TL;DR: Three kuladeivams - family deities; a whirlwind trip across the Cauvery delta; generous helpings of hot sun, prasadams, and family memories; and an attempt (sincere or not, don't know!) to plug a few holes in the proverbial vessel of punyas. 😊
முன் குறிப்பு:
இது சாமி இருக்கு, இல்லைங்கறது பத்துன பதிவு இல்லை. கொஞ்சம் பயணம். கொஞ்சம் சாப்பாடு. கூடவே முன்னோர்கள் கும்பிட்ட குலச்சாமிகளைப் பத்துனது!
---
காஞ்சி மஹா பெரியவர் குலதெய்வங்களின் முக்கியத்துவத்தை மிகவும் அழுத்தமாக உபதேசம் செய்துள்ளார். அவர் சொன்னதன் சாரம்…”நாம் ஏன் பூஜைகள் செய்கிறோம்? போகிற வழிக்குப் புண்ணியம்,
சரிதானே? வெவ்வேறு கடவுளருக்குச் செய்யும் பூஜைகளின் புண்ணியங்கள் ஒரு பாத்திரத்தில்
நிரம்புகின்றன என்று வைத்துக் கொள்வோம். அதே சமயத்தில் நம் குலதெய்வ வழிபாடு இல்லையாயின்,
அந்தப் பாத்திரம் ஓட்டையாகி, சேகரித்த புண்ணியங்கள் ஓடிவிடும். அதனால், குலதெய்வ வழிபாடு
மிகவும் முக்கியம்!”
-----
சென்ற வாரம் ஒரு புயல் வேகப் பயணம் இந்தியாவுக்கு. (வெயில்
கொளுத்திச்சு! புயலா?)
சென்னையில் செய்ய வேண்டியதைச் செய்துவிட்டு (shopping, more shopping), திருச்சிக்குப் பயணம். முதலில் ரயிலில் செல்லலாம் என்று பெரிய திட்டம் எல்லாம் போட்டு வைத்தால்… மேற்கூறிய shopping சமாச்சாரம் பெட்டிகளை நிரப்ப, ரயில் திட்டம் கேன்சல்! One-dropல் ஏறி, ஸ்ரீரங்கத்தில் ராத்திரி ஹால்ட். மறுநாள் காலையில் கோபுரத்தை ஹரி ஹரி போட்டுக் கொண்டு, கீழ அடையவளைஞ்சான் தெரு (remember Sujatha?) வழியாக சாத்தார வீதிக்குள் நுழைந்தால், பாரதிராஜா செட் மாதிரி, ஒரே பூ! வெள்ளுடை பெண்கள் மைனஸ்! அப்புறம் சில கிலோக்கள் புய்பம் வாங்கி வண்டியில் ஏறி முதல் குலதெய்வம்…
திருவாரூர் அருகே பழையவலம் (Pazhayavalam). ஆட்டுக்குட்டிகளும்,
அவற்றின் தாய்களும் அங்குமிங்கும் அலைந்து கொண்டிருக்க, சுற்றி வயல்வெளிகளும், சுவர்களில்
சோர்வான தேர்தல் எழுத்துக்களும் புடை சூழ அழகான, வடிவான, கண்ணுக்கு இதமாக துர்க்கை
அம்மன். தந்தை வழிக் குலதெய்வம். 60களின் முடிவில் திருவாரூரிலிருந்து மாட்டு வண்டியில்
சென்று வழிபாடு நடத்தி, குடம் நிறைய பாயசம் பிரசாதம் என்று அம்மா சொல்வாள். பின் 70களின்
முடிவு வரை கெட்டும் பட்டணம் சேர்ந்து அம்மனை மறந்து, திடீரென பாட்டி “நாராயணா! குலதெய்வத்துக்கு
செய்யலேடா! அதனாலதான் படுத்தறது!” எனக்கூற பழையவலத்துக்குப் படையெடுப்பு. பின் படுத்தல்
குறைந்தது நிஜம்தான்.
இம்முறையும், அபிஷேகம், புடவை, பூ என “செல்லக்குட்டி” அம்மன் அமர்க்களப்படுத்திவிட்டாள். “படம், வீடியோ எடுக்கப்படாது! அம்மனின் சாபத்துக்கு ஆளாவீர்!” என்று பயமுறுத்தலுடன் இருப்பினும், அம்மனின் சிரித்த முகம் கண்டு, இவளாவது சபிப்பதாவது, என்றுதான் தோன்றியது.
---
பாயசம் (குடத்துக்கு பதில் தூக்கு), வடை பிரசாதம் distribute
செய்து பின்னர் திருவாரூர் கெளரி கிருஷ்ணாஸில் மதிய உணவு. நம் எதிரே GST officeலிருந்து
இருவர். சாப்பிட்டு முடிக்கும் வரை, தொடர்ந்து officeலிருந்து தொடர்ந்து phoneல் தொந்தரவு:
“மேடம், அந்த file என்ன ஆச்சு? இந்த report என்ன ஆச்சு?” பாவம்! ஒரு மனுஷி நிம்மதியா
சப்பாத்தி-குருமா சாப்பிட முடியலை!
பின்னர் கமலாலயக் குளத்தை ஒரு பிரதட்சிணம் செய்து இன்னொரு
குலதெய்வத்துக்குப் பயணம்.
---
இந்த முறை அம்மாவழி… அதுவும் திருவாரூருக்கு மிக அருகில்
– மாங்குடி (Mangudi). இங்கு காளிகா பரமேஸ்வரி குடம் + தண்ணீர் + வேப்பிலை வடிவில்
இருப்பதாக ஐதீகம். மிகவும் சக்தி வாய்ந்ததென கேள்விப்பட்டிருக்கிறேன் – தாத்தா வகையறாவுக்கு
சாமி வரும் என்றுகூட!
வாரம் ஒருமுறை அம்மனுக்கு குடத்தில் உள்ள நீரை மாற்றி, வேப்பிலையை
மாற்றி சலாசன ரூபத்தில் எழுந்தருளி இருக்கிறாள்.
கோவிலுக்குப் பின்னால் ஒரு பெரிய குளம். மாலை நேரக்காற்று
தண்ணீர் தழுவி வர கோடை வெயிலுக்கு குளு குளு!
துர்கா த்ரிசதி அர்ச்சனை முடிந்து, வேப்பிலை தீர்த்தம் வாங்கி,
பின் மெதுவாகக் கிளம்பி தஞ்சை பெரிய கோவில் (Thanjavur Big Temple) தரிசனம்.
---
அங்கு ஐயனுக்கு வேட்டி சார்த்தலாம் என ஒரு நப்பாசை. 36 முழ
வேட்டி என்றனர். வாங்கலாம் என்று கடைக்குப் போனால், போன கடை பூட்டி இருக்க, “சாமி,
இன்னிக்கு நீ கட்டுனதோட இரு! உம் பொஞ்சாதிக்கு மட்டும் புடவை சார்த்தறோம்”னு பேரம்
பேசிட்டு, நல்ல தரிசனம். அப்புறம் அங்கேயே ராத்திரி பள்ளியறை பூஜையும் பார்க்கலாம்னு
அம்மன் சன்னதிக்குப் பக்கத்தில் அவங்க பெட்ரூம் வாசலில் உட்கார்ந்து wait பண்ணினா,
படுக்கை மேலே அவங்க பெரிய பிள்ளையோட வாகனம் ஜாலியா விளையாடிக்கிட்டு இருந்துச்சு! என்னடா
இது, தஞ்சைக்கு வந்த சோதனை!
மறுநாள் இன்னொரு குலதெய்வம்.
இம்முறை மாப்பிள்ளை வீட்டுக் கோவில்: குருவிக்கரம்பை மதுரை
வீரன். (Kuruvikkarambai) கிராமத்தில் தென்னைமரங்களுக்கிடையில் ஒரு சிறிய அழகான கோவில்.
பொம்மி, வெள்ளையம்மாளுடன் தலையில் ஒய்யாரக் கொண்டை போட்டுக்
கொண்டு, அருள்பாலிக்கும் கிராமத்து தெய்வம்.
பெரிய அரிவாள், ஆணிப் படுக்கை, ஆணிச் செருப்பு என துஷ்டர்களை
அழித்துப் பரிபாலனம் செய்யும் பெரு நம்பிக்கைக்குரிய எல்லை தெய்வம்.
பின் அருகில் இருக்கும் வாத்தலக்காட்டில் (Vathalakkadu) ஆஜானுபாகுவாக சர்வ சித்தி ஆஞ்சநேயரை தரிசித்தோம். அந்தக் கோவிலில் ஒரு சுவாரசியம். எந்த சாமியும் மனித ரூபத்தில் இல்லை. விநாயகர் (யானை), நரசிம்மர் (சிங்கம்), வாராகி அம்மன் (பன்றி), ஆஞ்சநேயர் (குரங்கு)!
இப்படி இயற்கையை வழிபடும் நேர்த்தியினை அழிப்போம், கழிப்போம் என வாயில் அனுமார் வடை சுடுபவர்க்கு…
---
ஆக, காஞ்சி மஹான் சொன்ன மாதிரி கொஞ்சம் போல பாத்திரத்தில்
ஓட்டையை அடைக்கும் குலதெய்வப் புண்ணியம் சேர, ஓம் தத் ஸத்!
உங்கள் பாத்திரத்தின் ஓட்டையை அடைக்க எங்கு சென்றீ/செல்வீர்கள்?
#sriGINthoughts #KulaDeivam #குலதெய்வம்







Comments
Post a Comment