சில சமயங்களில் நமக்கு ஏன் இந்த யோசனை தோன்றவில்லை என்று தலையைச் சொறியும் நிலைமைக்கு நாம் ஆளாகியிருப்போம்.
மலையாள த்ருஷ்யம் (காட்சி/visual) படம் வந்த பிறகு கோலி/டாலி/பாலி/சந்தனவுட் இயக்குனர்களும் எழுத்தாளர்களும் தத்தம் வீட்டுக்குச் சென்று ஓ! என்று கதறியிருப்பர் என்பது திண்ணம். சே! ஜஸ்ட் மிஸ்!
சினிமாவிலேயே இருந்து சினிமாவையே வைத்து சினிமா போலவே நிகழ்வுகளைக் கொண்டு வந்து ஒரு சஸ்பென்ஸ் மற்றும் குடும்பக் காவியம் படைப்பது ஏறத்தாழ கிரீஸ் நாடு தன் கடன்களை எல்லாம் (நேரத்தில்) அடைப்பதற்குச் சமம்!
சரி, அடுத்தது என்ன? ரீமேக் தான்!
கன்னடத்தில், தெலுங்கில், இந்தியில் என்று ஆளாளுக்குப் படம் காட்ட, தமிழில் த்ருஷ்யப்பூனைக்கு கமல் மணி கட்டியிருக்கிறார்.
அழகான, நீரோடை போல் ஒரு வாழ்க்கையில் சுழியாக வந்த ஒருவனைக் கழித்த தன் குடும்பத்தைக் காப்பாற்றும் ஒரு (அ)சாதாரணக் குடும்பத் தலைவனின் கதை - பாபநாசம்/த்ருஷ்யம்/whatever_you_call_it!
பிடித்தவை:
மசாலா, ஆட்டம், பாட்டம், பன்ச் டயலாக் எதுவும் இல்லாத ஒரு படம் ஓடுவதற்கு நடிப்பு/திரைக்கதை/இசைதான் முக்கியம். அதனால் நமது வரிசையில் அவையே இடம் பிடிக்கின்றன.
1. கமலின் மாறுபட்ட நடிப்பு (கடைசிக் காட்சி கொஞ்சம் மலையாளத்தைவிட அழுவாச்சியாக இருப்பினும்,) மற்ற இடங்களில் முடிந்த அளவுக்கு அடக்கி வாசித்து, கண்களாலேயே நிறைய பேசி...அதுவும் தன் குடும்பத்தினரைப் 'புரிந்ததா?' என்று கேட்கும் காட்சியில் எல்லோரையும் அதட்டலாகக் கேட்டுப் பின்னர் தன் குட்டிப் பெண்ணிடம் மட்டும் கொஞ்சலாகக் கேட்டு... தியேட்டரில் இருந்த 40 பேரும் கைத்தட்டினர்!
2. ஆஷா சரத்: கன்றை இழந்த பசுவாக/சட்டத்தைப் (புறம்பாகக்) கையில் எடுக்கும் காவலதிகாரியாக, முகம், உடல், குரல் என்று எல்லா காட்சிகளிலும் கலக்கியிருக்கிறார் அம்மணி! மலையாளத்தில் அவரே செய்ததைவிட நன்றாகச் செய்திருக்கிறார்ர்.
3. கலாபவன் மணி: சர்க்கரை நோயால் மெலிந்து விட்டார் என்று நினைக்கிறேன். ஒரு வில்லனாகவே வாழ்ந்து, தான் கண்டது உண்மைதான் என்று சாதித்துச் சாதித்துக் கடைசியில் அதுதான் உண்மை என்று நிரூபணம் ஆகும்போது விடும் அந்த லுக்கு!
4. கிப்ரான், உத்தம வில்லனில் விட்டதைத் தொடர்ந்திருக்கிறார். முதல் அரை மணி நேரம் - உ.வி.யின் 'கேளாய் மன்னா!' பின்னணி இசைதான். ஆனால், முதன்முதலில் போலீஸ் வரும் போது பிளிறிய எலெக்ட்ரிக் கிட்டாரும், குட்டிப்பெண்ணைப் பெருமாள் விசாரிக்க எத்தனிக்கும் போது கசிந்த வயலினும்... டூரியனில் தேன்!
5. பாபநாசம் பகுதி முழுவதும் பசுமை நேசம்! பச்சை மயம்! ஒளிப்பதிவு துல்லியம்.
6. தமிழில் திரைக்கதை இன்னும் சிறிது வேகமாகச் சென்றது. நகைச்சுவை சற்று அதிகமாகவே இருந்தது. அதனால் இருக்கையில் நெளியத் தேவையிருக்கவில்லை (மூட்டைப்பூச்சிக் கடியைத் தவிர!)
விட்டுட்டீங்களே ப்ரோ:
1. மல்லுவிலும் மனவாடிலும் மீனா கலக்கியிருப்பார். ஆனால் கெளதமி கொஞ்சம் சுமார்தான். அவரிடம் ஒரு கிராமப் பெண்ணுக்குரிய அந்த அப்பாவித்தனம் இல்லாதது உண்மைதான்! (Devar Magan effect lingers?!)
2. வசனங்களில் நெல்லைமணம் சற்று தூக்கலாகவே இருந்ததால், சில இடங்களில் புரிந்து கொள்ள subtitlesஐ நாட வேண்டி இருந்தது. வெட்கம் - நான் என்னைச் சொன்னேன்! ஆனால், ஜெயமோகனுக்கு ஜாமூன் சாப்பிடுவது போல் இருந்திருக்கும். ஆனால் ஓரிரு இடங்களில் மலையாள வசனங்கள் இன்னும் நன்றாக இருந்த ஒரு பிரமை - குறிப்பாக ஆஷா தன் கணவரிடம் போலீஸின் நுண்ணுணர்வு பற்றிக் கூறும் போது, கடைசிக் காட்சியில் இரண்டு தந்தைகளும் பேசும் போது...
3. மலையாளத்தில் போலீஸின் விசாரணைக் காட்சிகளில் இத்தனை வன்முறை இல்லை. இங்கு விரல்களை உடைத்து, பிரஜாபதியை உதைத்து... என்னம்மா இப்படிப் பண்றீங்களேம்மா!
கலைப்பயணம் என்பது கம்பியின் மேல் நடப்பது போன்றது.
அதுவும் ரீமேக் கலைப்பயணம் என்பது கீழே புலியை வைத்துக் கொண்டு மேலே கம்பியில் நடப்பதற்கு =.
நடந்து முடித்தவுடன் - 'அதுதான், முன்னாடியே ஒருத்தன் நடந்துட்டானின்லே!' என்பார்கள். நடக்கவில்லையெனில், புலியின் வயிற்றில் ஜீரணம்!
கமல் நடந்து முடித்து, புலியையும் தன் பக்கம் இழுத்துவிட்டார். நல்ல வேளை!
மற்றபடி லாலேட்டனுடன் ஒப்பு நோக்குதல் தப்பும்மா! அவர் Copa America என்றால், கமல் UEFA Champions League. ஒன்று அழகியல் சார்ந்த அறிவியல். மற்றொன்று அறிவியல் சார்ந்த அழகியல்.
கண்டிப்பாகப் பாருங்கள். கேபிளில் வரலாம்; வரும். அதற்கு முன்பே பார்ப்பது சாலச் சிறந்தது.
ஏன்னா, மாரி பத்து நாளில் வருது பாருங்க! அதற்கான வருமுன் காக்கும் மருந்துதான் பாபநாசம்!
பி.கு. கமல் படம் என்றால் நாத்திகம் இல்லையா என்று கேட்கலாம். உண்டு. ஆனால் அதுகூட நேர்நேர் தேமாவாக... So it is not jarring!
Comments
Post a Comment