கொரோனாவும் காவடியும்


#தைப்பூசம் #சிங்கப்பூர்

இன்று காலை வேலை நிமித்தம் தெற்குப் பக்கம் போன போது, சிராங்கூன் சாலையின் நுனியில் இருக்கும் மெட்ராஸ் உட்லேண்ட்ஸில் சாம்பார் இட்லி சாப்பிட சபலம் வந்தது. சரி என வண்டியை அப்பக்கம் திருப்பினவுடன்தான் நினைவுக்கு வந்தது – ‘ஆஹா! இன்னிக்குத் தைப்பூசமாச்சே! டேக் டைவர்ஷன்னு நம்மளை திருப்பதிக்கே அனுப்பிடுவாங்களே’ன்னு!

இருந்தும் தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தனாகப் போனேன். நல்ல வேளை, அவ்வளவு மோசமில்லை. வண்டியை நிறுத்திவிட்டு இட்லி விழுங்கி, வெளியே வந்தால் எங்கும் காவி வண்ணத்தில் பக்தர்கள், டிசைன் டிசைனாய்க் காவடிகள், பால்குடங்கள், ’அரோகரா’ முழக்கங்கள்!
சிங்கப்பூரிலும் மலேசியாவிலும் புலம் பெயர்ந்து வாழும் தமிழர்கள் கொண்டாடும் மிகப்பெரிய விழா தைப்பூசம். நேர்த்திக்கடன் செலுத்துவதற்கு மனதை ஒருநிலைப்படுத்தி மெய்வருந்தி/வருத்தி காவடியும் பால்குடங்களும் எடுத்துச் சென்று முருகப் பெருமானுக்கு அளிப்பதன் மூலம் அவன் கொடுத்ததற்கு நன்றியாகவும் / கொடுக்கப் போவதற்கு அச்சாரமாகவும் மக்கள் கொள்கின்றனர் என்றே சொல்லலாம்.

அதிகாலையிலிருந்து சிராங்கூன் சாலை ஸ்ரீ ஸ்ரீநிவாஸ பெருமாள் ஆலயத்திலிருந்து பக்தர்களும் காவடிகளும் கிளம்பி ஏறத்தாழ மூன்றரை கிலோமீட்டர் நகரின் முக்கிய சாலைகளின் வழியே நடந்து டேங்க் சாலையில் இருக்கும் ஸ்ரீ தெண்டாயுதபாணி கோவிலை அடைவர். வழி நெடுக சீனர், மலாய், இந்தியர் என வேடிக்கை பார்க்க வந்தவரும் பக்தியில் திளைக்க வந்தவரும், கூட்டத்தையும் போக்குவரத்தையும் கட்டுப்படுத்தும் நீல ஆடைக் காவலர்களும் கலந்துகட்டி ஒரு சீரிய அனுபவம்தான்.

இவ்வருடம் கொரோனா வைரஸின் தாக்குதலால் கொஞ்சம் பக்தியின் தாக்கம் குறைவாக இருக்கும் என்று நினைப்பின், ‘கந்தனே கொரொனாவிற்கு அப்பன்!’  என்று மக்கள் எண்ணியதால் கூட்டம் கொஞ்சம் அதிகம்தான் என்று தொண்டூழியர்களில் ஒருவர் கூறினார்.
இருப்பினும் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிக அளவில் செய்யப்பட்டது தெரிகிறது. அங்கங்கு கை கழுவும் இடங்கள்; கிருமி நாசினிக் குடுவைகள் (hand sanitizer dispensers); ஒரேயடியாக அனைவரையும் நடந்து செல்ல அனுமதிக்காமல் சின்னச் சின்ன குழுக்களாக அனுப்புதல் (இது ஓவ்வொரு வருடமும் வழக்கத்தில் இருந்தாலும், இம்முறை இன்னும் கவனமாக நடந்ததைக் காண முடிந்தது.)






கொசுறுச் செய்திகள்:
1.        சிங்கப்பூரில் பல ஆண்டுகளாகத் தைப்பூசம் பொது விடுமுறையாக இருந்தது. (இப்போதில்லை)
2.        சிங்கப்பூரில் தைப்பூசம், பங்குனி உத்திரம், தீமிதி இந்த மூன்று பண்டிகைகளுக்கு மட்டும்தான் பாத யாத்திரையாக (அதுவும் முக்கிய சாலைகளினூடே) சென்று நேர்த்திக்கடன் அளிப்பதற்கு அனுமதி உண்டு. மற்ற இன மதப்பண்டிகைகளுக்குக் கிடையாது.
3.        சில ஆண்டுகளுக்கு முன்வரை காவடி தூக்கிச் செல்லும்போது இசைக்கருவிகள் இசைக்க அனுமதி இல்லை. காரணம்: இசையிருந்தால் ஆட்டம் வரும்; ஆட்டமிருந்தால் கூட்டம் வரும்; கூட்டமிருந்தால் நெரிசல் வரும்; நெரிசலிருந்தால் கோபம் வரும்; கோபம் வந்தால்… இப்போது ஒரு சில இடங்களில் மட்டும் அனுமதி. அது தவிர வழி நெடுக நூறு மீட்டருக்கு ஒன்றென ஒலிபெருக்கிகள் கோரஸாக ‘நீயல்லால் தெய்வமில்லை!’ என்று சீர்காழியை – இல்லை – பக்தியைப் பரப்பிக் கொண்டிருக்கின்றன!
4.        பொதுவாக, இந்தியாவைவிட இங்கிருக்கும் காவடியாளர்கள் மிகவும் பக்தியுடன் இருப்பதைப் பார்க்கிறேன். வேளைக்கு மூன்று வித இறைச்சி உண்ணும் நண்பர்கள், தைப்பூசம் என்றவுடன் கடும் விரதத்துடன் மது, மாது, மாமிசம் என்று எல்லவற்றையும் மறுத்து மால்மருகனை மன்றாடுதல் ஒரு பாடம்தான். (சில பல புல்லுருவிகளும் உண்டு என்பதையும்…)

கடைசியில் காவடிகளைக் கடந்த பின், கூட வந்த மகள் அடித்த கடி:

She: Which is the mammal in the sea?
Me: தெரியலையே?
She: வேல்! வேல்!
Me: ஙே!

Comments