For a schizophrenic look at the same movie in English, you can go here.
ராயபுரம் ஏகாம்பரம் வணக்கம் சொல்லிக்கிறேன்.
எப்டி கீறே தலைவா? எந்திரனுக்கு அப்பால உன்னிய பார்த்து ரொம்ப நாளாச்சு.
அதான் கபாலி வந்திடுச்சேன்னு சொல்றியா? கரீட்டுதான்.
நானும் கோபாலும் மட்டும் போலான்னுதான் இருந்தோம். அப்பால வூட்டுல ஒரே ரவுசு. தனலெச்சுமி 'என்னையும் சேகரையும் இட்டுகினு போ'ன்னு அழுதிச்சு.
சரின்னு மருந்துக்கு வச்சிக்கினு இருந்த காசை எடுத்து நாலு டிக்கிட்டு எடுத்தோம். மருந்து எதுக்குன்னு கேக்குறியா? அது ஒண்ணியும் இல்ல, கொஞ்சம் உடம்பு சரியில்ல. போன வருசம் ஒரே வவுத்து வலி. ஜிஎச்சுல நம்ம கோபாலுதான் இட்டுகினு போனான். ஏதோ லிவராமே, அதுல ஏதோ அபீட்டு ஆயிடுச்சாம். இப்ப பரவாயில்ல, தலைவா. இன்னா ஒரே பேஜாரு, சரக்கு அடிக்க முடியாது - ஐயோ, இது மலேசியா சரக்கு இல்லபா, டாஸ்மாக்கு!
ஆல்பட்டுல கூட்டத்த பார்க்க சொல்லோ நம்ம புள்ள சேகருக்கு ஒரே குஜாலாயிடுச்சு. 'அப்பா! பாலபிசேகம் செய்யலாம்ப்பா!'ன்னான். அப்பால நான்தான் வேணாம்னு சொன்னேன். ஆயா பால் வேஸ்டு செய்யக்கூடாதுன்னு சொல்லிக்கீது. அத்தோட எந்திரன்ல உனுக்கு அபிசேகம் செஞ்சி கை உடைஞ்சதையும் சொன்னேன். பையனுக்கு கொஞ்சம் புஸ்ஸுதான். அதுக்காக வுட்டுற முடியுமா?
நீ சொன்னா மாரியே புள்ளைய படிக்க வைக்கிறேன், தலைவா. அஞ்சாவது படிக்கிறான். இங்கிலீஸு இஸ்கூலு! துட்டுதான் சாஸ்தியாவுது. அது பரவாயில்ல. தோ, இப்பதான் எலீக்சன் முடிஞ்சிச்சி. அத்தோட அம்மாதான் ஆ ஊன்னா எதாவது ஃப்ரீயா குடுக்கறாங்களே. இத அத வித்து அஜிஸ்ட் பண்ணுறேன்.
கபாலி படம் சூப்பர் தலைவா!
மொதல் சீன்ல ஜெயில் உள்ளருந்து வர்ரச் சொல்லோ கலக்கிட்டே! அந்த தாடி, கோட்டு, சூட்டு, வாட்ச்சி, மொத தபா 'மகிள்ச்சி'...சூப்பரு!
அதுவும் 'கபாலிடா!' அப்புடீன்னு உதார் காட்டுறப்போ சேகரே ஆடிப் போயிட்டான்!
'அப்பா! இந்த தாத்தா ரொம்ப ஸ்டைலா இருக்காருப்பா!'
நான்தான் தலைல தட்டினேன்: 'டேய், அது தாத்தா இல்லடா! என் தலைவன்டா!'
என்னதான் புள்ளையா இருந்தாலும் உன்னிய வுட்டு குடுக்க முடியுமா?
ஆனா, அதுக்கப்புறம் விசில் அடிக்கவே ரொம்ப நேரம் ஆச்சு, கண்ணு! நீ பாட்டுக்கு ஏதோ இஸ்கூலு நடத்துறியாம். பெரிய தாதாவாம்! தமிளனுக்கு நல்லது எல்லாம் செய்வியாம். அது வரைக்கும் புரிஞ்சுது.
அதுக்கப்பால நிறைய விசயம் பிரியலே! அது யாரு 43? கோசம்ன்றான், கட்டைன்றான், கட்டின்றான், சாவடின்றான், மண்டைன்றான், பொன்னான்றான், ஜோக்குன்றான், காடின்றான்... எது எடுத்தாலும் 'லா, லா'ன்றான்.
இன்ட்ரோல்ல கோபாலுதான் சொன்னான், அதெல்லாம் மலேசியாவுல அப்புடித்தான் தமிள் பேசுவாங்களாம். படா பேஜாரா போயிடுச்சுபா!
ஜீரோ, பொருளு, பவுடரு, தில்லு, தல, கலக்கலு, சூப்பரு, சுமோவண்டின்னு பிரியர மாதிரி சொல்ல வேண்டியதுதானே!
அப்பாலே, நீயும் பொண்ணும் சேர்ந்து உன் வீட்டுக்காரம்மாவைத் தேடி, கடோசில பாண்டிச்சேரியில புடிச்சி, அந்த சீனாக்காரனையும் போட்டுத் தள்ளறதுக்குள்ளோ எத்தினி துப்பாக்கி, எத்தினி குண்டுங்கோ...
நம்மூர்ல 'யூ'ன்னு தாணு டிவில சொன்னாரு! அதுனாலதான் சேகரயும் இட்டாந்தேன். ஆனா இவ்ளோ ரத்தம் பார்த்துட்டு பத்து வயசுப்புள்ள பயந்துடுச்சி. அதுவும் பொட்டியில தினேசு வெட்டுன கையப் பாத்துட்டு, 'அப்பா, ஒண்ணுக்குப் போவணும்'னுட்டான். எப்பவும் தனம்தான் இட்டுகினு போவும். இந்த தபா, நானே அழச்சிக்கினு போனேன். பாவம், தனம் சீட்டுலியே தூங்கிடுச்சி!
எல்லாஞ் சரி! அது இன்னாது அந்த வில்லனுங்க எல்லாரும் அத்தினி கலர் கலரா சூட்டு, சட்டை போட்டிருந்தானுங்கோ? நல்ல, அய்கா, நம்ம சரவணா இஸ்டோருல துணி எடுத்திருக்கலாம்ல?
கிளைமாக்சுல, ஷோபாவுல குந்திக்கினு டோனியாண்ட பராசக்தி வசனம் மாதிரி, 'நான் கோட்டு சூட்டு போடுவேண்டா, கெத்துடா!' ன்னு சொன்னப்போ, தேட்டரே கலகலத்திடுச்சி! ஒரே பிகிலு! எனுக்கு கண்ணுல தண்ணி!
போடணும் தலைவா! நீ சூட்டு போடணும். நான் போடலேன்னாலும் என் புள்ள உன்ன மாதிரி சூட்டு போடணும். தஸ்ஸு புஸ்ஸுன்னு இங்கிலீஸுல பேசணும். அதுதான் எனுக்கும் தனத்துக்கும் வேணும். உன்ன வச்சி அத புரியவச்சதுக்கு நம்ம ரஞ்சித்துக்கு டாங்க்ஸுப்பா!
ஒண்ணு கேக்கணும்னு இருந்தேன், கடோசில பேரு போடச் சொல்லோ, 'டப்புன்னு' துப்பாக்கி சத்தம் கேட்டுச்சே? உனுக்கு ஒண்ணியும் இல்லல்ல! ஒரே 'டர்' ஆயிடுச்சி. அப்பால, கோபாலுதான் சொன்னான். ஒரே ஒரு குண்டு மட்டும் பாக்கி இருந்திச்சாம். அத்த எதுக்கு வேஸ்ட்டு பண்ணனும்னு சுட்டுட்டாங்களாம். அவன் சொன்னா கரீக்டாத்தான் இருக்கும்.
அப்பால தனம் வூட்டாண்ட போய் சமைக்க முடியாதுன்னுடிச்சி. சரின்னுட்டு தலப்பாக்கட்டி பிரியாணி துண்ட்டு இப்போதான் வூட்டுக்கு வந்தோம். சேகரு 'நெருப்புடா'ன்னு பாடிக்கிட்டே, விஜய் டிவியில 'கோடீஸ்வரன்' பார்க்கப் போயிட்டான். நிறைய கேள்விக்கு கரீக்டா பதில் சொல்றான் தலிவா!
எனுக்கு ஒரு யோசனை தலைவா! நீ ஏன் கோட்டு சூட்டு போட்டுகிட்டு சும்மா இஷ்டைலா 'கோடீஸ்வரன்' கேள்வி கேக்கக் கூடாது? இந்தியில நம்ம ஐசுவரியா மாமனாரு அம்மிதாப்பு, செஞ்சாருல்ல? அதே மாதிரிதான். எந்திரன் ரெண்டாவது பார்ட்டு முடிஞ்சதும் ஆரம்பிச்சுக்கலாம். சாவடியா இருக்கும் லா! (அய்யா! எனக்கும் மலேசியா தமிள் ஒட்டிக்கிச்சு!)
உடம்ப பாத்துக்க தலீவா! உன்ன வச்சி இன்னும் நாலு பேரு காசு பாக்கணும்.
இப்படிக்கு என்னிக்கும் உன் ரசிகன்,
ராயபுரம் ஏகாம்பரம்.
பி.கு. பக்கத்து வூட்டு பிரியாதான் இதை கம்பூட்டருல டைப் பண்ணுச்சி! கபாலி டிக்கிட்டும் நெட்டுல வாங்கித் தந்துச்சு. நல்ல பொண்ணு தலைவா அது! தரமணியில வேலை செய்யுது. 'ரெயில்வே டேசன்ல உஷாரா இரும்மா!'ன்னு சொல்லின்னுகீறேன்!
nice comment.
ReplyDeleteகலக்கல்...
ReplyDeleteவெகு நேரம் சிரித்து மகிழ்ந்தேன்..
மகிள்ச்சி!?....
வெகு எதார்த்தமான சென்னைத் தமிழ்.
ReplyDeleteபடித்து முடித்துச் சில நிமிடங்கள் ஆகின்றன. இன்னும் சிரிப்பைக் கட்டுப்படுத்த முடியவில்லை.
நன்றி.