தலைவரின் பேட்டி!

தீபாவளி அன்று நடந்த TV Spamக்கு ஏற்றார்போல் ஏதாவது பில்டர் (அதாங்க, வடிகட்டி) வைத்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது.

நல்ல வேளை, சென்னையில் இல்லை! பொன் முட்டையிடும் திரைத்துறையை எவ்வளவு நாள் உயிரோடு வைத்திருப்பார்கள் என்று தெரியவில்லை! இதைத்தான் பிரகாஷ்ராஜ் 'சிங்கம்' படத்தில் வேறு எதற்காகவோ சூர்யாவிடம் ஜெர்க் விடுவார்... (அதையும் சிங்கை அலைவழியில் நேற்றுதான் காட்டினார்கள்!)

ரசித்த மூன்று நிகழ்ச்சிகள்...

1. விஜயில் 'நீயா? நானா?'


வெற்றிக்கு உழைப்பு முக்கியமா? அதிர்ஷ்டம் முக்கியமா? என்ற அரத பழசான தலைப்புதான் - வந்திருந்த அனைவரும் ஏதோ ஒரு வகையில் திரைத்துறையிலும் சின்னத்திரையிலும் கால் ஊன்றியோ, ஊன்றவோ உழைத்துக் கொண்டிருக்கும் கனவான்கள்/பெண்மணிகள். அதிலும் பிரபு சாலமன், அதிர்ஷ்டத்தால் ஒரு வாய்ப்பு கிடைக்கலாம்; ஆனால் அதுவே நிரந்தர வெற்றி தராது என்று கூறி தன்னுடைய மைனா படத்தின் மூலம் தான் மீண்டும் ஒரு பெரும் சக்தியாக வருவேன் என்று தன்னம்பிக்கையுடன் கூறியது கேட்டு லேசாக மயிர்கூச்சல் எடுத்தது என்னவோ உண்மைதான்!

(கவலைப்படாதீங்க பிரபு! முதல் குடும்பத்தினைச் சேர்ந்த யாரோதான் அந்தப் படத்தை வாங்கியிருப்பதாகக் கேள்விப்பட்டேன்...ஸோ...)

2. அதே விஜயில் சித்தப்பாவுடன் அனு நடத்திய நல்ல ஒரு உரையாடல்

திரும்பவும் உங்களை மாதிரி உண்டா? கமல் ஒரு சகாப்தம்; கமல் ஒரு பல்கலை கழகம்; அவர் ஒரு டுடோரியல் காலேஜ் என்ற ரீதியில் முதுகு தட்டல்கள் (சொரியல்கள்?) இருந்தாலும், கமல் தன்னுடைய கருத்துக்களை வழக்கம் போல பாமரர்களுக்குப் புரியாமல் பேசினார், பேசினார், பேசிக் கொண்டே இருந்தார்.

பாலச்சந்தர் என்கிற தயாரிப்பாளர், கமல் கால்ஷீட் வேண்டுமோ என்னமோ தெரியவில்லை, வருஷத்துக்கு ரெண்டு படம் பண்ணேன் என்று விண்ணப்பித்தார்.

கடைசியில் காந்தியைப் பற்றியும் (டெல்லியில் அந்தப் பச்சைக் கிணற்றில் அவரைத் தேடாதீர்கள்!) ஆத்திக நாத்திகம் பற்றியும் (மதம், செக்ஸ் மாதிரி; வீட்டுக்குள்ளேயே இருக்கட்டும்!) அவர் கூறிய கருத்துக்களைக் கூறினாலும், கலைஞரின் உரை கேட்டு 'வேணாம் நான் அழுதிடுவேன்' என்ற ரீதியில் ஜல்லி விட்டது கேட்டு ஹ்ம்ம்ம் என்று கருத்துச் சுதந்திரம் பற்றி பெருமூச்சு விட முடிந்தது.

(By the way, பச்சைக் கிணறு = நாடாளுமன்றம்... நான் முன்னாடியே சொல்லலை?)

3. சன் வழங்கிய எந்திர தீபாவளி

படத்தை எப்படி எடுத்தார்கள் என்று இரண்டரை மணி நேரம் காட்டிக் காட்டி இன்னும் கொஞ்சம் எந்திரன் ஜூஸ் பிழிந்தார்கள். அருமையாக இருந்தது என்பதைவிட பொறுமையைச் சோதிக்கவில்லை என்பதே மிகப் பெரிய வெற்றி.

அதைத் தொடர்ந்து தலைவரின் பேட்டி. சன் டிவி அடிக்கடி 'இந்தியத் தொலைக்காட்சிகளைல் முதல் முறையாக', 'உலகத் தொலைக்காட்சிகளில் முதல் முறையாக' என்று பல முறை எது எதற்கோ விட்ட உதார்கள் அனைத்தையும் இந்தப் பேட்டிக்கு விட்டிருக்கலாம்.

எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து ரஜினியின் இவ்வளவு நீள பேட்டி எதிலும் படித்ததில்லை, பார்த்ததில்லை. 

சிவாஜிராவும் சிம்பிளாக வரிச்சட்டை, ஜீன்ஸ், (பாபா?) படம் போட்ட கைக்கடிகாரம், ருத்திராட்ச மோதிரம் என்று வந்திருந்தார்.
எந்திரன் பற்றிய ரெகுலர் கேள்விகளுக்கு சம்பிரதாயமாக கலாநிதியையும் சங்கரையும் புகழ்ந்தார்.

இருந்தாலும் திட்டமிடுதல் பற்றிய அந்தக் குட்டிக் கதை சூப்பர்! பின்னர், என்னதான் இந்தியர்கள் புத்தாக்கத்தில் பிஸ்தா என்று பீலா விட்டாலும், டிசிப்ளினில் ஜீரோ என்று அவர் கூற, அதற்கு விஜய் ஆனந்த் 'நீங்க ரொம்ப டிசிப்ளின் ஆச்சே!' என்று ஐஸ் வைக்க, அதற்கு ரஜினி தன்னையும் அறியாமல் 'அதனாலதான் இங்க இருக்கேன்' என்று கூற... நைஸ்!
 

ரிக்கி பாண்டிங்கிடம் எது அவர் ஆடியதிலேயே கஷ்டமான பந்து என்று கேட்டால் 'அடுத்த பந்து!' என்று கூறுவார். அது போல ரஜினியும், ஒரு நடிகனோ, கலைஞனோ அவனுடைய ஒவ்வொரு படமும் முதல் படம் போலத்தான் என்று கூற, நேற்றைக்குரிய வாழ்க்கைக் கல்வி முடிந்தது.

எப்படி சார் இவ்வளவு வேகம் என்று கேட்டால், வெள்ளந்தியாக, 'கண்டக்டராக இருந்த போது கூட எவ்வளவு கூட்டமாக இருந்தாலும் நூறு டிக்கெட் கொடுக்கணும்னாக்கூட பத்தே நிமிஷத்துலே கொடுத்து இந்த பக்கத்துலே போய் அந்த பக்கத்துல வந்திடுவேன்' அப்படியன்னு ரஜினி சொன்னவுடன் வந்த வார்த்தை, 'தலைவா!' 

முத்தாய்ப்பாக, 'சார்! உங்களுக்காக ஒரு சிறப்பு பரிசு!' என்று விஜய் ஆனந்த் ஒரு மெகா பில்டப் கொடுத்துப் பின் சட்டென்று பாய்ந்து தலைவரின் கன்னத்தில் ஒரு 'பச்சக்' வைக்க...அவர் ஜென்மம் சாபல்யம் அடைந்து விட்டது என்று சித்ரகுப்தன் ஈமெயில் அனுப்பியதாகக் கேள்வி.... 

பி.கு. எந்திரனில் அந்த கருப்பு ஆடு 'மே...' நடிப்பைப் பற்றிக் கேட்டவுடன், பதில் சொல்லும் முன்னர், ரஜினி, 'Liked it?' என்று ஒரு குழந்தையை மாதிரிக் கேட்க, அதற்கு 'Yes, very much!' என்று சொன்னவுடன் அவர் கண்ணில் மின்னிய ஒரு கண நேரப் பெருமை... ஆயிரம் கோடி கொடுத்தாலும், கலைஞனுக்குக் கிடைக்கும் கைத்தட்டல்தான் மிகப் பெரிய செல்வம் என்று மீண்டும் நிரூபிக்கப்பட்டு விட்டது!

Comments