கணவாய்க் களி!

 


கடந்த பத்து நாட்களாக வீட்டில் ஒரே கவிச்சி வாடை. எதைக் கேட்டாலும் Squid Game, கொரியன் தொடர், அது இது என்று ஒரே அலம்பல்.

சரி, அப்படி என்னதான் இருக்கிறது என்று உட்கார்ந்தால் அடுத்த 9 மணி நேரங்கள் (ஒரு நான்கு நாட்களாக, ஹி ஹி!) தொலைக்காட்சி முன்னால் ’ஐபிஎல்’ஐயும் தாண்டிக் கட்டிப் போட்டுவிட்டது. நம்மைக் கட்டிப் போட நிறைய கயிறு வேண்டும் என்பது தமிழ் கூறும் நல்லுலகம் அறியும். 😉 இருப்பினும்…

2009ல் எழுதிய கதையைப் பற்பல தயாரிப்பாளர்கள் உப்பில்லாத பண்டம் எனத் தூக்கி எறிய, கடைசியில் ஜாக்பாட் அடித்தது நெட்ஃப்ளிக்ஸ்தான். இன்று உலக நாடுகளில் 90க்கும் மேற்பட்டவற்றில் பிட்காயினுக்கு அடுத்தபடியாக ரத்தப் புகழுடன் விளங்குவது இந்த ஆட்டம்தான்.

கதை – தமிழ்ப்படக் கதைதான் (தப்பு! தப்பு! தமிழ்ப்படங்கள் காப்பி அடிக்கக் கூடிய கதைதான்! 😊). வாழ்க்கையின் அடிமட்ட மக்களுக்குத் தேவை என்ன? பணம், நிறைய பணம். Parasite படத்திலேயே நாம் (வாழாத வடக்கு இல்லை; தேயாத தென்) கொரியாவில் இருப்பவர்களுக்கும் இல்லாதவர்களுக்குமிடையே இருக்கும் இடைவெளியைக் (எவ்வளவு இ!) கவிதையாகக் கண்டோம்.  இதில் குருதியாகக் காண்கிறோம். அம்புடுதேன்!


பணப் பற்றாக்குறை உடைய நூற்றுக்கணக்கானவர்களை ஒரு கும்பல் ஆறு விளையாட்டுக்களை ஆட அழைக்கிறது. ஆறிலும் வென்றவருக்கு நிறைய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய பணம் தருவதாக ஆசை காட்டுகிறது. (அதிகமில்லே ஜெண்டில்மேன்! ஒரு 250 கோடி ரூபாய்தான்!) கடனில் மூழ்கி மூச்சிழந்து கொண்டிருக்கும் பலருக்கு இது ஒரு துடுப்பாக விளங்க, முதல் ஆட்டத்தில் இறங்குகின்றனர். ஆடிய பிறகுதான் என்ன விபரீதம் என்பது புரிகிறது. விபரீதத்தைத் தாண்டி வென்றது யார்? சிந்திய ரத்தத்தின் விலை என்ன?  இருப்பவர் வென்றனரா, இல்லாதவர் வென்றனரா? இதையெல்லாம் வெள்ளித்திரையில் காண்க!

விளையாட்டுக்களைப் பற்றிச் சொல்ல வேண்டும். நாம் சின்ன வயதில் விளையாடிய பாண்டி விளையாட்டு, கோலி குண்டு, உள்ளே/வெளியே மாதிரியே கொரியாவில் குழந்தைகள் ஆடிய விளையாட்டுக்களைச் சற்று நவீனப்படுத்திப் பெரியவர்களை ஆடவும் சாடவும் செய்துள்ளனர்.

நடிப்பு சுமார் ரகம்தான்.

வசனங்கள் வசைகள்.

கொச்சையாக, அழகியல் இல்லாத வகையில் காட்சி அமைப்புகள்.

ஏறத்தாழ இதுதான் நடக்கப் போகிறது என்று தெரியும், இல்லாத ஒரு சஸ்பென்ஸ்.

இருந்தாலும் எதற்காக 9 மணி நேரம் உட்கார்ந்தேன்? மனித மனத்தின் வக்கிரம்தான். இயல்பு வாழ்வில் கரப்பான் பூச்சியைப் பார்த்தவுடன் ஓடும் நம்மை, இதில் ரத்தம் அருவியாய்ப் பீறிடப் பீறிடக் கண் கொட்டாமல் அதையே பார்க்க வைத்தது எது? அந்த 250 கோடியா?

ஒரு காட்சியில் வரும் வசனம் அதை அழகாகப் படம் பிடித்திருந்தது. ‘ஏழைக்கும் பணக்காரனுக்கும் இடையே ஒரு பெரிய ஒற்றுமை இருக்கிறது. இருவருக்கும் தம்மிடம் இருக்கும் பணத்தைக் கொண்டு வாங்கும் பொருட்களின் மேல் பற்று இருக்காது.’ வாழ்வதற்காக உணவு வாங்கும் ஏழை,  காக்காய் பிரியாணியாக இருந்தாலும் சரி, சரவணபவன் சாம்பார் சாதமாக இருந்தாலும் சரி, அவனுக்கு வயிறு நிரம்ப வேண்டும், அவ்வளவுதான். அதே போல பணக்காரனுக்கு வாங்குவது ரோலெக்ஸ் கடிகாரமாக இருந்தாலும் சரி, ரோல்ஸ் ராய்ஸ் காராக இருந்தாலும் சரி பெரிதாக ஒன்றும் வித்தியாசம் இல்லை.

ஒரு வேளை நம்மில் பணம் இல்லாதவருக்கு, ‘எனக்கு இவ்வளவு பணம் கிடைக்கும் எனில் நான் இந்த ஆட்டத்தில் இறங்கி இருப்பேனா?’ என்று ஒரு ஏக்கம் கலந்த அச்சக் கேள்வியும், பணம் இருப்பவருக்கு, ‘பணத்துக்காக மக்கள் இப்படி எல்லாம்கூடச் செய்வார்களா?’ என்று, தான் வந்த பாதை மறந்த கேள்வியும் எழுமோ என்னவோ? அதனால்தான் அவ்வளவு நேரம் ரத்தத்தில் நனைந்தோமோ என்னவோ?

ரத்தம் ஒரே நிறம்!

 #sriGINthoughts #review #squidgame


Comments