ஏகாம்பரத்தின் பார்வையில் 2.0





For the schizophrenic view of this movie in English, please go here.


அன்புள்ள சிட்டி ரோபோ தலைவன் ரஜினிக்கு,

உன் தம்பி ஆர்கே நகர் ஏகாம்பரம் எளுதிக்கிறது.

நல்லா இருக்கியா தலைவா? உன்னிய பார்த்தே ரொம்ப நாளாச்சு. நடுவுல இந்த கஜா புயல் வந்துச்சா? நம்ம மாமா வூடு அறந்தாங்கியிலதான் இருக்குது. ரொம்ப டேமேஜ் ஆயிடுச்சு கண்ணு! அதான் நானும் தனலெச்சுமியும் போயி கொஞ்சம் ஒத்தாசை பண்ணிட்டு முந்தா நேத்துதான் வந்தோம். அப்புடியே நிவாரணமாமே, அது தொட்டு, கொஞ்சம் ஏதோ துட்டு பண்ணிக்கினோம்னு வெச்சிக்கியேன்! நீ கூட வந்து இன்னா ஆச்சுன்னு கேட்பியோன்னு நெனைச்சேன். பாவம், உனக்கு ரொம்ப வேலை இருந்திருக்கும். பரவாயில்லை.

புள்ளை சேகரை கேக்குறியா? உன் நல்ல மனசு யாருக்கு வரும் தலைவா? நல்லா இருக்குறான். சோக்கா படிக்கிறான். தோ…அடுத்த மாசம் பரீட்சை. எதோ செமஸ்டராமே? நமக்கு தெரிஞ்சதெல்லாம் சூப்பர் ஸ்டார், அவ்வளவுதான்!

அதுவும் நீ வேற ரெண்டு புள்ளி சைபர் கொடுத்துக்கினியா? ஒரே குஷி. கோவாலுதான் சொன்னான் – ‘டேய் மச்சான்! தலைவரு மின்னே மாதிரி இல்லடா? படம் பணாலுன்னு 8-ம் நம்பர் கடையில் சொல்றாங்கடான்னான்.’ நான் உடனே ‘போடா டுபாக்குரு! இது சிட்டி படம்டா! சூப்பாரா இருக்கும்,’னு சொல்லி இஸ்த்துக்கினு அபிராமிக்கு போனேன்.

தனலெச்சுமியை இட்டாரலான்னா, அதுக்கு அய்யருவூட்டாண்ட ஏதோ வேலைன்னு போயிடுச்சி. கடோசியிலே 300 ரூபா குடுத்து தேட்டருக்குள்ள போனா, கையிலே ஒரு கூலிங் கிளாஸ் குடுத்தான்.

நான்கூட ‘கோபாலு, ஏதாவது படிக்கச் சொல்லுவாங்களா’ன்னு கேட்டேன். அவன் பகபகன்னு சிரிச்சிக்கினே, ‘டேய் கஸ்மாலம், இது 3டி படம்டா. அதுக்காவத்தான் இந்தக் கண்ணாடி. மாட்டிக்கோ’ன்னான்.

அப்பால அதை மாட்டிக்கினு இருட்டுல தட்டுத் தடுமாறி உள்ளே போய் உக்காந்தா, யப்பாடியோவ்!
சூப்பரு! உன் பேரு அப்புடியே ஸ்கிரீன்லேர்ந்து அப்புடியே எம்மேல வர்றாமாதிரி இருக்கச்சொல்லே அப்புடியே ஜிவ்வுன்னு ஏறிச்சுப்பா!

எடுத்த உடனேயே செல்ஃபோன் எல்லாம் பறக்கச் சொல்லோ, ‘இன்னாடா இது, மேஜிக்கா?’ன்னு தோணுச்சுப்பா!

அதுவும் அந்த கடைக்காரனையும், அந்த குண்டு சேட்டையும், மலையாளம் மாதிரியே தமிழ் பேசுற மந்திரியையும் போன் சாப்பாடு போட்டுக் குளோஸ் பண்ணும் போது, ஒரே பேஜாராயிடுச்சு. என் போனை எடுத்து கோவாலுக்கிட்டேயே குடுத்துட்டேன். அது ஒண்ணியும் பரவாயில்லை. அதுலேதான் சார்ஜே இருக்காதே!

அப்பாலே நீ விஞ்ஜானி வசீகரனா வந்து இன்னாமோ அஞ்சு போர்ஸ் (அப்புடீன்னா இன்னாபா?) அது இதுன்னு கட்டுனியா, கொஞ்சம் கொட்டாவிதாம்பா. இருக்கட்டும், சேகருக்கு புரிஞ்சுடும். புள்ளை கம்பூட்டரு படிக்குதுப்பா!

ஆனா அந்த களுகு சும்மா ஊரையே கலக்கும் போது கொஞ்சம் செவுளு அவுலாயிடுச்சுப்பா. நல்ல காலம் சிட்டி வந்து காப்பாத்துச்சோ பொழைச்சோம்.



அதுக்கப்பறம் நீயும், சிட்டியும், அந்த பொண்ணு நிலாவும் (கோபாலுதான் சொன்னான் அது சிட்டியோட டாவுன்னு! நெசமாவா தலைவா?) போய் அந்த பட்சி ராஜாவை கரண்டு வச்சு மட்டை ஆக்கப்பார்க்கும் போது நல்லாத்தான் இருந்திச்சி… ஆனாலும் கொஞ்சம் போர் அடிச்சுது கண்ணு!

அது சரி, அது இன்னா பேரு பட்சி ராஜா? சீமை ராஜா தெரியும் – நம்ம சிவகார்த்திகேயன் நடிச்ச படம். புள்ளி ராஜா தெரியும் – எய்ட்ஸ் வந்து பூடுச்சி புள்ளை பாவம்.

அவனை பார்த்தா மொத தபா கொஞ்சம் பயம் வந்துச்சு. அப்பாலே சிரிப்பு வந்துச்சு! மன்னிச்சுக்கப்பா!
இன்னொண்ணு கேக்கணும்னு நெனச்சேன். பட்சிராஜா செத்துட்டானா, இல்லையா? எப்புடி இவ்ளோ பவரு வந்துச்சு? கோவாலுக்கிட்டே கேட்டேன். அவன் ‘கம்முனு படம் பாரு’ன்னுட்டான். கிடக்கான் அவன்; ஒரு குவார்ட்டரு வாங்கி குடுத்தா அலாக்கா சொல்லுவான்.

இண்ட்ரோலுக்கு அப்பாலே அந்த புறா, குருவி கதை சொல்லும் போது நெசமாவே அளுவாச்சி ஆயிடுச்சுப்பா. இப்புடித்தான் எங்க ஊர் பொன்னேரியாண்ட நான் சின்னப் பையனா இருந்தப்போ நெறைய காக்கா, குருவி எல்லாம் இருக்கும். அது கீச்சு, கீச்சுன்னு கத்துனா ரொம்ப ஜாலியா இருக்கும். பக்கத்து வூட்டு என் டாவு கமலா கூட சொல்லும் – யாரோ பாரதியாராமே, அவரு காக்கா குருவி எல்லாம் நம்ம சாதின்னு பாடியிருக்காராம். நமக்கு தெரிஞ்சது இன்னாபா? மொதலியாரு, நாடாரு, அய்யரு, கவுண்டரு, நாங்க இருந்த காலனி அவ்வளவுதான்…

அது கெடக்குது…
அதுக்கப்புறம் புட்பால் ஆடற ஸ்டேடியத்துலே வந்து அந்த பட்சி எல்லாரையும் மட்டை பண்ணப் போறேன்னு உதார் காட்டுறப்போ நீ கெட்ட சிட்டியா வந்து ‘குக்கூ குக்கூ’ சொல்லி நாக்கை தள்ளும் போது எளுந்து நின்னு பிகிலடிச்சேம்பா!

நீயும் அந்த அச்சை குமாரும் எல் ஐ சி கட்டிடம் கணக்கா பெரிசாயி ஒரே பைட்டு குடுக்க, அதுக்கப்பாலே நீ குட்டி ரஜினியா வந்தியா, ஒரே கமாய் பத்தினி ரைடுதான்.

எப்புடி தலைவா இப்புடி! கலக்கிட்டே போ! பைசா வசூல்ன்னா இதுதான்.

கடோசிலே நீ ஆசுபத்திரியிலே படுத்துக்கினு, ‘பறவைங்களை எல்லாம் காப்பாத்தணும். கொஞ்சம் தண்ணியாவது வையுங்க!’ அப்படி எல்லாம் சொன்னியா, எனக்கு ஒண்ணு தோணிச்சு… ‘நம்ம தலைவனுக்கு இவ்வளவு தெரிஞ்சு இருக்குதே! அந்த ஏழு பேரு மட்டும் யாருன்னு தெரியலே! பத்து பேரு மோடி கூட சண்டை போட்டா, அவரு பெரிசா இல்லை அவரு தப்பான்னு பளிச்சுன்னு சொல்லத் தெரியலியே’ – அரசியலிலே இதெல்லாம் சாதாரணம் இல்லே! ஆனா ஒண்ணு. நீயே பரவாயில்லேப்பா! அந்த கமலகாசனை மட்டும் பேச வுடாதே! அட்ச்ச சரக்கு எல்லாம் கப்கப்புன்னு இறங்கிடுதாம் – கோவாலுதான் சொன்னான். பாவம், ரெண்டு தபா அது கீழ்ப்பாக்கத்துக்கு வேற போயிட்டு வந்துடுச்சி. உன் தோஸ்த்துதானே கமலு! கொஞ்சம் சொல்லி வைப்பா!

சங்கரு இந்த படத்துக்கு 500 கோடி செலவு பண்ணுச்சாமே. பரவாயில்லே கம்மிதான். நம்ம ராசா (அட, இது அ ராசாப்பா!) தேத்துனதுக்கு இது ஒண்ணியுமே இல்லே!

எந்திரன்லே நம்ம ஐசுவரியா இருந்திச்சு. சூப்பரா பாட்டுங்கல்லாம் இருந்துச்சு. இதுலே இன்னாடான்னா எளுத்து போடும்போதுதான் அந்த வெள்ளைக்கார பொண்ணோட கலர் கலரா பாட்டு இருந்துச்சு. கோவாலுகூட கெளம்பாலான்னு சொன்னான். நான் தான் இருந்து பார்த்துட்டு போலான்னு சொன்னேன். பின்னே, கொடுத்த காசுக்கு முழுசாப் பார்க்கணுமில்லே!

வெளியே வரும்போது கூலிங் கிளாசை புடுங்கிட்டாங்க. ’டேய்! ஒளுங்கா களுவுங்கடா! இல்லேன்னா மெட்ராஸ் ஐ வந்துடும்’னு சவுண்டு குடுத்துட்டு அம்மா கடையில் தோசை துண்ணுட்டு வூட்டுக்கு வந்தோம். ’படம் எப்புடிப்பா’ன்னு சேகரு கேட்டான். நான், ‘நல்லா இருந்துச்சுடா, கொயந்தைங்களோட பார்க்கலாம்’னு சொன்னேன். அதுக்கு அவன், ‘சரிப்பா, நான் தல படம் விஸ்வாசம் பொங்கலுக்கு பார்த்துக்குறேன்’னு சொல்லிட்டு போனை நோண்ட ஆரம்பிச்சிட்டான்! கய்தே!

உடம்ப பார்த்துக்கோ தலைவா! செளந்தரியாவுக்கு ரெண்டாம் கல்யாணமாமே. நல்லா இருக்கட்டும் பொண்ணு!

கவலைப்படாதே! படம் சுகுரா ஓடிடும். நான் கூட படம் பேர்லே இருக்குற சைபர் மாதிரி ஆயிடுமோன்னு நெனைச்சேன். நல்ல காலம். பத்துக்கு அஞ்சு பளுது இல்லே. போட்ட துட்டு அந்த லைக்காகாரன் எடுத்துடுவான். (அவன் கூட செல்போன் கம்பேனி வெச்சிருக்கான் இல்லே!?)

நாங்களும் பேட்டக்கு ரெடி ஆயிடுவோம்.

ஆமா! எலீக்சன் எப்போ? நீ யார்கூட சேரப்போறே! கொஞ்சம் முன்னாடியே சொல்லிட்டீன்னா வசதியா இருக்கும். என்னா தலைவா? உனக்கே தெரியாதா? அது சரி! நம்ம கையிலியே ‘குக்கூ குக்கூ’ சொல்லுறியா? ஜோக்குதான் கண்ணு!

நல்லா இரு!

இப்படிக்கு
என்னிக்கும் உன் பட ரசிகன்
ஆர் கே நகர் ஏகாம்பரம்




Comments

  1. Hi sir,
    Great funny review! I'm yet to watch the movie but this definitely makes me consider going for it with my family.

    However I feel like you included some one sided comments regarding rajini's political sphere without thorough research. If I'm not wrong you insinuated that rajini didn't care about the havoc that gaja cyclone created in delta region...however the truth is very far from it. Rajini activated his rajini makkal mandram and donated over 50lakhs personal amount and almost 2 crore in relief efforts via the organization donation drives. The people there are immensely grateful for the efforts as it allowed them to survive through the ordeal and more is still happening via this medium. Evidence of this can be found with a quick Google. Hence I feel that the purposeful propropagation of "Rajini didn't do anything for TN" momentum to be disconcerting. Not a major fan of rajini, just trying to understand if there was any reason for the condescension via claims as such.

    Have nice day!
    -New fan :)

    ReplyDelete

Post a Comment