நீ மண்ணோடு போவதெங்கே?
அட, உன் சேவையில் நானில்லையா?
கொல்ல வந்த மரணம் கூடக் குழம்புமய்யா!

Needless to say, the support by Hariharan, Mahalakshmi Iyer and of course, ARR have contributed immensely to the success of this relatively under-rated song!

Sometimes solitude is good. Indeed.

Friday, July 3, 2015

பாபநாசம்: கண்களில் அருங்காட்சியாய்...
சில சமயங்களில் நமக்கு ஏன் இந்த யோசனை தோன்றவில்லை என்று தலையைச் சொறியும் நிலைமைக்கு நாம் ஆளாகியிருப்போம்.

மலையாள த்ருஷ்யம் (காட்சி/visual) படம் வந்த பிறகு கோலி/டாலி/பாலி/சந்தனவுட் இயக்குனர்களும் எழுத்தாளர்களும் தத்தம் வீட்டுக்குச் சென்று ஓ! என்று கதறியிருப்பர் என்பது திண்ணம். சே! ஜஸ்ட் மிஸ்!

சினிமாவிலேயே இருந்து சினிமாவையே வைத்து சினிமா போலவே நிகழ்வுகளைக் கொண்டு வந்து ஒரு சஸ்பென்ஸ் மற்றும் குடும்பக் காவியம் படைப்பது ஏறத்தாழ கிரீஸ் நாடு தன் கடன்களை எல்லாம் (நேரத்தில்) அடைப்பதற்குச் சமம்!

சரி, அடுத்தது என்ன? ரீமேக் தான்!

கன்னடத்தில், தெலுங்கில், இந்தியில் என்று ஆளாளுக்குப் படம் காட்ட, தமிழில் த்ருஷ்யப்பூனைக்கு கமல் மணி கட்டியிருக்கிறார்.

அழகான, நீரோடை போல் ஒரு வாழ்க்கையில் சுழியாக வந்த ஒருவனைக் கழித்த தன் குடும்பத்தைக் காப்பாற்றும் ஒரு (அ)சாதாரணக் குடும்பத் தலைவனின் கதை - பாபநாசம்/த்ருஷ்யம்/whatever_you_call_it!

பிடித்தவை:

மசாலா, ஆட்டம், பாட்டம், பன்ச் டயலாக் எதுவும் இல்லாத ஒரு படம் ஓடுவதற்கு நடிப்பு/திரைக்கதை/இசைதான் முக்கியம். அதனால் நமது வரிசையில் அவையே இடம் பிடிக்கின்றன.

1. கமலின் மாறுபட்ட நடிப்பு (கடைசிக் காட்சி கொஞ்சம் மலையாளத்தைவிட அழுவாச்சியாக இருப்பினும்,) மற்ற இடங்களில் முடிந்த அளவுக்கு அடக்கி வாசித்து, கண்களாலேயே நிறைய பேசி...அதுவும் தன் குடும்பத்தினரைப் 'புரிந்ததா?' என்று கேட்கும் காட்சியில் எல்லோரையும் அதட்டலாகக் கேட்டுப் பின்னர் தன் குட்டிப் பெண்ணிடம் மட்டும் கொஞ்சலாகக் கேட்டு... தியேட்டரில் இருந்த 40 பேரும் கைத்தட்டினர்!

2. ஆஷா சரத்: கன்றை இழந்த பசுவாக/சட்டத்தைப் (புறம்பாகக்) கையில் எடுக்கும் காவலதிகாரியாக, முகம், உடல், குரல் என்று எல்லா காட்சிகளிலும் கலக்கியிருக்கிறார் அம்மணி! மலையாளத்தில் அவரே செய்ததைவிட நன்றாகச் செய்திருக்கிறார்ர்.

3. கலாபவன் மணி: சர்க்கரை நோயால் மெலிந்து விட்டார் என்று நினைக்கிறேன். ஒரு வில்லனாகவே வாழ்ந்து, தான் கண்டது உண்மைதான் என்று சாதித்துச் சாதித்துக் கடைசியில் அதுதான் உண்மை என்று நிரூபணம் ஆகும்போது விடும் அந்த லுக்கு!

4. கிப்ரான், உத்தம வில்லனில் விட்டதைத் தொடர்ந்திருக்கிறார். முதல் அரை மணி நேரம் - உ.வி.யின் 'கேளாய் மன்னா!' பின்னணி இசைதான். ஆனால், முதன்முதலில் போலீஸ் வரும் போது பிளிறிய எலெக்ட்ரிக் கிட்டாரும், குட்டிப்பெண்ணைப் பெருமாள் விசாரிக்க எத்தனிக்கும் போது கசிந்த வயலினும்... டூரியனில் தேன்!

5. பாபநாசம் பகுதி முழுவதும் பசுமை நேசம்! பச்சை மயம்! ஒளிப்பதிவு துல்லியம்.

6. தமிழில் திரைக்கதை இன்னும் சிறிது வேகமாகச் சென்றது. நகைச்சுவை சற்று அதிகமாகவே இருந்தது. அதனால் இருக்கையில் நெளியத் தேவையிருக்கவில்லை (மூட்டைப்பூச்சிக் கடியைத் தவிர!)

விட்டுட்டீங்களே ப்ரோ:

1. மல்லுவிலும் மனவாடிலும் மீனா கலக்கியிருப்பார். ஆனால் கெளதமி கொஞ்சம் சுமார்தான். அவரிடம் ஒரு கிராமப் பெண்ணுக்குரிய அந்த அப்பாவித்தனம் இல்லாதது உண்மைதான்! (Devar Magan effect lingers?!)

2. வசனங்களில் நெல்லைமணம் சற்று தூக்கலாகவே இருந்ததால், சில இடங்களில் புரிந்து கொள்ள subtitlesஐ நாட வேண்டி இருந்தது. வெட்கம் - நான் என்னைச் சொன்னேன்! ஆனால், ஜெயமோகனுக்கு ஜாமூன் சாப்பிடுவது போல் இருந்திருக்கும். ஆனால் ஓரிரு இடங்களில் மலையாள வசனங்கள் இன்னும் நன்றாக இருந்த ஒரு பிரமை - குறிப்பாக ஆஷா தன் கணவரிடம் போலீஸின் நுண்ணுணர்வு பற்றிக் கூறும் போது, கடைசிக் காட்சியில் இரண்டு தந்தைகளும் பேசும் போது...

3. மலையாளத்தில் போலீஸின் விசாரணைக் காட்சிகளில் இத்தனை வன்முறை இல்லை. இங்கு விரல்களை உடைத்து, பிரஜாபதியை உதைத்து... என்னம்மா இப்படிப் பண்றீங்களேம்மா!

கலைப்பயணம் என்பது கம்பியின் மேல் நடப்பது போன்றது.
அதுவும் ரீமேக் கலைப்பயணம் என்பது கீழே புலியை வைத்துக் கொண்டு மேலே கம்பியில் நடப்பதற்கு =.

நடந்து முடித்தவுடன் - 'அதுதான், முன்னாடியே ஒருத்தன் நடந்துட்டானின்லே!' என்பார்கள். நடக்கவில்லையெனில், புலியின் வயிற்றில் ஜீரணம்!

கமல் நடந்து முடித்து, புலியையும் தன் பக்கம் இழுத்துவிட்டார். நல்ல வேளை!

மற்றபடி லாலேட்டனுடன் ஒப்பு நோக்குதல் தப்பும்மா! அவர் Copa America என்றால், கமல் UEFA Champions League. ஒன்று அழகியல் சார்ந்த அறிவியல். மற்றொன்று அறிவியல் சார்ந்த அழகியல்.

கண்டிப்பாகப் பாருங்கள். கேபிளில் வரலாம்; வரும். அதற்கு முன்பே பார்ப்பது சாலச் சிறந்தது. 

ஏன்னா, மாரி பத்து நாளில் வருது பாருங்க! அதற்கான வருமுன் காக்கும் மருந்துதான் பாபநாசம்!

பி.கு. கமல் படம் என்றால் நாத்திகம் இல்லையா என்று கேட்கலாம். உண்டு. ஆனால் அதுகூட நேர்நேர் தேமாவாக... So it is not jarring!


Thursday, April 30, 2015

உத்தம வில்லன் – நிலையாமையின் நிஜம்தலைப்பைப் பார்த்து, இது ஏதோ பின் நவீனத்துவ விமரிசனம் என்று நினைத்துவிட வேண்டாம்.

கொஞ்சம் அறிவு ஜீவிகளை இழுக்க வேண்டிச் செய்யப்பட்ட ஒரு சின்ன டகல்பாஜி!

தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத நாம், இன்று மனைவியின் கால் பிடித்து, நண்பர் வழியாக டிக்கெட் வாங்கி, ரெக்ஸில் நுழைந்தால், கூட்டம் பரவாயில்லை ரகம்.

படம் ஆரம்பித்த ஐந்து நிமிடங்களில் கதை தெரிந்துவிடும் என்பதால் அதைப்பற்றி இங்கு வேண்டாம்.

ஏறத்தாழ நாம் கூறிய அதே கதைதான், except for a slight variant in the third bullet – I was kicking myself for not seeing it coming!

இருப்பினும், கமல் படத்துக்குக் கதைக்காக மட்டும் போனால் அது நாம் செய்யும் முதல் தவறு.

படத்துக்குள் படம் என்பது கத்தியின் மேல் நடப்பது போன்றது. கொஞ்சம் அசந்தாலும் கஷ்டம். ஜிகர்தண்டாவில் அதைத் திறம்படச் செய்திருந்தார்கள்.

அந்தக் கத்தி மேல் நடந்து…

 • சாகாவரம் என்பது சந்தர்ப்ப சூழ்நிலைகளால்தான், மந்திர தந்திரங்களால் இல்லை.

அதை…
 • முற்றும் துறந்த ஞானிகள் பெறலாம் அல்லது
 • காலத்தால் அழியாத இலக்கியம் படைத்தோர் பெறலாம் அல்லது
 • மக்களை மகிழ்விக்கும் கலைஞர் பெறலாம்...
என்று தன் பட வாழ்க்கையில் மனோரஞ்சனும் படத்துக்குள் படத்தில் உத்தமனும் ஸ்தாபிக்கிறார்கள்.

பிடித்த ஆறு:
 1. கமல் நடிப்பல்ல – கவிதை! அடுத்த வருடத்தின் சிறந்த பாடல்களுக்குரிய தேசிய விருது பெறுவது நிச்சயம்!
 2. எம்.எஸ்.பாஸ்கர் – அருமையான நடிப்பு – இவரை இன்னும் கொஞ்சம் யூஸ் பண்ணுங்கப்பா!
 3. அற்புதமான மேக்கப் மற்றும் கலை – மச்சி! ஒப்பனை & art direction!
 4. இசை – கிப்ரான் நிஜமாகவே கலக்கியிருக்கிறார் – அதுவும் கமலும் அவர் மகனும் பேசும் அந்தக் காட்சியில் அவர் இசையே இல்லாமல் அசத்தியிருப்பது, வாவ்!
 5. படம் நெடுகிலும் வசனங்களில் பளிச்சிடும் நகைமுரண் (கண்ணு laughable irony!)
 6. கடைசியாக, அந்த வில்லுப்பாட்டும், நடனங்களும்… அப்பப்பா! பல பாடல்களில் கமல் ஆட வந்ததுமே நடனத்தின் தரம் சட்டென பல மடங்கு உயர்வது so evident!


 “இன்னும் கொஞ்சம் கவனித்திருக்கலாமே” இரண்டு:
 1.     நடிப்பு - கமல், ஊர்வசி, எம்.எஸ்.பாஸ்கர் தவிர…ம்ஹூம்!
 2.     எட்டாம் நூற்றாண்டுப் படம் சிறிது அதிக நீளமே என்பது உண்மை 
(என்ன செய்வது, மெயின் படத்தில் இல்லாத நகைச்சுவையையும் பாடல்களையும் அதில் திணித்தாக வேண்டிய கட்டாயம்! மேலும் சொல்ல வந்த கருத்தைப் பிழியப் பிழிய அழுது கொண்டே சொல்லலாம்; இல்லை, சார்லி சாப்ளின் போலே சிரிக்க வைத்துச் சொல்லலாம். இறந்தகாலத்தின் இனிப்பான கசப்பு மருந்து! - கமல் மாதிரியே  புரியாததாக எழுத்திட்டேனோ - பழக்க தோஷம்!)

காஞ்சனாவின் பேயும், ஐயின் சத்தமும், லிங்காவின் அமெச்சூர்த்தனமும் தந்த மூளைக்கட்டிகளுக்கு இது நல்ல ஒரு சிகிச்சை.

போய் ஒருமுறை பாருங்கள்.

யோசிப்பீர்கள், எது வாழ்வு, எது மரணம் என்று!

(நீங்க இவன் என்ன சொல்ல வர்றான்னும் யோசிக்கலாம்! ஒண்ணுமே யோசிக்காம மூளையைக் கழட்டி வச்சிட்டு வேலை செய்யுறதுக்கு அப்படியாவது யோசிச்சா பரவாயில்லை இல்லையா? :-))

Friday, April 17, 2015

உத்தம வில்லன் - கதையும் பாடலும்!


(கொஞ்சம் பொறுமையோட படிச்சீங்கன்னா, கதையையும் கீழே சொல்லியிருக்கேன்!)

முகம்மது கிப்ரான் (சிங்கைத் தொடர்புக்கு விக்கியை நோக்குக!)   'வாகை சூட வா'வில் 'இதாரு?' என்று பார்க்க வைத்தார்.

பிறகு  'வத்திக்குச்சி'யில் 'அம்மா wake me' மற்றும் 'அறி அறி உன்னை' (மற்றொரு சிங்கை கனெக்‌ஷன் - ஷபீர்) வழியாக 'இதப் பார்றா?' என்று நிமிர்ந்து உட்கார வைத்தார்.

இப்போது உத்தம வில்லன்!

சின்ன வயது இளையராஜாவைக் கேட்பது போல் இருந்தது என்று சொல்வதே போதும். மகுடத்தில் சிறகு.

முதல் பாடல் 'சிங்கிள் கிஸ்ஸே லவ்வா' என்று ஆங்கிலமாக ஆரம்பித்தது ஒரு நல்ல சிவப்பு கொய்மீன் (அதாங்க, red herring). 

அதன் பிறகு, திகட்டத் திகட்டத் தமிழ் 
ஓடுகிறது, 
      ஆடுகிறது,
               கொட்டுகிறது, 
                       கொஞ்சுகிறது, 
                               மிஞ்சுகிறது, 
                                         மிரட்டுகிறது.

இரணியன் நாடகம், முத்தரசன் கதை, உத்தமன் கதை என்று அடுத்தடுத்து விடாமல் இசை மழை - நன்றி ஸோஃபியா ஒத்திசைக் குழு

Especially, the coda towards the end of 'Iraniyan kadhai' a-la Broadway musical was superb!

பாடல் வரிகள் அனைத்தும் கமல் - வில்லுப்பாட்டு தவிர - சுப்பு ஆறுமுகம் ஐயா!

ஒரு பானை சோற்றுக்கு இரண்டாக...

1. அந்தாதி வரிகளாய் வந்த 'சாகாவரம்' பாடலில் முத்தாய்ப்பாக - 


வாழும் நாளில் கடமை செய்ய செய்யுள் போல் ஒரு காதல் வேண்டும்

2. இரணியன் நாடகத்தில் இரணியன் பிரகல்லாதனிடம் கேட்கிறான்...


எம் அந்தணர் சொல் கேளாதுஉன் மனம் போல் நீ ஜபித்த பெயர்நாத்திகம் அன்றோ, பிள்ளாய்!...இரணியன் மகனே மதம் மாறுவதா?

If there is anything more ironically delightful...

*****

இப்ப நம்ம கதை ரீலு எப்புடின்னு பார்ப்போம்.


 • மனோரஞ்சன் தற்கால சூப்பர் ஸ்டார்.
 • மனைவி, (ஊர்வசி) மக்கள், மாமனார் (கே விஸ்வநாத்), ஆசான்/இயக்குனர் (கே பாலச்சந்தர்).
 • மனைவிக்கு திடீரென்று உடம்பு சரியில்லாமல் போய்விடுகிறது. சாகக் கிடக்கிறார்.
 • அவருக்காக கமல் தன் டைரக்டரிடம் போய், 'என் மனைவிக்காக, அவள் நினைவுக்காகச் சாகாவரம் கொண்ட ஒரு படம் பண்ண வேண்டும்'. Let us do an eighth century story about a guy who is supposed to have conquered death - உத்தமன். 
 • இது நடக்கும் போது, ஒரு சில காரணங்களால் மனைவியை விட்டு, குடும்பத்தை விட்டு, இன்னொரு பெண்ணின் பின் போய் - probably there is a kidney/organ donation to one of the Parvathis who is probably Jayaram's daughter...and did I say that Andrea is the sexy Dr Aparna? 
 • மொத்தத்தில் வில்லனைப் போல் நடிக்க...

உத்தம வில்லன்!

என்னடா, கதை இவ்வளவு சொதப்பலாக இருக்கிறதே என்று கேட்டால், that is standard Kamal-fare. Raise the expectations to the sky and show you the three-storey building.

But beyond that, the little "big" things that Kamal puts in, those are what make one yearn for his movies. I am open to be surprised and educated!

*****

சிங்கைப் பள்ளிகளில் இப்பாடல்களில் பல தமிழ்ப் பாடங்களாக வருவதற்கு நல்ல வாய்ப்புகள் உள்ளன.

தமிழகத்தில்... (பெருமூச்சு!)

முதலில் விஸ்வ ஹிந்து பரிஷத் தொடங்கிவிட்டது. அடுத்து இந்து முன்னணி. 

ஆஹா! எங்கள் கடவுளை இழிவு படுத்திவிட்டாய்!

விஸ்வரூபமாகட்டும், உத்தம வில்லன் ஆகட்டும், ஒரு பாட்டோ, வசனமோ கடவுளை இழிவுபடுத்துகிறது; உணர்வுகள் பாதிக்கப் படுகின்றன என்று கூறினால், அதைவிட அந்தக் கடவுளுக்கு வேறொரு அவமானம் இருக்க முடியாது.

*****

Really intrigued as usual. Hope not to be disappointed.
May 1st, it shall be!

Saturday, February 2, 2013

விஸ்வரூபம் - போய் பாருங்கப்பா!

If you want in English...

பல நாட்களாக கண்ணாமூச்சி ஆடிக்கொண்டிருந்த விஸ்வரூபத்தை நேற்று தரிசனம் செய்ய முடிந்தது.

பாகவதத்தின்படி, பகவான் விஷ்ணு மூன்று முறை விஸ்வரூப தரிசனம் அளித்ததாகப் படித்த ஞாபகம்.

 1. வாமன அவதாரத்தின் போது மகாபலிக்கு செய்த 'உஷார் பத்தினி ரைட்'
 2. 'ஊசி முனை நிலமும் கிடையாது' என்று அழிச்சாட்டியம் செய்த துரியோதனாதியரை பயமுறுத்த செய்த 'கமாய் பத்தினி கை', 
 3. மற்றும் கீதோபதேசத்தின்போது அர்ஜுனனுக்குத் தான் எவ்வளவு பெரிய அப்பா டக்கர் என்று உணரவைத்தது


இதைத்தான் கமல்ஹாசனும் தன் லேட்டஸ்ட் நூறு கோடி படத்தில் சற்று டாபிக்கலாகக் காட்டியிருக்கிறார் என்று தோன்றுகிறது.
(போச்சுடா! இந்து முன்னணி அடுத்த பிளைட் பிடிச்சு சிங்கப்பூர் வந்து நம்மள தாக்கப் போறாங்க!)

கதைதான் முன்னாடியே சொல்லிட்டோமே? தவிர, படத்தின் மொத்த bound script இப்போது அண்ணா நூலகத்தில் வாடகைக்கு கிடைப்பதாகக் கேள்வி (ஏம்ப்பா? அது இன்னும் நூலகம்தானே? இல்ல, எதாவது கீழ்ப்பாக்கம் ஆஸ்பத்திரியா ஆக்கிட்டாங்களா?). அதனாலே, கதைக்கு மெனக்கெட வேண்டாம்.

தொழில் நுட்பம்: திரும்பத் திரும்ப, ஒளி/ஒலிப்பதிவு சூப்பர், எடிட்டிங் சுமார், ஹாலிவுட் தரம் என்று சொல்லி சொல்லிப் புளித்துவிட்டது. இந்தியத் திரையுலகில் இப்போது (எப்போதும்) நிறைய திறமைசாலிகள் இருக்கிறார்கள். பணம் ஒரு பற்றாக்குறையாக இருந்தது. அதுவும் இப்போது கொஞ்சம் கொஞ்சமாகக் மாறுகிறது. சன்டிவி, விஜய்டிவி என்று தமிழாக்கம் செய்யப்பட்ட பலப்பல ஹாலிவுட் படங்களை மக்கள் பார்ப்பதால், தத்ரூபத்தை எதிர்பார்க்கிறார்கள். அதனால், கண்ணி வெடி, பட்டாசு போல வெடித்தால் உடனே, 'என்னாபா டுபாக்கூர் வுடறான்?' என்று நம்ம ஏகாம்பரமே அங்கலாய்க்கிறான். விளைவு: பஸ் விபத்துக்கள் நடந்தால் நாமே அங்கு இருப்பது போல இருக்கிறது!

ஆதலினால், கமலிடம் எதை எதிர்பார்த்தோமோ அது இந்த டிபார்ட்மென்ட்டில் கிடைத்துவிட்டது. Fully meeting expectations. இருந்தாலும், கடைசிக்காட்சியில் vibrate ஆகும் தொலைபேசியின் அதிர்வுக்கு ஏற்ப சலனிக்கும் ரத்தம் - ரொம்ப டூ மச்!!!

1. வாமன அவதார விஸ்வரூபம்:

கதக் நடன ஆசிரியராக இருந்து (பிறவிக் கலைஞன்யா அவன்!) பின்னர் அந்த கிடங்கில் (அதாங்க, warehouse!), அடிவாங்கி, புகைப்படம் எடுக்க முடியாமல் தவிக்கவிட்டு, ஒவ்வொரு அடிக்கும் Tawfeeq, Nazar என்று தன்னுள் இருக்கும் இருள் சமாச்சாரங்களை கொஞ்சூண்டு காட்டி, கட்டு அவிழ்ந்தபின் 12 செகண்டில் 12 பேரை அடித்து, வெட்டி, கொட்டி, சாத்தும் ரூபம்  அபூர்வம்.இன்றும் ரஜினி ரசிகர்கள் (நான் உள்பட) பாட்ஷா படத்தில் வரும் இதேபோன்ற காட்சியை கண்ணில் ஆனந்த பாஷ்பம் வடிய விவரிப்பார்கள். கமலின் இந்தக் காட்சியும் அது போல வரும் என்பது திண்ணம்.

By the way, படத்தில் இந்த ஒரு காட்சி மட்டும்தான் உண்மையான டிஷூம் டிஷூம் காட்சி. So...

2. அழிச்சாட்டிய விஸ்வரூபம்:

இந்த ரூபத்தைப் பாதிதான் தரிசனம் செய்ய முடிந்தது என்று நினைக்கிறேன். மீதியை V2வில் பார்க்கலாம் என்றே தோன்றுகிறது.

ஆப்கானிஸ்தானில் அல் கொய்தாவிடம் சேர்ந்து, அவர்களிடையே ஒற்று வேலை செய்து, சில பல பேர்களின் கொலைகளைப் பார்த்து, அதற்குக் காரணமாகவும் இருந்து, மனப்பாரங்களை (emotional baggage பாருங்க!) ஏற்றிக் கொண்டு, மீசையில்லாமல் தாடி வைத்துக் கொண்டு, முகமும் மனமும் கருமையாகி, தீவிரவாதத்தின் மூலகாரணத்தின் விளிம்பை மட்டும் தொட்டு வரும் பாதி விஸ்வரூபம் இது.

இந்தப் பகுதியில், ஒரு இயக்குனராகக், எழுத்தாளராக கமலுக்கு நிறைய full tossகள் கிடைத்துள்ளன. இருப்பினும், எல்லாவற்றுக்கும் மைதானத்துக்கு வெளியே அடிக்க ஆசைப்படாமல், நிறைய இடங்களில் நயத்துடன் கையாண்டிருப்பதற்கு ஒரு ஷொட்டு.


 • ஊஞ்சலில் ஏற மறுக்கும் எட்டு வயது சிறுவன் (அவன் இன்னும் சாகலே - V2வில் வருவான் என்பது நம்ம வீட்டு ஹேஷ்யம்!) - அதே சமயத்தில் ஊஞ்சலில் தள்ளிவிடு என்று கேட்கும்  தற்கொலை இளைஞன்
 • 'ஏன் இத்தனை ரத்தம் சிந்த வேண்டும்?' என்று உமர் கேட்கும் போது, 'உன் கேள்வியிலேயே பதில் இருக்கிறது; போர் என்றால் ரத்தம் இருக்கும்.' என்று பலபொருள் பதிந்து கொடுக்கும் இடம்.
 • AK47 குழல் முனையில் அமர்ந்திருக்கும் அந்தத் தேனி/குளவி (பூக்கள் இல்லாத இடத்தில், ரத்தம் கொட்டும் இடத்தில் தேனுக்கு எங்கே போவது? ருசியை மாற்றிக் கொள்ள வேண்டியதுதான்!)


Delicious.

3. அப்பா டக்கர் விஸ்வரூபம்:

சாதாரணமாகவே கீதோபதேசம் கொஞ்சம் bore அடிக்கும் - நல்லது சொல்றாங்க இல்லையா! பொறுமை வேண்டும். பொறுத்தால் பூமி ஆள முடியும். அது போலவே இந்தப் பகுதியை சற்று நிதானத்துடனும், பொறுமையுடனும் பார்க்க வேண்டும்.

மிகவும் கவனமாகத் தீவிரவாதிகளின் நடைமுறைகள், FBIஐ அவர்கள் 'பயன்'படுத்தும் இலைமறை முறை, நிருபாவுக்கும் அந்த போலீஸ் அம்மையாருக்கும் நடக்கும் கடவுள் டயலாக்குகள், ஜிஹாத் என்றால் டக்கென்று சாவதற்குத் தயாராவது மட்டுமில்லை கொஞ்சம் கொஞ்சமாக புற்றால் சாவதற்குத் தயாராவதும்தான் என்றுணர்த்துவது...list goes on.

இவ்வளவுக்கும் காரணம் மதமாக இருக்க முடியாது. நோய்நாடி அதன் முதல்நாடி என்று வள்ளுவர் சொன்னது தான் நினைவுக்கு வருகிறது. இப்படி நினைக்கவைத்த இந்த ரூபத்திற்கு நன்றி.கீதோபதேச விஸ்வரூபம், கிருஷ்ணன் தன் வேலையை இன்னொருத்தன் வாயிலாக செய்ய வைக்கவே காட்டப்பட்டது. அதுபோலவே நிருபமா என்னும் அர்ஜுனனுக்கு Faraday Shield/Microwave idea வரவைத்து உலகைக் காக்க வைத்ததற்காக இந்த ரூபம் ஓகே ;-)

மற்றபடி:

1. இங்கு படத்துக்கு இடைவேளை விடவில்லை. அதனால் கடைசியில் தியேட்டரில் விளக்கு போட்ட பிறகு, நம் வீட்டில் 'போய் பாப்கார்ன் வாங்கிட்டு வாங்க' என்று கூறியதைக் கவனத்தில் கொண்டால், எல்லோரும் படத்தில் ஐக்கியம் ஆகிவிட்டார்கள் என்றே தோன்றுகிறது. இருப்பினும், இவ்வளவு மெதுவான த்ரில்லரை (?) நான் பார்த்ததில்லை.
2. நிறைய பழைய புதிய நட்சத்திரங்கள் (கமலுக்கு ஜரினா வகாப் பிடிக்கும் போல...ஐந்து நிமிடத்துக்கு அம்மா வந்திருக்கிறார்கள்!)
3. ஆப்கானிஸ்தான் பகுதி முழுதும் ஒரு ஆவணப்படம் (Documentary மச்சான்!) போலவே இருந்தது.
4. கமலுக்கே உரித்தான அழகான மெல்லிய நகைச்சுவை
5. கமல் முதலிலேயே இரண்டு பாகமாகப் பிரித்துவிட்டார் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. அதனால், நிறைய கேள்விகள். பதில் வர அடுத்த வருடம் வரை 'வெயிட்டீஸ்'.
6. 'படத்தில் முத்தம் கிடையாது - கன்னத்தில் கூட ! என்ன கொடுமை சரவணன் சார்!' என்று நாம் பேஜார் ஆகும்போது 'கண்ணா! இரண்டாம் பகுதியில் லட்டு தின்னலாம்!' என்று கொடுக்கப்பட்ட உத்தரவாதம் ;-)
7. ஏங்க, இது தமிழ் படம் தானே! தமிழ், ஆங்கிலம், பஷ்தோ, அரபி, ப்ரெஞ்ச், இந்தி, உருது... கண்டிப்பாக V2வில் இந்திய மொழிகளில் இன்னும் 4/5 வந்துவிடும். அதனால், நெய்க்காரன்பட்டியில் படம் ஓடுவது ரொம்பவே கஷ்டம்தான். (அங்க ஏன்! ராயபுரத்துல ஓடுறதே கஸ்டம்ப்பா! கோச்சடையான கூப்புடு! என்று எட்டாம் நம்பர் கடையில் நம்ம ஏகாம்பரம் அலம்பல் கொடுப்பது கேட்கிறதா?)

மொத்தத்தில் கமலின் திரைப்பட வரலாற்றில் இந்தப்படம் நிச்சயம் ஒரு மைல்கல்தான்.
- சும்மா கிடந்த DTH சங்கை எடுத்து ஊதியது
- அல் கொய்தாவைப் பற்றிய இவ்வளவு விரிவான பதிவினால் பெற்ற எதிர்மறை விளைவு
எல்லாவற்றையும்விட:
- இந்தப் படம் அவருக்கு ஒரு பன்னாட்டு அறிமுகத்தைக் கொடுத்துள்ளது என்பது சரிதான். Osborne மாமா இவரை வைத்துப் படம் எடுப்பதாகப் பேச்சு ஓடிக்கொண்டிருக்கிறது. இதனால், அது நடந்தால், கமல் என்னும் பெரும்வீச்சு கொண்ட அற்புதம் நிஜமாகவே நிகழும்.

அதுவரை... ஏழு கட்டோ, எண்பது கட்டோ - போய் படத்தை தியேட்டரில் பார்த்து நம் திரைப்பட கஜானாவை நிரப்புவீராக!

Tuesday, December 11, 2012

வாழ்வின் விகிதங்கள் (Life of Pi Review)

(You may also want to read the English review)
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்

இறைவன் அடிசேரா தார்.

ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நம்ம வள்ளுவர் சொன்னதை நிறைய புலி, கொஞ்சம் வரிக்குதிரை, நிறைய கடல், சின்ன படகு, ரகவாரியாக மீன், காது கொள்ளாமல் தத்துவம் என்று திரு. ஆங் லீ கண்கவர் வண்ண ஓவியமாக வழங்கியிருப்பது: பை படேலின் வாழ்க்கை (Life of Pi).
From NewYorker

 கதை: பாண்டிச்சேரியிலிருந்து வெளிநாட்டுக்கு ஒரு மிருகக்காட்சி சாலை கிளம்புகிறது – அதன் சொந்தக்காரக் குடும்பம் உட்பட. அதில் நம் கதாநாயகன் பை படேலும் அடக்கம். நடுக்கடலில் புயல். உறவுகளை இழந்த பை, படகில் தப்பிக்கிறான். படகில் நான்கு மிருகங்களும் கூட – வரிக்குதிரை, மனிதக்குரங்கு, கழுதைப்புலி, மற்றும் புலி. புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது. அதனால், மற்ற மிருகங்கள் காலி. பைக்கு புலி மேல் பயம். பக்கத்தில் சின்ன படகில் தஞ்சம். பின்னர் சிறிது சிறிதாக இரண்டு பேரும்(?) ஒரு பரஸ்பர அவநம்பிக்கை மற்றும் பயம் கலந்த எழுதப்படாத உடன்படிக்கையின்படி கடல் கடந்து நிலத்தை எப்படி அடைகிறார்கள் என்பதை வெள்ளித்திரையில் காண்க!

பிடித்த எட்டு:

1   இந்த மாதிரிக் கதைகள் வழக்கமாகப் புத்தகமாக வரும். இதுவும் அப்படித்தான். யான் மார்டெல் எழுதிய இந்தப் புத்தகம் ஒரு சூப்பர் டூப்பர் ஹிட் என்று பட்டி தொட்டிகளில் எல்லாம் முழக்கம் இடப்பட்டது. அதே சமயம் அப்புத்தகத்தை திரைப்படமாக ஆக்க முடியாது என்பதும் ப.தொ.எ.மு.இ. அதை எல்லாம் தாண்டி ஒரு இரண்டு மணி நேரம் நம்மைக் கட்டிப் போட்டமை ஒரு சிறிய சாதனை!

2.   அது என்ன மாதிரி ஒளி/ஒலிப்பதிவு சார்? கூண்டுக்குள் அந்த புலி நடந்து வரும் போது அதன் மெல்லிய காலடி ஓசையின் நுணுக்கம், நடுக்கடலில், இரவில், மாபெரும் திமிங்கிலம் பாய்ந்து வரும் வண்ணக்கோலம், அந்தப் பாசித்தீவின் பற்பல ஜகஜ்ஜோதியான காட்சிகள்…முடியலே!

3.   பாம்பே ஜெயஶ்ரீயின் நெஞ்சை உருக்கும் தமிழ்த் தாலாட்டு (சற்று ஏறத்தாழ ‘தென்பாண்டிச் சீமையிலே’வைத் தொட முயன்றது என்றே சொல்லலாம்!)

4.   பைக்கும், ஆனந்திக்கும் இடையே வரும் அந்தப் புதுக்கவிதையான காதல் (அந்தத் தாமரை முத்திரை அபாரம்!)

5.   புஷ்டியாகத் தொடங்கி கடைசியில் நோஞ்சானாக நடந்து போகும் அந்த கிராபிக்ஸ் புலி

6.   படம் முழுதும் விரவிக் கிடந்த மெல்லிய நகைச்சுவை

7.   கப்பலின் புரட்டலால் அவதியுறும் மிருகங்களுக்கு வாழைப்பழத்தில் வைத்து தூக்கமாத்திரை கொடுப்பார்கள். அதுபோல நமக்கும் வாழ்வின் தத்துவங்களை சில/பல காட்சிகளின் வழியே கொடுத்து இருப்பது – பரவாயில்லையே!

8.   கடைசியில் இர்பான் கான் விடும் அந்த இரண்டு துளிக் கண்ணீர்.பிடிக்காத ஐந்து:

1.  அடிக்கடி திரைக்கதையில் வரும் தொய்வு. அதைச் சரிக்கட்ட இயக்குனர் கலர் கலராய் காட்சிகளைக் காட்டி நம்மைத் திசைதிருப்பினாலும்… ம்ஹூம்!

2.   வசனங்கள்! ரஜினி பட பஞ்ச் டயலாக் மாதிரி – விடாமல் வந்து கொண்டே இருக்கின்றன. நன்கு மனப்பாடம் செய்து கொண்டால், ஏதாவது தண்ணி பார்ட்டியில் பீட்டர் விட்டு அலம்பல் செய்யலாம் – முக்கியக் குறிப்பு: இரண்டு பெக் விஸ்கியாவது உள்ளே போயிருக்க வேண்டும் – அப்போதுதான் சீரியசாக எடுத்துக் கொள்வார்கள் J

3.   இது கடவுளைப் பற்றிய படமா, இல்லை தன்னம்பிக்கை பற்றிய படமா என்று அவ்வப்போது எழும் சந்தேகம் – ஒரு வேளை அதுதான் படத்தின் நோக்கமோ என்னவோ?

4.   கிட்டத்தட்ட மூன்று மாதங்களுக்கு மேல் கடலில் இருந்தாலும் பால்மணம் மாறாத பையின் முகம் – நல்ல்ல்ல மேக்கப் சார்!

5.   சில டைரக்‌ஷன் டச் எல்லாம் கொஞ்சம் ஓவர் டைப் – (அந்த பாசித்தீவு ஒரு படுத்திருக்கும் மனிதனைப் போல இருப்பது – மஹாவிஷ்ணு?, “உனக்கு எந்தக் கதை வேண்டும் – கடவுளைப் பார்க்கும் கதைதான் வேண்டும்” என்ற அந்தக் கடைசி காட்சி!...)

மொத்தத்தில் படத்தைத் தராசில் இட்டுப் பார்த்தால் வாழ்க்கையின் விகிதமே மிஞ்சுகிறது. பை படேல்,π (அதுதாங்க, வட்டத்தின் சுற்றளவு / விட்டம்) போலவே பல விகிதங்களின் கலவையாக இருக்கிறான்.
 • தந்தையின் பகுத்தறிவு / தாயின் ஆன்மீகம்
 • புலியிடம் கொண்ட அச்சம் / தைரியம்
 • காதலில் காட்டும் கற்பனை வளமும் / ஆணித்தரமும்
 • கடைசியில் கரைக்கு வந்து அவன் சொல்லும் கதைகளின் (நம்பமுடியாத) உண்மையும் (மற்றவரை நம்ப வைக்க வேண்டிய) நிதர்சனமும்


இப்படிப்பட்ட பை படேலின் வாழ்க்கை நமக்குக் கற்றுக் கொடுக்கும் தத்துவம் நம்பர் 8347 என்னவென்றால்…

வாழ்க்கை முடிவற்றது (π விகிதம் போலவே)
வாழ்க்கை பல்வேறு சமயங்களில் பற்பல மனிதர்களையும் சந்தர்ப்பங்களையும் கொண்டு நம்மைத் தாக்கும்.
சில கொல்லும்; சில கொல்லப்படும்; சில கொல்வதைத் தடுக்கும்; சில தடுக்கக் கொல்லும்.
உன் மனம் வரிக்குதிரையாக இருக்கலாம்; கழுதைப்புலியாக இருக்கலாம்; மனிதக்குரங்காக இருக்கலாம்; புலியாக இருக்கலாம்.
நீ எந்த விலங்காக இருக்கிறாய் என்பது உன் வளர்ப்பைப் பொறுத்து இருக்கிறது.
வாழ்க்கையில் கஷ்டமும் இன்பமும் துக்கமும் மாறி மாறி வரும். ஆனால் எதுவுமே நிரந்தரம் இல்லை.
உன் வாழ்க்கையில் இருந்து எல்லா விலங்குகளும் விலகும்போது நீ பேரின்பம் அடைவாய். (அவை போகும் போது உன்னிடம் ‘போய் வருகிறேன் நண்பா!’ என்று சொல்லாது!)
எப்போதும் கடவுளையும் நம்பிக்கையையும் நம்பு!
ஸோ... மறுபடியும் சொல்லுங்க!: “பிறவிப் பெருங்கடல் நீந்துவர்…”

ஆமீன். ஆமென். ஓம்.