வாழ்வின் விகிதங்கள் (Life of Pi Review)

(You may also want to read the English review)
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்

இறைவன் அடிசேரா தார்.

ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நம்ம வள்ளுவர் சொன்னதை நிறைய புலி, கொஞ்சம் வரிக்குதிரை, நிறைய கடல், சின்ன படகு, ரகவாரியாக மீன், காது கொள்ளாமல் தத்துவம் என்று திரு. ஆங் லீ கண்கவர் வண்ண ஓவியமாக வழங்கியிருப்பது: பை படேலின் வாழ்க்கை (Life of Pi).
From NewYorker

 கதை: பாண்டிச்சேரியிலிருந்து வெளிநாட்டுக்கு ஒரு மிருகக்காட்சி சாலை கிளம்புகிறது – அதன் சொந்தக்காரக் குடும்பம் உட்பட. அதில் நம் கதாநாயகன் பை படேலும் அடக்கம். நடுக்கடலில் புயல். உறவுகளை இழந்த பை, படகில் தப்பிக்கிறான். படகில் நான்கு மிருகங்களும் கூட – வரிக்குதிரை, மனிதக்குரங்கு, கழுதைப்புலி, மற்றும் புலி. புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது. அதனால், மற்ற மிருகங்கள் காலி. பைக்கு புலி மேல் பயம். பக்கத்தில் சின்ன படகில் தஞ்சம். பின்னர் சிறிது சிறிதாக இரண்டு பேரும்(?) ஒரு பரஸ்பர அவநம்பிக்கை மற்றும் பயம் கலந்த எழுதப்படாத உடன்படிக்கையின்படி கடல் கடந்து நிலத்தை எப்படி அடைகிறார்கள் என்பதை வெள்ளித்திரையில் காண்க!

பிடித்த எட்டு:

1   இந்த மாதிரிக் கதைகள் வழக்கமாகப் புத்தகமாக வரும். இதுவும் அப்படித்தான். யான் மார்டெல் எழுதிய இந்தப் புத்தகம் ஒரு சூப்பர் டூப்பர் ஹிட் என்று பட்டி தொட்டிகளில் எல்லாம் முழக்கம் இடப்பட்டது. அதே சமயம் அப்புத்தகத்தை திரைப்படமாக ஆக்க முடியாது என்பதும் ப.தொ.எ.மு.இ. அதை எல்லாம் தாண்டி ஒரு இரண்டு மணி நேரம் நம்மைக் கட்டிப் போட்டமை ஒரு சிறிய சாதனை!

2.   அது என்ன மாதிரி ஒளி/ஒலிப்பதிவு சார்? கூண்டுக்குள் அந்த புலி நடந்து வரும் போது அதன் மெல்லிய காலடி ஓசையின் நுணுக்கம், நடுக்கடலில், இரவில், மாபெரும் திமிங்கிலம் பாய்ந்து வரும் வண்ணக்கோலம், அந்தப் பாசித்தீவின் பற்பல ஜகஜ்ஜோதியான காட்சிகள்…முடியலே!

3.   பாம்பே ஜெயஶ்ரீயின் நெஞ்சை உருக்கும் தமிழ்த் தாலாட்டு (சற்று ஏறத்தாழ ‘தென்பாண்டிச் சீமையிலே’வைத் தொட முயன்றது என்றே சொல்லலாம்!)

4.   பைக்கும், ஆனந்திக்கும் இடையே வரும் அந்தப் புதுக்கவிதையான காதல் (அந்தத் தாமரை முத்திரை அபாரம்!)

5.   புஷ்டியாகத் தொடங்கி கடைசியில் நோஞ்சானாக நடந்து போகும் அந்த கிராபிக்ஸ் புலி

6.   படம் முழுதும் விரவிக் கிடந்த மெல்லிய நகைச்சுவை

7.   கப்பலின் புரட்டலால் அவதியுறும் மிருகங்களுக்கு வாழைப்பழத்தில் வைத்து தூக்கமாத்திரை கொடுப்பார்கள். அதுபோல நமக்கும் வாழ்வின் தத்துவங்களை சில/பல காட்சிகளின் வழியே கொடுத்து இருப்பது – பரவாயில்லையே!

8.   கடைசியில் இர்பான் கான் விடும் அந்த இரண்டு துளிக் கண்ணீர்.



பிடிக்காத ஐந்து:

1.  அடிக்கடி திரைக்கதையில் வரும் தொய்வு. அதைச் சரிக்கட்ட இயக்குனர் கலர் கலராய் காட்சிகளைக் காட்டி நம்மைத் திசைதிருப்பினாலும்… ம்ஹூம்!

2.   வசனங்கள்! ரஜினி பட பஞ்ச் டயலாக் மாதிரி – விடாமல் வந்து கொண்டே இருக்கின்றன. நன்கு மனப்பாடம் செய்து கொண்டால், ஏதாவது தண்ணி பார்ட்டியில் பீட்டர் விட்டு அலம்பல் செய்யலாம் – முக்கியக் குறிப்பு: இரண்டு பெக் விஸ்கியாவது உள்ளே போயிருக்க வேண்டும் – அப்போதுதான் சீரியசாக எடுத்துக் கொள்வார்கள் J

3.   இது கடவுளைப் பற்றிய படமா, இல்லை தன்னம்பிக்கை பற்றிய படமா என்று அவ்வப்போது எழும் சந்தேகம் – ஒரு வேளை அதுதான் படத்தின் நோக்கமோ என்னவோ?

4.   கிட்டத்தட்ட மூன்று மாதங்களுக்கு மேல் கடலில் இருந்தாலும் பால்மணம் மாறாத பையின் முகம் – நல்ல்ல்ல மேக்கப் சார்!

5.   சில டைரக்‌ஷன் டச் எல்லாம் கொஞ்சம் ஓவர் டைப் – (அந்த பாசித்தீவு ஒரு படுத்திருக்கும் மனிதனைப் போல இருப்பது – மஹாவிஷ்ணு?, “உனக்கு எந்தக் கதை வேண்டும் – கடவுளைப் பார்க்கும் கதைதான் வேண்டும்” என்ற அந்தக் கடைசி காட்சி!...)

மொத்தத்தில் படத்தைத் தராசில் இட்டுப் பார்த்தால் வாழ்க்கையின் விகிதமே மிஞ்சுகிறது. பை படேல்,π (அதுதாங்க, வட்டத்தின் சுற்றளவு / விட்டம்) போலவே பல விகிதங்களின் கலவையாக இருக்கிறான்.
  • தந்தையின் பகுத்தறிவு / தாயின் ஆன்மீகம்
  • புலியிடம் கொண்ட அச்சம் / தைரியம்
  • காதலில் காட்டும் கற்பனை வளமும் / ஆணித்தரமும்
  • கடைசியில் கரைக்கு வந்து அவன் சொல்லும் கதைகளின் (நம்பமுடியாத) உண்மையும் (மற்றவரை நம்ப வைக்க வேண்டிய) நிதர்சனமும்


இப்படிப்பட்ட பை படேலின் வாழ்க்கை நமக்குக் கற்றுக் கொடுக்கும் தத்துவம் நம்பர் 8347 என்னவென்றால்…

வாழ்க்கை முடிவற்றது (π விகிதம் போலவே)
வாழ்க்கை பல்வேறு சமயங்களில் பற்பல மனிதர்களையும் சந்தர்ப்பங்களையும் கொண்டு நம்மைத் தாக்கும்.
சில கொல்லும்; சில கொல்லப்படும்; சில கொல்வதைத் தடுக்கும்; சில தடுக்கக் கொல்லும்.
உன் மனம் வரிக்குதிரையாக இருக்கலாம்; கழுதைப்புலியாக இருக்கலாம்; மனிதக்குரங்காக இருக்கலாம்; புலியாக இருக்கலாம்.
நீ எந்த விலங்காக இருக்கிறாய் என்பது உன் வளர்ப்பைப் பொறுத்து இருக்கிறது.
வாழ்க்கையில் கஷ்டமும் இன்பமும் துக்கமும் மாறி மாறி வரும். ஆனால் எதுவுமே நிரந்தரம் இல்லை.
உன் வாழ்க்கையில் இருந்து எல்லா விலங்குகளும் விலகும்போது நீ பேரின்பம் அடைவாய். (அவை போகும் போது உன்னிடம் ‘போய் வருகிறேன் நண்பா!’ என்று சொல்லாது!)
எப்போதும் கடவுளையும் நம்பிக்கையையும் நம்பு!
ஸோ... மறுபடியும் சொல்லுங்க!: “பிறவிப் பெருங்கடல் நீந்துவர்…”

ஆமீன். ஆமென். ஓம்.

Comments