ஏகாம்பரத்தின் பார்வையில் சைக்கோ!

#சைக்கோ




வணக்கம் மிஷ்கின் தம்பி!
எப்டீ கீறே?
நான் இதுதான் மொத தபாவா உனுக்கு எளுதறேன். இவ்ளோ நாளா நம்ம தலைவர் படத்தையே பார்த்துக்கினு இருந்த என்னைய போன வாரம் நம்ம உதயநிதி மன்றம் பசங்கோ வந்து ரோதனை பண்ணி இந்தப் படத்த நான் பார்த்தே ஆவணும்னு ஒரே ராமாயணம்! கூடவே தனலட்சுமி கையிலே துட்டு அளுத்திட்டு போயிட்டாங்களா, அதுவும் ’தே! போயிக்கினு வாயேன்! எத்தினி நாளுதான் தலைவா தலைவான்னு அடிச்சுக்கினு இருப்பே?’னு சொல்லி அனுப்பிச்சுச்சு! சேகரை வர்ரியாடான்னு கேட்டேன். அவன் ‘அடப்போப்பா! மிஷ்கின் படம் புரியவே புரியாது!’னு சொன்னான். அவன் பட்ச்ச புள்ள! அப்பவே கேட்டிருக்கணும். இன்னா செய்யறது? எங்காத்தா ‘எளுதினதை அளிக்க முடியாதுடா. ஏகாம்பரம்!’னு அப்பவே சொல்லிச்சு!
நேத்து நானும் கோபாலும் தேட்டருக்கு வந்து பார்த்தா ஒரே சனம்! நான்கூட மெர்சலாயிட்டேன். ‘இன்னாடா, கோபாலு, தர்பாருக்குக் கூட இம்மாம் கூட்டம் வர்லியேடா?’ன்னு பேஜாராயிட்டேன். அவன் உட்னே, ‘கண்டுக்காதே நயினா! எல்லாம் மொதோ ரெண்டு நாளிக்கிதான்! அப்பாலே அம்பேல்!’னு சொல்லவே கொஞ்சம் உஷாராச்சு. அல்லாரும் ஒரே தஸ்ஸு புஸ்ஸுன்னு பீட்டர்லே புல்த்திக்கினு இருந்தானுங்கோ. நாங்க ரெண்டு பேரு மட்டும் ஓரமா நின்னுக்கினு சம்சாவும் ஜிஞ்சர் பீரும் தள்ளிக்கினு இருந்தோம்.
ஆனா படம் ஆரம்பிச்ச உடனே பர்ஷ்ட் சீன்லியே தலைய வெட்டி முண்டமா ஒரு பொண்ணை அரை அம்மணமா உக்கார வெச்சதும் அப்புடியே அல்லு வுட்டிடுச்சுப்பா! அதுவும் அந்த பொண்ணோட அம்மா ’மச்சம் மட்டும் பார்த்துக்கிறேன்,’னு சொன்னதும் கண்ணுலே தண்ணிபா!
அப்பாலே சின்ன செயலு உதயநிதி கண்ணு தெரியாத ஆளா வர்ரவும் நான் எளுந்து பிகில் அடிச்சேனா… தேட்டர்லே எல்லாரும் ஒரு மாதிரி என்னிய பார்த்தாங்க. கோபாலுகூட ‘டேய் ஏகாம்பரம்! இந்த படத்துக்கெல்லாம் பிகில் அடிக்கக்கூடாதுடா!’ன்னான். ஆனாலும் நான் விடலே! வாங்குன காசுக்கு ஒரு ஜாப் சேடிஸ்பேக்சன் வோணாம்?
மேலே உதயநிதிக்கும், பூ மாதிரி இருந்துச்சே அந்த பொண்ணு யாரு, ஹைதர் அலியா, ஆதியா? ரெண்டு பேருக்கும் லவ்ஸ் அளகா வந்துச்சுப்பா! எளயராசாவோட பாட்டு, ’காதல் ரோசாவே’ பாட்டு மாதிரியே இருந்தாலும் சூப்பருப்பா! அது சரி, அந்த கல்யாணத்துலே எல்லாரும் தரையிலே ஒக்காந்து சாப்புட்டாங்களே, பட்ஜெட் கஷ்டமா, கண்ணு? வோணும்னா உதயநிதி கிட்டே சொல்லியிருக்கலாமில்லே, வேளச்சேரியிலேர்ந்து அள்ளிப் போட்டுகிட்டு வந்திருப்பாருல்லே!
அது போவட்டும்!
அந்த பொண்ண வில்லன் அபேஸ் பண்ணினதும் நம்ம சின்ன செயலு ,கண்ணு இல்லாதேயே எப்புடி கண்டுபிடிக்கிறாருன்னுதான் கதை. அதுக்கு அந்த கை/கால் வெளங்காத அந்த பொண்ணு நித்யா வேற எல்ப்பு செய்யுது. ஆனா அந்த பொண்ணு அவங்காத்தாவை என்னமா திட்டுது? எங்காத்தாவா இருந்தா தவடையிலியே ரெண்டு வுட்டு செவுளு அவுலு ஆயிருக்கும். ஆனா பாவம், போலீஸ் டேசன்லே அத்தோட போட்டோவ பார்க்கச் சொல்லோ நமக்கே கொஞ்சம் டவுனாயிடுச்சுப்பா!
யாருப்பா அந்த வில்லன்? உரிச்ச வாழப்பழம் மாதிரி சொம்மா வழா வழான்னு கீறான்? ஆனா என்ன? லாஸ்ட் சீன் வரைக்கும் ஒண்ணியும் பண்ண மாட்டேன்றான். வர்றான், தலைய வெட்டறான், வர்றான், தலைய வெட்டறான்…
கடோசிலே அந்த அழுக்கு பொம்பள கதை சொல்லவும் கொஞ்சம் புடிபட்டிச்சு! நம்ம உரிச்ச வாழப்பழம் அங்குலிமாலாவோ அம்புலிமாமாவோ, கொஞ்சம் இஸ்கூலிலே ’இப்புடி அப்புடி’ இருந்திருப்பாரு போலே! அதுக்குன்னு அவ்ளோ அடியா குடுப்பாங்க! அதுதான் பையன் பால் மாறிக்கினான். பாவம் கொயந்தப்பா! அதுனாலே நம்ம பசங்கள எல்லாம் நல்லபடியா பத்திரமா வளக்கணும்னு சொல்லிக்கினே பாரு, அங்கதான் நீ நிக்கறே! புத்தரு அதான் சொன்னாரு போல!
படம் முடிஞ்சவொடனே அவனவன் இச்சுகாக்கா, எச்சகாக்காயா அவன் படம் சைக்கோ மாதிரி இருந்துச்சுன்னு சொல்லிக்கினு போனான். எனுக்கு ஒண்ணியும் பிரியலே. தமிள்ராக்கர்ஸிலே அந்தப் படம் இருக்குமா கண்ணு? சேகருகிட்டே சொல்லி காட்டச் சொல்லணும்.
கொஞ்ச நாள் முன்னாடி நம்ம சன் டிவிலே அஞ்சாதே போட்டாங்க. அது மாதிரி பளிச்சுன்னு இல்லாங்காட்டியும், நெறயா எடம் பிரியலேன்னாலும் படம் நல்லா இருந்துச்சுப்பா. தர்பாரையே ரெண்டு தபா பார்த்துட்டேன்! இத்த சுகூரா ஒரு தபா பார்க்கலாம்!
இப்படிக்கு,
ராயபுரம் ஏகாம்பரம்.
பி.கு. இம்மாம் இண்டெலிஜெண்ட்லியா படம் எடுத்துக்கீறியே, நீ துக்ளக் படிப்பியா? முரசொலி படிப்பியா?

Comments