ஞாபகம் வருதே! ஞாபகம் வருதே!


நான் பள்ளியில் படிக்கும் போது சம்பத் என்று ஒரு வேதியியல் (அதாங்க கெமிஸ்ட்ரி!) வாத்தியார் இருந்தார்.


அவர்கிட்ட ஒரு நல்ல பழக்கம். ஒரு கெட்ட பழக்கம். ஒரு பயங்கரமான பழக்கம்.

முதல்ல நல்ல பழக்கம். மிக மிக அருமையாக கெமிஸ்ட்ரி சொல்லிக் கொடுப்பார். நம்மளையே 98 வாங்க வச்சிட்டார்னா பாருங்களேன்! (சரி, சரி, நூல் விட்டது போதும்!). கொசுறாக: கோபமே வராது!

கெட்ட பழக்கம்: கவிதை எழுதுவார். அதை ஒரு மாதிரி கர கர தொண்டையில் பாட்டாக வேற பாடுவார். நமக்கு பிஸிகல் கெமிஸ்ட்ரின்னாலே பயம்; அதுக்கும் மேல பிஸிகல் கவிதைன்னா கேக்கவா வேணும். எனக்கு அந்த ரெண்டு மார்க்கு போனதுக்குக் காரணமே அவர் எழுதின 'அத்தை பெற்ற தத்தை' கவிதைதான்னு இன்னிக்கும் பிள்ளைங்ககிட்ட ரீல் விட்டுகிட்டிருக்கேன். (சத்தியமா, அவர் எண்பதுகளிலேயே, சிம்புவுக்கு முன்னாலேயே, அந்தத் தலைப்பில் கொன்னுட்டாருங்க!)

கடைசியா பயங்கரமான பழக்கம்:


ஏற்கனவே, மெத்தில் ஆல்கஹால் அசிடோனோட கலந்தா என்ன ஆகும்னு வயிறு கலங்கிட்டு இருந்தா, இந்த மனுஷன், 1975ல் என்னுடைய ஸ்டூடன்ட் திருமுருகன், காலாண்டு பரீட்சையில் 87.5 மார்க்கு தான் வாங்கினான்; போன வருஷம் ரகுநாத் ஐஐடி பரீட்சை எழுதற அன்னிக்கு பச்சை சட்டை போட்டிருந்தான் - இப்படி எல்லா விதமான பள்ளி சம்பந்தமான - சம்பந்தமில்லாத புள்ளி விபரங்களையும் விரல் நுனியில், ஸாரி, நாக்கு நுனியில் வச்சிருப்பார்.

இப்ப 25 வருஷம் கழிச்சு போனாக்கூட எனக்கு கடைசி ப்ராக்டிகல் டெஸ்டில் அலுமினியம் சல்fஏட் தான் வந்ததுன்னு சொல்லக்கூடிய பரமாத்மா.

இப்படி எல்லாரையும் எல்லாவற்றையும் நினைவில் வைத்துக் கொள்ள முயன்ற அவர் எங்கே? வீட்டு போன் நம்பரையே மறந்து செல்பேசியில் 'ஹோம்' தேடி நினைவு படுத்திக் கொள்ளும் நாம் எங்கே?


எதுக்கு சொல்றேன்னா, ஓடி ஓடி நம்ம லைப், பேரே மறக்கற மாதிரி ஆயிடுச்சி! ரெண்டு மிக சமீபத்திய உதாரணங்கள்:


1. ஞாயிற்றுக்கிழமை அன்னிக்கு முஸ்தபா சென்டருக்கு என்னவோ (ஆங், பொம்மை!) வாங்கப் போயிருந்தேன்! அப்போ பின்னாலிருந்து, 'ஹாய்! ....' அப்படின்னு யாரோ பேர் சொல்லிக் கூப்பிடவும், யாருடான்னு திரும்பிப் பார்த்தா, யாருன்னே தெரியலே! மைக்ரோசெகண்டுலே மூளைக் கசக்கல். ம்ஹூம், சான்ஸே இல்ல! அப்புறம், ரொம்ப வழிஞ்சிட்டு அவரிடம் பேர் கேக்காமலே பேசி (ஈகோ பாருங்க!) அனுப்பி.... அப்பாடா! அன்னிக்கு ராத்திரி, படுக்கைல மல்லாக்க படுத்து யோசிச்சா, ஒரு மணிக்கு ஞாபகம் வந்தது, அடங்கொக்கமக்கா! வெள்ளிக்கிழமை அம்பயர் மீட்டிங்கிலே சந்திச்ச ஒரு பையனாச்சே அதுன்னு...


2. நம்ம வீட்டுலே ஒரு பகுதி நேரத் தமிழாசிரியரா பக்கத்துல இருக்கிற பள்ளிக்குப் போய் தொண்டு செய்துட்டு வருவாங்க. அவங்க கதை ரொம்ப சுவாரசியமா இருக்கும். அதை இன்னொரு நாள் பார்க்கலாம். ஆனால் போன வாரம் அவங்களுக்கும் மூளையைக் கசக்க வேண்டிய நிர்ப்பந்தம் வந்திடுச்சி. ஸ்கூல்லேர்ந்து நடந்து வந்திட்டிருக்கும் போது, நம்ம அம்பயர் தோழர் மாதிரி ஒரு வாண்டு,

"டீச்சர், டீச்சர்! நான் இன்னிக்கு வகுப்புக்கு வரலியே! நீங்க என்னத் தேடினீங்களா?'

இதுக்கு நம்மாளு மனசுக்குள்ளேயே "யார் இந்த வாலு? பேரும் தெரியலே! கிளாஸும் தெரியலே! பேரு கேட்டா ஈகோ போயிடும், என்ன பண்ணலாம்?' (ஆஹா! என்னப் பொருத்தம்!)

கட்ட கடைசியில, டீச்சரம்மா பையனின் சட்டையை நீவி விடும் சாக்கில், அவன் போட்டிருந்த பெயர் பேட்ஜை நைசாகப் பார்த்து 'ஓ, ஜான்! ஏன் வகுப்புக்கு வரவில்லை? நிறைய பாடங்கள் நடத்தி விட்டேனே!' (சுத்தத் தமிழில பேசணும் பாருங்க!) என்று முடிக்க...


சம்பத் சார் 'எப்பூடி?'ன்னு கேட்கிற மாதிரி இருக்கு!

Comments