தில்லியும் கல்வியும்

#தில்லி #கல்விப்புரட்சி



அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியா வந்துள்ளார். சேரிகளைச் சுவர் கட்டி மறைத்தார்களா என்று தெரியாது. ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் மொதேரா கிரிக்கெட் அரங்கை அடைந்து டிரம்ப் டெண்டுல்கரை ‘சூச்சீன் டெண்டோல்கோர்’ என்றும் கோளியை ‘விரோட் கோலி’ என்றும் கூற, அதற்கு பதிலாக திரு மோடி அவரை ‘டோலன் டிரம்ப்’ என்று கலாய்க்க, விஜயம் களை கட்டியது.

ஆனால் இப்பதிவு அவர்களைப் பற்றியது இல்லை. இன்று அதிபரின் மனைவி மெலனியா டிரம்ப் தில்லியில் உள்ள அரசுப் பள்ளிக்குச் சென்று அங்குள்ள ‘மகிழ்ச்சி’ வகுப்பில் பங்கு எடுப்பதாக வந்திருந்த சின்னப் பெட்டிச் செய்தி என்னைக் கவர்ந்தது.

அது என்ன ‘மகிழ்ச்சி வகுப்பு’?

கொஞ்சம் கூகுளிடக் கிடைத்தது மேலே கொடுக்கப்பட்டுள்ள #காணொளி. #TEDx

கடந்த ஐந்து ஆண்டுகளாக தில்லியின் அரசுப் பள்ளிகள் மிகச் சிறப்பான முறையில் மேம்படுத்தப்பட்டு இருப்பதை அரசல் புரசலாகப் படித்தும் கேட்டும் இருந்த எனக்கு இந்த வீடியோ ஒரு கண் திறப்பானாக இருந்தது என்றே கூற வேண்டும்.

அரசுப் பள்ளிகள் என்றாலே நம் எல்லோருக்கும் நினைவுக்கு வரும் அத்துணை பலவீனங்களும் குறைகளும் தில்லியிலும் இருந்தன. இன்னும் சொல்லப் போனால், ஆக மேலதிகமே் என்று கூறுவேன். தமிழகத்தில் சில அரசுப் பள்ளிகளேனும் தகுதியுடையவனவாக இருக்கின்றன என்று படித்தும் சில சமயங்களில் பார்த்தும் இருக்கிறேன். பெருங்காய டப்ப எஃபெக்ட்?

ஆனால் ஏறத்தாழ மூன்றில் இரண்டு குழந்தைகள் செல்லும் தலைநகர் தில்லியின் அரசுப் பள்ளிகளே கவனிப்பாரற்றுச் சீரழிந்து கொண்டிருந்தன என்பது ஒரு செய்தியாகக் கூட இல்லாமல் மறக்கப்பட்டு வந்துள்ளது.

அப்படிப்பட்ட பள்ளிகளை எப்படிச் சரி செய்ய முடிந்தது என்பதை வெள்ளித் திரையில் காண்க!

இருப்பினும், 17 நிமிடங்களைச் செலவு செய்ய முடியாதோர், ’இதெல்லாம் வெளிநாட்டுலதாம்பா நடக்கும்!’ என்று நம்பிக்கையற்று அடுத்த பதிவுக்குச் செல்வோர், ‘எல்லாம் மார்க்கெட்டிங் சாமி!’ என்று குற்றம் கூறுவோர் – இவர்களுக்காகச் சில வரிகள்…

முதலில் அங்கு படிக்கும் செல்வங்களுக்கு அவர்களின் #கண்ணியத்தைக் காக்கும் வண்ணம் அவர்கள் பள்ளிகளைச் சுத்தப்படுத்தி (பள்ளி இருக்கும் ரோடு முழுக்க மூத்திர வாடையை அடக்க வாளி வாளியாக ஃபினைல் ஊற்றி இருக்கிறார்கள்!) அவர்களின் பள்ளிகளைப் பற்றிய #கர்வத்தை ஏற்படுத்தியிருக்கிறார்கள் #DignityMatters

அதுமட்டுமல்ல! 17,000 பள்ளி அறைகள் இருந்த தில்லியில் இன்னும் 20,000 அறைகள் கட்டப்பட்டு கல்விக்கான உள்கட்டமைப்பு இருமடங்கு மேம்படுத்தப்பட்டுள்ளது. #DoubleInfra

இரண்டாவதாக பள்ளியை ஆசிரியர்கள் மட்டுமே நடத்துவதில்லை. இதற்காக எல்லா பள்ளிகளிலும் ‘பள்ளி மேலாண்மைக் குழு’ (School Management Committee) அமைக்கப்பட்டன. இதில் ஆசிரியர்களும், பெற்றோர்களும் பொறுப்புசார் உறுப்பினர்களாக (Stakeholders) இருக்க, பள்ளிகளின் நடவடிக்கையில் பெருமாற்றம்! இதில் வரும் அந்தப் ‘பூட்டுக் கதை’ (11:00) சிரிப்பை வரவழைத்தாலும் மனமிருந்தால் மார்க்கபந்து! #RoughChampions

இப்படி அடிப்படை வசதிகள் செய்யப்பட்டதும், அடுத்து பாடத்திட்டங்களின் மேலும் பாடம் சொல்லிக் கொடுக்கும் முறைகளில் புதுமை என அதகளம்! #ReimaginingClassrooms

அவற்றில் ஒன்று, மெலனியா அம்மா சென்றிருக்கும் #மகிழ்ச்சி_வகுப்புகள் – தியானம், மன அழுத்தத்தைக் கையாள்வது எப்படி, தன்முனைப்புப் பாடங்கள் என்று வாழும் முறையை வழங்கும் இவை மாணவர்களின் வாழ்வைச் செம்மைப்படுத்த பெரும் பங்கு ஆற்றும் என்பதில் எனக்கு ஐயமில்லை. #HappinessCurriculum

கொசுறு: இந்தப் பேச்சாளர் – ஆதிஷி மார்லேனா – தில்லி ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ. ஆக்ஸ்ஃபோர்டில் பயின்ற பெரும் படிப்பாளி. 38 வயது இளைஞி.

இன்னும் அதிகம் செய்ய வேண்டும் என்று ஆதிஷி கங்கணம் கட்டிக் கொண்டிருந்தாலும், கடந்த ஐந்து ஆண்டுகளில் தில்லி அரசுப் பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் பெருமளவு உயர்ந்துள்ளதாகவும், சராசரி மதிப்பெண்கள் உயர்ந்துள்ளதாகவும் இந்தி கூறும் நல்லுலகம் நவில்கிறது.

தமிழ்நாட்டில் முடியுமா என்றால், முடியும்! லாபம்பாரா தன்னார்வ அமைப்புகள் (மத்யமர் போன்றவை) அரசுடன் சேர்ந்தால் நிறைய முடியும், திரும்பத் திரும்ப காமராஜர் பள்ளிகள் கட்டினார்; எம்ஜிஆர் சத்துணவு போட்டார்; கலைஞர் முட்டை அளித்தார் என்று நுனிப்புல் மேயாமல், டாஸ்மாக்கில் ஒவ்வொரு குவார்ட்டருக்கும் ரூ.5/- இதற்காக ஒதுக்கினாலே தீயில் சிறார்களை எரிக்கும் தனியார் பள்ளிகளும், சேமிப்பைக் கரைக்கும் கல்வி நிறுவனங்களும் மறைந்து போகும். அப்புறம் நீட்டாவது, ஐஐடியாவது? கொண்டுவா, ஒரு கை பார்த்துவிடலாம் என்பர் நம் குழந்தைகள்!

செய்வோமா?




Comments

Post a Comment