குரு பார்வை – ஆசிரியம்! ஆச்சரியம்!!



(இந்தக் கட்டுரை, சிங்கப்பூர்  ‘தி சிராங்கூன் டைம்ஸ்’ அக்டோபர் 2018 இதழில் வெளிவந்தது)

தொண்ணூறுகளின் நடுவே சிங்கை வந்த புதிது. சுத்தம், தமிழ், கோவில், இந்திய உணவு (வேலு மிலிட்டரிக் கடை, கோமளா விலாஸ், ஜக்கீஸ் என்று ஒரு சிலவே இருப்பினும் நாக்கு சாக வழியில்லாமல் போனதுக்கு வீரமாகாளியம்மனுக்கு நன்றி சொன்னது நினைவில் இருக்கிறது!)

மேலும், தமிழகத்திலிருந்து கொள்முதல் செய்யப்பட்ட திரைப்படங்கள் ஓரளவுக்குப் பொழுதுபோக்குத் தாகத்துக்கு தண்ணீர் அளித்தாலும், எஸ் பீட்டர், ரே சோமசுந்தரம் போன்றோர் வானொலியில் பேசிய பைந்தமிழும் (’இளைஞர்’ என்பதற்கு பதிலாக ‘இளையர்’ என்ற சொல் கேட்டு மகிழ்ச்சியுடன் வியந்தது மற்றொரு நிகழ்வு!). கூடவே ஒளிவழி 5ல் ஒவ்வொரு நாளும் சில மணி நேரமே ஒளிபரப்பப்பட்டு வந்த தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மக்களின் மாலைகளுக்கு இன்னொரு பரிமாணத்தை அளித்தன. அதிலும் வாரந்தோறும் ஒளியேறிய தமிழ்த் திரைப்படங்களும், இசை நடன நிகழ்ச்சிகளும் மக்களின் மனதை மயக்கியே வைத்தன.

உள்ளூர் நாடகங்கள், அதாவது சிங்கப்பூரில் எழுதி தயாரிக்கப்பட்டு சிங்கப்பூரர்கள் நடித்து அளித்த நாடகங்கள் பெரும்பாலும் குறுநாடகங்களாக அதிகபட்சம் இரண்டிலிருந்து ஐந்து பாகங்களாக வழங்கப்பட்டன. இதற்குரிய மிகப் பெரிய காரணம் – பணம்… சரி, அது இன்னொரு நாள் திண்ணைப் பேச்சுக்கு!
அவற்றுள் குருபார்வை நாடகத்தொடரும் ஒன்று. 2004, 2008, 2009 ஆகிய ஆண்டுகளில் மூன்று பருவங்களாக வந்த குருபார்வை, சற்ற்ற்று காலத்துக்குப் பின் இவ்வாண்டு நான்காவது பருவமாக மீண்டும் திரைக்கு வந்தது. டிடி தவமணி இயக்கிய இஃது, ஏறத்தாழ 13 வாரங்கள், திங்கள் முதல் வியாழன் வரை 45 அத்தியாயங்களாக வந்த குருபார்வை தற்போதைய, மாணவர்கள் மீது, பள்ளிகள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், சமூகம் என்று எல்லா பக்கங்களிலிருந்தும் வரும் தாக்கத்தை வெளிப்படுத்த முயன்றிருக்கிறது.

கதை

கோரல் உயர்நிலைப் பள்ளி என்ற ஒரு சிங்கப்பூர் (கற்பனைப்) பள்ளியில்  இருக்கும் மாணவர்களை மையமாக வைத்து இந்தத் தொடர் புனையப்பட்டுள்ளது.
சென்ற பருவத்தில் துப்பாக்கிக் குண்டு வாங்கி உயிர் பிழைத்த பள்ளி முதல்வர் ரமேஷ் மீண்டும் இப்பள்ளிக்கு  முதல்வராக வருகிறார். மாணவர்களின் நலனைக் கருதி பற்பல முயற்சிகளை எடுக்கும் அவர், சத்யா என்ற புதிய ஆசிரியரை வழிதவறிய மாணவர்களைச் சரி செய்ய ’தண்டனை’ வகுப்புகளுக்குப் பதிலாக தன்முனைப்பு வகுப்புகளை நடத்தச் சொல்கிறார். இது அப்பள்ளியின் துணை முதல்வருக்கும், ‘அடி உதவுவது போல் அண்ணன் உதவமாட்டான்’ என்று நினைக்கும் டிசிப்ளின் ஆசிரியருக்கும் பிடிப்பதில்லை. வழிதவறிய மாணவர்கள், ஏன் அப்படி ஆகிறார்கள்? அதில் பெற்றோரின் பங்கு என்ன? ஆசிரியர்கள் என்ன பெரிய அப்பா டக்கர்களா? சமூக ஊடகங்கள் படுத்தும் பாடு என்ன? சத்யா மாணவர்களுக்கு வழிகாட்டினாரா? இது போன்ற கேள்விகளுக்கும் இன்னும் பலவற்றிற்கும் பதிலுக்கு டாகிள் (Toggle) இணையத் தளத்தை நாடவும்!

ஒரு விதத்தில் மாணவர்கள் வழிதவறுவதற்கான எல்லா காரணங்களையும் விலாவாரியாக ஒன்று விடாமல் இத்தொடர் காட்டிவிட்டது என்பதை என்னால் புக்கிட் தீமா மலை மேலேறிச் அறைகூவ முடியும்.

பிரச்சினை வாங்கலையோ பிரச்சினை! 
  • பள்ளிப்பருவத்திலேயே மதுப்பழக்கம், புகைப்பழக்கம். போதைப் பொருட்களை விற்பது,
  • கடைகளில் திருடுவது,
  • பதின்ம வயது ஈர்ப்பைக் காதல் என்றுக் கண்மூடி எண்ணிக் காமுறுவது,
  • கத்தி கபடா என்று ஆயுதமேந்தி வீரம் காட்டுவது,
  • பேனாவில் உள்ள புகைப்படக்கருவி மூலம் பெண்களின் அந்தரங்கக் காட்சிகளைக் காணொளி எடுத்துப் பரப்புவது,
  • அளவுக்கு அதிகமாக கணினி விளையாட்டுக்களில் மூழ்கி தன்னை மறந்து உயிருக்கு ஆபத்தான செயல்களில் ஈடுபடுவது,
  • பணத்துக்காக சட்ட விரோதமானச் சூதாட்டத்தில் இறங்கிப் பணமிழந்து, கடன் திருப்பக் கட்டப் பணமின்றி கடன் முதலைகளுக்காக இன்னொருவர் வீட்டின் கதவில் சாயம் கொட்டி, O$P$ என்று எழுதுவது,
  • தன்னைத் தட்டிக் கேட்கும் பள்ளி அலுவலரையே ’பளார்’ என்று அறைவது,
  • தன்னுடைய Instagram படத்துக்கு ஒரு விருப்பம் தெரிவித்ததால் ஆசிரியருக்குத் தன் மேல் காதல் என்று மிக விசேஷமாக நினைத்து அவர் பின்னால் சுற்றுவது,
  • தனக்குப் பிடித்த இன்னொரு பள்ளி மாணவனுக்குத் தன்மேல் ‘காதல்’ இல்லை என்று தெரிந்தவுடன் தற்கொலைக்கு முயற்சிப்பது,
  • ‘கூடா நட்பு கேடில் முடியும்’ என்று படித்துக் கொண்டே ‘பெரிய தலை’, ‘மண்டை’ என ரெளடிகளின் பின்னால் அலைந்து அவர்களின் கையில் சிக்கிச் சின்னாபின்னமாவது,
  • சமூக ஊடகங்களின் வழியாக ஏதோவொரு மாணவரைக் குறிவைத்துக் கேலி செய்து, கிண்டலடித்து, ‘அடிப்பேன், உதைப்பேன்!’ என்று பயமுறுத்தி வாழ்வை ரணகளமாக்குவது,

இப்படி இக்காலத்தில் மாணவர்கள் படும் பாடு கொஞ்ச நஞ்சமில்லை.

அதையும் தாண்டி,
  • தாமதமாக வந்தால் தடியடி, உரக்கப் பேசினால் உதை, ஆடினால் தப்பு, பாடினால் தவறு என்று ஆசிரியர்களின் கிடுக்கிப்பிடி கெடுபிடி,
  • ‘என்னுடைய அந்தப் பள்ளியில் மாணவர்கள் இன்னும் நன்கு செய்தார்கள். அதனால் இங்கும் அவர்கள் அப்படியே செய்ய வேண்டும். அவர்கள் கசக்கிப் பிழியப்பட வேண்டும்.’ என்ற சரி போல் தோன்றும் தவறான அணுகுமுறை,
  • தான் சமூக ஊடகங்களில் செய்யும் சிலபல செயல்களின் விளைவின் தாக்கத்தை உணராமல் இருக்கும் ஆசிரியர்களின் மேம்போக்குத்தனம்,
  • தன் பிள்ளை உலகையே ஆள வேண்டும், அதற்குப் படித்துக் கொண்டே இருக்க வேண்டும். தன்னைப் போல ஏமாளி ஆகிவிடக் கூடாது என்று தாய்ப்பால் அளித்த அன்னையே புலிப்பால் அருந்தியது போல குழந்தையிடம் வீராவேசம் காட்டுவது,
  • கணினி விளையாட்டு என்பது ரத்த அழுத்தம், இனிப்பு நோய் போன்று ஒரு நோயாக ஆகக் கூடியது என்பதை உணராமல், ‘வா கண்ணா! நீயும் விளையாடு!’ என்று கூறும் தந்தையால் ஏற்படும் விபரீதம்,
  • கோப்பிக் கடையில் அளிக்கப்படும் தேநீரில் சர்க்கரை சற்று அதிகம் என்பதற்காக அதீதக் கோபம் கொள்ளும் ஒரு தந்தை, தன் பிள்ளை பள்ளியில் நூலகரை அடித்தது கேட்டு ‘இவனுக்கு ஏன் இவ்வளவு கோபம் வருகிறது?’ என்று கேட்கும் அப்பாவித்தனம்,
  • ஆசிரியர்களுக்கிடையே நடக்கும் அரசியலால் வகுப்பில் பாடம் பாதிக்கப்படும் அவலம்,
  • தன் பள்ளியைச் சேர்ந்த மாணவிக்குத் துணைப்பாடம் நடத்தக் கூடாது; அதனால் சிக்கல் ஏற்படும் என்பதை அறிந்தும் அதைச் செய்யும் அறிவீனம்,

இதையும் தாண்டி…

  • புறாக்கள் இடும் எச்சத்தால் படும்பாட்டிற்கு, தங்களாலேயே எளிய முறையில் முடிவு காண முடியும் என்று காட்டும் புத்திசாலித்தனம்,
  • தன்னால் பணம் இழந்த பாட்டி நடத்தும் கடைக்குச் சேவை செய்து அக்கடனைத் தீர்த்தாலும், அன்புக்குத் தலைவணங்கும் பண்பு,
  • தன்னையும் தன் குடும்பத்தையும், அதன் பின்னணியையும் அறிந்து அதற்கேற்றாற்போலத் திருத்த முனையும் ஆசிரியருக்காக உயிரைக் கொடுத்து வேலை செய்யும் விடாமுயற்சி,
  • தன் நண்பர்களுக்காக தன்னால் முடிந்ததைத் தாண்டியும் உதவச் செல்லும் பாங்கு,
  • தோல்வி தொடர்ந்து அடித்தாலும் எங்களால் துவளாமல் மீண்டும் எழுந்து வரமுடியும் என்று காட்டும் அந்தக் கம்பீரம்,

இப்படி மாணவர்கள் காட்டும் அந்த அற்புதமான பண்புகளே இந்த நாடகத்தைத் தொடர்ந்து காண எம்மைக் கட்டிப் போட்டன.

இருப்பினும், 45 அத்தியாயங்களும் தொடர்ந்து அறிவுரை மேல் அறிவுரையாகத் தொடுத்து வந்த திரைக்கதை சற்று சலிப்படையச் செய்தது. அதுவும் மேற்கூறிய பிரச்சினைகள் ஒன்றன் பின் ஒன்றாக அடுக்கி வைக்கப் பட, நமக்கு, ‘ஐயகோ! வாழ்க்கை என்றால் இவ்வளவு பிரச்சினைகளா? நல்லதே இல்லையா?’ என்ற ஐயம் மீண்டும் மீண்டும் எழாமலில்லை. மேலும் இவை அனைத்தையும் கதையில் புகுத்த வேண்டிய கட்டாயம் என்ன என்றும் தோன்றியது. ஏதேனும் நான்கைந்து பெரிய கூறுக்களை எடுத்து அதை இன்னும் அழுத்தமாக, ஆழமாகக் காட்டி, ஒரு ஆவணப்படம் பார்க்கும் உணர்வைத் தவிர்த்திருக்கலாமோ என்ற ஏக்கம் எழுந்தது உண்மைதான்.

சில வருடங்களுக்கு முன் ‘வெற்றி’ என்ற ஒரு தொடர் வசந்தத்தில் ஒளியேறியது. அதில் வெற்றி என்னும் ஆசிரியர், எந்த ஒரு பிரச்சினையையும் பேசியே தீர்ப்பது போல திரைக்கதை அமைந்திருக்கும். இதனால், பிராட் பிட், ஏஞ்செலினா ஜோலி இருவரும் அச்சமயம் விவாகரத்து செய்த போது, அவர்கள் மீண்டும் சேர  வெற்றியிடம் ஆலோசனைக்கு வரவேண்டும் என்று சிங்கைத் தமிழர்கள் மீம் பல பதிப்பித்தார்கள்! அது போலவே, இனி மாணவர்களின் பிரச்சினைகளையும் பெரும்பாலும் பேசியே தீர்க்க குருபார்வையின் சத்யா ஒரு அருமருந்தாக இருப்பார் என்பது திண்ணம்! பேச்சு அவ்வளவு முக்கியம் நண்பர்களே, அவ்வளவு  முக்கியம்!

இக்குறைகளைத் தாண்டி, மாணவர்களைப் பண்படுத்த நாடகத்தால் முடியும் (SYF-னால் என்ன பயன் என்று கேட்கும் மேற்குடி மாணவர்களுக்குச் சரியான பதிலடி!), எல்லாம் உள்ள மாணவர்களுக்கும், வீடு, அன்பு, பெற்றோர், வசதி இப்படிப் பலவும் இழந்த மாணவர்களுக்கும் இடையே உள்ள வேறுபாட்டை விளக்கச் செய்யும் அந்த அடிமேல் அடி எடுத்து வைக்கும் பயிற்சி, அங்கும் இங்கும் ஓடும் மனதை ஒருமுகப் படுத்த தியானம் உதவும் என்று கூறியது என்பன மனதில் நின்றன.

என் நாடக குரு செல்வா, குணசீலன், மஞ்சு, ரேணு தெரேசா, புரவலன், கார்த்திகேயன் சோமசுந்தரம், நித்தியா ராவ், விக்னேஸ்வரி, தவநேசன், உதய செளந்தரி என்ற வசந்தப் பட்டாளத்துடன் சில மலாய், சீன நடிகர்களும் நடித்த இத்தொடரின் மிகப் பெரிய பலம் மாணவர்களாக நடித்த அந்த இளையர்கள்தான்.

நடிப்பில் சிறிதும் பயிற்சியில்ல அவர்களைப் பண்படுத்தி நடிக்க வைத்து, இயல்பாக இருக்க வைத்து, கோரல் பள்ளிக் குழந்தைகளாகவே அவர்களை மாற்றியது ஒரு சாதனைதான்.

அதிலும் கொஞ்சம் வெட்கம், கொஞ்சம் அசட்டுத்தனம் என்று கலந்த படிப்பாளியாகவும், கணினி விளையாட்டால் நினைவு பிறழ்ந்து வாழும் மாணவனாகவும் இரட்டை வேடம் தரித்து நடித்த ஹரன் மற்றும், ‘டேய்! நானும் பாய் அண்ணனுடன் சேரணும்டா!’ என்று விபரீதத்தை விலை கொடுத்து வாங்கிய நெத்திலியாக நடித்த அந்த மாணவனும் என் நினைவில் நிற்கிறார்கள்.

இந்தக் கூட்டத்திலிருந்து சிலபல நற்திறமைகள் சிங்கப்பூர் தமிழ்க் கலை உலகுக்குக் கண்டிப்பாகக் கிடைக்கும் என்பது என் நம்பிக்கை.

கோரல் பள்ளி முதல்வர் ஒரு அழகான, முத்தாய்ப்பு வசனத்தை அளிப்பார்:

ஒவ்வொருவரிடமும் ஒரு அழகு இருக்கிறது!
நிறைய திறமைகள் இருக்கின்றன!
அவற்றை வெளிப்படுத்த வேண்டும்! 
இன்றைக்குச் சிறகடித்துப் பறக்கும் பட்டாம்பூச்சி கூட ஒரு நாள் புழுவாகத்தான் இருந்தது.

நம் மாணவர்களிடம், நம் ஆசிரியர்களிடம், நம் பெற்றோரிடம், நம் சமூகத்திடம் இந்த வசனமும் அதன் உட்பொருளும், செவ்வெனே சேரவேண்டும் என்ற அவாவுடன் குருபார்வை அளிக்கப்பட்டுள்ளது. ஓரளவுக்கு வெற்றியும் பெற்றிருக்கிறது. காத்திருப்போம் அடுத்த பருவத்துக்கு!


Comments

  1. ஆழ்ந்த தீர்க்கமான விமர்சனம் ஸ்ரீஜி. இது சிராங்கூன் டைம்ஸில் வெளிவரும் முதல் வசந்தம் நாடக விமர்சனம். என நினைக்கிறேன். வசந்தம் நாடகங்களை தொடர்ந்து பார்த்ததில்லை என்பதாலேயே என்னவோ குருபார்வை போன்ற நாடகத்தின் பருவங்கள் விபரங்கள் புதியதாய் எனக்கு இருக்கின்றன.. சிங்கப்பூர் வாழ்வியல் அடிப்படையாகக் கொண்டு கட்டுரை, கதைகளைக் கொண்டு வரும் சிராங்கூன் டைம்ஸ் மாத இதழுக்கு சிங்கப்பூர் வாழ்வியலை அடிப்படையாகக் கொண்ட நாடகத்தின் விமர்சனங்கள் இன்றைய சமூகத்தின் பார்வை பற்றிய வெளிச்சம் வலுப்பெறும் என நினைக்கிறேன்.

    கட்டுரைக்கும் நாடக விமர்சனத்திற்கும் பெரும் நன்றிகள். Srig Laks

    ReplyDelete

Post a Comment