மங்காத்தா: 'தல'யின் தப்பாட்டம்!



ம்ம்ம்... கடைசி பதிவு எழுதி எட்டு மாதங்கள் ஆகிவிட்டன.
அஜித்தும் அவரது மங்காத்தா ஆட்டமும் நம்மைச் சோம்பலில் இருந்து விழிக்கச் செய்துவிட்டன!!

அஜித்தின் 50வது படம் மங்காத்தா என்பது தமிழ் கூறும் நல்லுலகத்துக்கு பல்லாண்டுகளாகத் தெரியும். ஆனால், அந்த 50ல் மொத்தம் எத்தனை தேறும் என்று எண்ணினால், மொத்தம் பத்து கூடக் கிடையாது என்பதும் தமிழ் கூறும் நல்லுலகத்துக்கு பல்லாண்டுகளாகத் தெரியும். ஆனால், அந்தப் பத்தில் இந்த மங்காத்தா உயரத்தில் இருக்கும் என்பது திண்ணம்.

என் வாழ்வில் முதல் முறையாக, ஒரு படத்தைப் பார்க்கப் போனால், அதே படத்துக்கான முன்னோட்டத்தைப் படத்துக்கு முன்னால் திரையிடப்படுவதைக் கண்டேன்!!


ஐபிஎல் சர்ச் ஆர்கன் பிளிறலுடன் ஜீப்பில் பறந்து வரும் அந்த முதல் காட்சியில் அடிக்க ஆரம்பித்த விசில், கடைசியில் 'Game is over' என்று ஜூட் விடும் வரை தொடர்கிறது!! அஜித்தின் விஸ்வரூபம்!

கதை என்ன என்றெல்லாம் கவலைப்படாமல் இருக்கவேண்டும். கிரிக்கெட் சூதாட்டத்தில் வரும் பெரும் பணத்தைக் (அதிகமில்லே ஜென்டில்மேன், 500 கோடிதான்! ரூபாய் மதிப்பா, டாலர் மதிப்பா, தெலியேது!) கொள்ளை அடிக்க விரும்பும் பலரில் 'தல'யும் ஒருவர். அந்தப்பணத்தை அவர் அடிக்கிறாரா, அடிப்பது போல நடிக்கிறாரா அல்லது மற்றவரை அடிக்க விடுகிறாரா என்பதை வெள்ளித்திரையில் கண்டிப்பாகக் காண்க!


இந்த சமயத்தில் ஒரு விஷயத்தைப் பற்றி எழுதியாக வேண்டும். படம் வந்ததிலிருந்து எல்லா விமர்சகர்களும் படத்தில் பல ஓட்டைகள், லாஜிக்கே இல்லை என்று தங்கள் அறிவுஜீவித்தனத்தைக் காட்டி வருகின்றனர்.

மச்சி! ஒரே பதில்தான்! மாமியார் உடைத்தால் மண்குடம், மருமகள் உடைத்தால் பொன்குடம்!

பாடல்களை லாஜிக் என்று ஏற்றுக்கொள்ளும் நாம், அரிவாளால் வெட்டுவதை லாஜிக் என்று ஏற்றுக்கொள்ளும் நாம், 46000 கோடியை சிலபல தொலைபேசி உரையாடல்களிலேயே வெள்ளைப்பணமாக மாற்றுவதை லாஜிக் என்று ஏற்றுக்கொள்ளும் நாம், ஊழல் பேர்வழி என்று தெரிந்தும் அவரை(னை?) நாட்டை ஆட்சி செய்வதை லாஜிக் என்று ஏற்றுக் கொள்ளும் நாம்... புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்.


இனி நமது வழக்கப்படி, பிடித்தப் எட்டு! (அத்தனையும் அஜித்தான் என்று அனைவரும் கூறினாலும்...)

1. படத்தின் தீம் மியூசிக். கிரிக்கெட் சூதாட்டம், ஐபிஎல், என்பதனாலோ என்னவோ, அந்த இசையில் அந்த ட்ரம்பெட், வயலின் துடிப்பு என்று கொஞ்சம் கொஞ்சமாக முறுக்கேறச் செய்வது... யுவன், கூல்!!
2. அஜித்தின் அந்த பாதி நரை, பாதித் தொப்பையுடன் கூடிய இயல்பான ஒப்பனை! தமிழ்த் திரைப்படங்களில் அந்த ஒரு தோரணையுடனும், திரையை ஆக்கிரமிக்கும் அந்தத் திறனுடனும் இருப்பது அஜித்தான் என்பது என் கணிப்பு (ரஜினி - அவரைப் பற்றி எதுவும் பேசக்கூடாது; பேசினால் வீட்டுக்கு ஆட்டோ வரும்! கமல் - அவர் எப்படி வந்தாலும், அறிவாளியாக என்ன செய்யப்போகிறார் என்பதே கேள்வியாக இருக்கும்! மற்றோரெல்லாம் பின் தங்கியவரே!)
3. வாடா பின் லேடா பாட்டில் இருந்த அந்த துடிப்பான படத்தொகுப்பும், கணினி வரைகலையும் (அதான் மச்சி, கிராபிக்ஸ்!)
4. கதை முடிவில் செய்யப்படாத compromiseகள்!
5. அஜித்தும் பிரேமும் தண்ணி போட்டு அலம்பும் அந்தக் காட்சிகள்.
6. சதுரங்கப் பலகை முன் அமர்ந்து, அஜித் பணத்தைக் கவரத் திட்டம் போடும் அந்தக் கேலி கலந்தக் குரூரம். (பச்சை ரத்தம்!)
7. எந்திரன், ஜீ, ஆழ்வார், வானம், சுவரொட்டிகளில் அண்ணா ஹஜாரே என்று பலப்பல இடங்களில் தற்கால/சமீபகால நடப்புகளை கதை ஓட்டத்தின் நடுவே செருகிய பாங்கு.
8. அதிகமான உடைக் குறைப்பு, ரத்தம்/வன்முறை போன்றவை இருந்தால் இப்போதெல்லாம் சென்ஸார் வெட்டுவதில்லை! அதன் மேல் பச்சை குத்துவது போல ஒரு டிசைன் போடவேண்டியது! அவ்வளவுதான்... மிச்சமெல்லாம் உங்கள் கற்பனைக்கு!

கொசுறு: ஆக்ஷ்ன் கிங் அர்ஜுனின் அழுத்தமான நடிப்பு, படம் முடிந்த பின் டைட்டில் காட்சிகள் - Worth waiting!


பிடிக்காத எட்டு!

1. ஒரு குத்துப்பாட்டு அதிகம் என்பது தாழ்மையான கருத்து!
2. படத்தில் பெண்கள் அனைவரும் ஊறுகாயைவிடக் குறைவாகப் பயன்படுத்தப்பட்டிருக்கின்றனர்! (ஆனால், அதைவிடக் காரமாக ஆடை அணிந்திருந்தனர் என்பது தர்மபத்தினியின் தீர்ப்பு!)
3. தமிழ்த் திரைப்படங்களில் முதல் முறையாக... என்று விளம்பரம் செய்யும் அளவுக்கு, ஆங்கிலம் மற்றும் தமிழில் வசவு வார்த்தைகள். அதுவும் கடைசியில் லட்சுமி ராய் சாகும்போது, தல கூறும் அவ்விரு வார்த்தைகள் 'பீப்' செய்யப்பட்டாலும் உள்ளங்கை நெல்லிக்கனியாக அனைவருக்கும் உதட்டு அசைவு இருந்தது :-( (இதற்கு, சென்னையில் பெரும் கைத்தட்டல் என்று கேள்விப்பட்டேன்! கஷ்டம்!!)
4. நிறைய இடங்களில் சென்னை 28, கோவா, சரோஜா போன்ற திரைப்படங்களைப் பார்ப்பது போன்ற உணர்வு. நட்பு/பாசம் எல்லாம் சரிதான். அதற்காகப் பார்த்த முகங்களையே பார்த்துக் கொண்டிருந்தால்... வெங்கட், கொஞ்சம் casting மாற்றுங்க!
5. மிகவும் எதிர்பார்த்த த்ரிஷா-தல இல்லாத 'இச்'. வெட்டினார்களா, கொட்டினார்களா என்று தெரியவில்லை!
6. எல்லாரையும் சாகடிக்கப் போவது என்று முடிவு செய்தாயிற்று. ஆனால் அதற்காக, இப்படியா கற்பனை வறட்சியுடன் சுட்டுத் தள்ளுவது? இன்னும் கொஞ்சம் யோசித்திருக்கலாமோ?
7. அந்தப் போலீஸ் (துணை?) கமிஷனர் எதற்காகச் செத்தார், பின் எதற்காக உயிர் பிழைத்தார் (அல்லது, பிழைக்க வைக்கப்பட்டார்!) என்று இன்னும் குழப்பம்!          (நான் லாஜிக் பற்றிப் பேசவில்லை :-))
8. பல்லேலக்கா பாட்டுக்கு பிறகு நிறைய பேர், 'ஒன்ஸ் மோர்' என்று கேட்டும் திரும்பத் திரையிடாத அந்த ரெக்ஸ் தியேட்டர் ;-)

தமிழில் வில்லனாக நடிக்கத் துணிவு வேண்டும். முன்னணி நடிகர்களில் ரஜினிக்கு அது கைவந்த கலை. கமல் 'ஆளவந்தானில்' முயன்று முக்காலா, முக்காபுலா ஆகிவிட்டார். விஜய் அழகிய தமிழ் மகனில் 'எவ்வளவோ செய்து' பார்த்துக் கழன்று கொண்டார். அஜித்... வரலாறு படத்தில் லேசாக நம்மைப் பைத்தியம் ஆக்கினார்.

மங்காத்தாவிலோ, ஊரையும் நம்மையும் கலக்கி 500 கோடியை மட்டுமில்லை, நம் மனதையும் கொள்ளை அடித்திருக்கிறார்!

தல போல வருமா!!!


Comments

  1. Nice review. Best film of thalaNice review. Best film of thala

    ReplyDelete

Post a Comment