உடன்பிறப்பே!
கடும் கழகப் பணிகள்
நெடும் நாட்டுப் பணிகள்
இவற்றுக்கு இடையே
நான் படும் அவதிகள்
இவற்றையெல்லாம் மூட்டை கட்டி
வாருங்கள் சேப்பாக்கத்திற்கு என்று
அழைத்துச் சென்றனர் தம்பிகள்
துரைமுருகனும் நேருவும்.
உனக்குத் தெரியும், உடன்பிறப்பின் வேண்டுகோளை
என்னாளும் நான் தட்டுவதில்லை என்று.
அதுவும் கிரிக்கெட் ஆட்டம்...
நம் தமிழரின் கில்லி விளையாட்டினை அப்படியே ஒட்டி எடுத்தது
என்பது உள்ளங்கை நெல்லிக்கனியாம்.
பின்னாளில் திருக்குவளையிலும் அதைச்
சுற்றி உள்ள காடுகளிலும் நாம் கில்லி விளையாடியதை
இன்று எண்ணிட்டாலும் தெவிட்டா இன்பம்தான்.
அம்பேத்கர் பிறந்த நாளுக்கு முதல் நாளில்
சன் அலைவரிசையின் 17ஆம் ஆண்டு விழாவுக்கு முதல் நாளில்
அவற்றைக் கொண்டாடும் வண்ணம் அருமையான ஆட்டத்தை
சென்னை மக்கள் மகிழக் கொடுத்த பெருமை
எனக்குத் துணை நில்முதல்வருக்கே!
ஆட்டம் தொடங்கிய ஐந்து ஓவரிலேயே
அஞ்சா நெஞ்சன் அசுவின்
வீழ்த்தியது மூன்று வங்காளிகளை!
ஆனால் நடுவர் சைமன் செய்ததோ
மூன்று தவறுகளை!
பின்னால் வந்த சுரேசனும் விசயனும்
சென்னைக்கு ஈட்டித் தந்ததோ
அருமையான இரு புள்ளிகளை!
இருப்பினும் நண்பர் அர்சாவுக்கும்
தானைத் தலைவர் தோணிக்கும்
இந்தத் தமிழன் கூறிக் கொள்வது
ஒன்றுதான்!
நாளை (ஏப்ரல் 14) தமிழ்ப் புத்தாண்டல்ல!
அண்ணாவின் வழிவந்து
தமிழர் திருனாளாம்
பொங்கலையே
எல்லா தமிழரும்
புத்தாண்டாக ஏற்று
ஆண்டுகள் பல ஆகிவிட்டது!
பிரபவ, விபவ என்று
வடமொழிச் சொற்களையிட்டு
அதையே தமிழர் புத்தாண்டு
என்று கொணர்ந்தனர்
ஆரியப் பிரகிருதிகள் அன்று.
ஆனால் அதை எல்லாம்
தமிழன் மறந்து,
இரண்டு ரூபாய் அரிசி,
அடுத்த வருடம் இலவச வீடு,
கண்மணிகளின் கட்டாயத்தில் என் பெயர் இட்ட
கலைஞர் காப்பீட்டுத் திட்டம்
என்று உழைத்து வாழ்கிறான்...
எல்லாவற்றிடினும் மேலாக,
நம் நல்லாட்சியின் பயனாக
கிடைத்த இலவசத் தொலைக்காட்சியின்
வழியாக இன்றைய
வெற்றியை நீ பசிமறந்து
பார்த்திருப்பாய், ரசித்திருப்பாய்,
களித்திருப்பாய், சிரித்திருப்பாய்!
ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்கிறேன்
என்ற அந்தத் தலைவன் அதோ
சேப்பாக்கத்தினின்று கூப்பிடு தூரத்தில்
உறங்குகிறான்.
நீ உறங்கிடாதே! அடுத்த இடைத்தேர்தல்
வருகிறது!
வெற்றி சுலபம் என்று எண்ணாதே!
ஓட்டுக்களை எண்ணு!
நோட்டுக்களை எண்ணு!
கழகத்தின் களப்பணியாளர்களே!
கடமை அழைக்கிறது!
அடுத்த சென்னை வெற்றிக்குக்
கடும் உழைப்பைக் கொடுத்து
கனிவெற்றியைக் கவர்ந்திடுவோம்!
தமிழர் மானத்தைக் காத்திடுவோம்!
அன்புடன்,
மு.க.
Sri-G
ReplyDeleteExcellent stuff. Good pun hidden behind those italicized words.
- Guru