2017 இறுதியில் நடைபெற்ற ஆஞ்சனேயம் நிகழ்ச்சியினைப் பற்றி சிராங்கூன் டைம்ஸ் இதழில் அப்போது எழுதிய நிகழ்கலை கட்டுரை.
********
ஆஞ்சனேயம்
– அனுமனின் ராமாயணம்
‘வில்லுடைத்துக்
கைப்பற்றிய சீதையைக் கவர்ந்து சென்ற அரக்கனை வானரங்களின் துணைகொண்டு மீட்டான் மனிதகுல
திலகம் ராமன்!’
இது
ராமாயணத்தின் ஒருவரிக் கதை. இது தலைமுறை தலைமுறையாக வெவ்வேறு கலாச்சாரங்களிலும், நாடுகளிலும்
காப்பியமாக - வடமொழியில் வால்மீகி, தமிழில் கம்பன், இந்தியில் துளசிதாசர் என்று பல்வேறு
மொழிகளில் வாய்மொழியாகவும் கேள்கதையாகவும் இந்தியர்களின் வாழ்வியலில் இரண்டறக் கலந்துள்ளது
என்றால் மிகையாகாது.
இவ்வளவு
பேர் எழுதிய ராமாயணத்தையும் தாண்டி, அக்கதையின் முக்கியக் கதாபாத்திரமான அனுமனே ராமாயணத்தை
எழுதியிருந்தால் என்ற ஒரு சிறு எண்ணப்பொறி, ஆஞ்சனேயம் என்ற நாட்டிய நாடகமாக கடந்த நவம்பர்
17ம் தேதி (17-11-2017) சிங்கையில் அரங்கேறியது.
எஸ்பிளனேட்
அரங்குகளின் கலா உத்சவம் – இந்தியக் கலைவிழாவின் தொடக்கமாக நடைபெற்ற ஆஞ்சனேயம் நாட்டிய
நிகழ்ச்சியை சிங்கப்பூரின் தலை சிறந்த இந்திய நுண்கலைப் பள்ளிகளில் ஒன்றான அப்சராஸ்ஆர்ட்ஸ், எஸ்பிளனேட் அரங்கத்துடன் இணைந்து சிறப்புற வழங்கியது.
நல்லதொரு
நாட்டிய நாடகத்துக்கு ஆழ்ந்த ஆராய்ச்சி தேவை. அதனைக் கோர்வையாகக் காட்டிட ஒரு திரைக்கதை
தேவை. வசனங்கள் இல்லாததால் அழகுற பாவங்களும் அசைவுகளும் காட்ட நடனமணிகள் தேவை. காதிற்கு
இனிய இசை தேவை. கண்ணுக்கு இதமாய் ஒளி அமைப்பு
தேவை. பிரமிக்க வைக்கும் அரங்க அமைப்பு தேவை. இத்தனைத் தேவைகளையும் பூர்த்தி செய்ய
சீரிய ஒருங்கிணைப்பு தேவை.
ஆஞ்சனேயம்
நிகழ்ச்சியில் இவையனைத்தும் மிக அருமையாக அமைந்து வந்திருந்த ஈராயிரத்துக்கும் மேற்பட்ட
ரசிகர்களின் மனம்மகிழ வைத்தது.
வால்மீகி
முனிவர் ராமாயணத்தை எழுதிய பிறகு இமயமலைக்குச் செல்கிறார். அங்கு கல்வெட்டில் எழுதப்பட்ட
மற்றொரு ராமாயணக் கதையைக் கண்டெடுக்கிறார். தான் எழுதிய ராமனின் பார்வையில் இருந்த
காதைக்கு பதிலாக அவருக்குக் கிடைத்த ராமாயணம் மிகவும் வேறுபட்டு இருப்பதைக் கண்டு ஆச்சரியிக்கிறார்.
அங்கு
தொடங்கும் ஆஞ்சனேயம், தசரதனின் அயோத்தி, அனுமன் பிறந்து வளர்ந்த கானகம், அனுமனை ராமனும்
இலக்குவனும் சந்திக்கும் ரிஷ்யமுகமலை, இலங்கையில் சீதையை ராவணன் சிறை வைத்த அசோகவனம்,
ராவணனின் அரசவை, போர்க்களம் என்று பல்வேறு இடங்களுக்குப் பயணிக்கிறது.
அனுமனின்
இந்த ராமாயணத்தை கிரேக்கக் கதை சொல்லும் முறைப்படி தேவகன்னியரும் கந்தர்வரும் வழிநடத்திச்
செல்ல அமைத்திருப்பது ஒரு சிறப்பு.
துளசிதாசர்
வழங்கிய அனுமன் சாலீசாவில் தொடங்கும் கண்கவர் நடனம், ஒரே சமயத்தில் மேடையின் இரண்டு
பக்கங்களிலும், ராமனும் மற்ற இளவரசர்களும் வளரும் போது காட்டில் அஞ்சனை அனுமனை வளர்ப்பதைக்
காட்டும் புது நாட்டிய உத்தி, கோசலை ராமனுடன் விளையாடும் போது அவர் சொல்கேள் சமர்த்தாக
இருப்பதையும் அனுமன் விளையாட்டுப் பிள்ளையாகப் படுத்துவதையும் வேறுபடுத்திக் காட்டிய
விதம், சீதையின் பிரிவைத் தாங்கொணா ராமனின் சோகத்தை வெளிப்படுத்தும் மரங்களின் நடனம்,
திரைப்படங்களில் ஒரு உச்ச நடிகர் நுழைவது போல அனுமனை வண்ணவண்ணக் கொடிகளுக்கு இடையே
(நாட்டிய சாஸ்திரத்தை ஒட்டியே) அறிமுகப்படுத்தும் அமர்க்களம்,
இரண்டாம்
பகுதி முதல் பகுதிக்கு ஒரு சிறு அளவுகூடச் சளைக்கவில்லை.
இலங்கை
நகர் பற்றிய கம்பரின் வானுயர் வருணனைகள் – கோபுரங்கள் மதிமுட்ட இருக்க, அவற்றின் பளபளப்பு
தங்கத்தையும் சூரிய ஒளியையும் கலந்தது போலிருக்க, வீட்டுக்கு வீடு கற்பகமரம் இருக்க,
தேவகன்னிகைகள் பணிப்பெண்களாயிருக்க – அப்பப்பா, கம்பன் உருவகங்களின் தலைவனல்லவோ!
அசோகவனத்தில்
சீதைக்குத் திரிசடை ஆறுதல் கூறுவதை இந்தோனேசிய நடனமாகக் காட்டிய புதுமை – அதுவும் அந்த
ஜாவா நாட்டு நடனத்தின் காலால் துணியைத் தள்ளி ஆடும் நளினம் கண்ணிலேயே நிற்கிறது.
பின்
அடுக்கடுக்காக, இருளில் மாரீசனைப் பற்றிய மருள வைக்கும் மான் நடனம், ராவணனை வீரத்துடன்
எதிர்த்து உயிர்துறக்கும் ஜடாயுவின் பறவை நடனம், அனுமனின் விஸ்வரூபக் காணொளி ஜாலம்,
பாகுபலி திரைப்படத்தை நினைவுபடுத்திய ராவணனின் அரசவை அமைப்பு,
அத்துடன் வந்த நடனத்திற்கான
அதிர வைத்த இசை, அனுமன் இலங்கையில் வைத்த நெருப்பு நடனம் என்று இரண்டாம் பகுதி அற்புதத்தின்
உச்சம்.
கம்பர்,
வால்மீகி என தமிழ், வடமொழிப் பாடல்களைச் சிங்கப்பூர், இந்தியா, இந்தோனேசியாவைச் சேர்ந்த
இசை வல்லுனர்கள் செவிகுளிர வழங்கினர். இந்தியாவின் புகழ்பெற்ற கலாக்ஷேத்ரா, சிங்கையின்
அப்சராஸ் ஆர்ட்ஸ், இந்தோனேசியாவின் பீமோ நடன மையம் ஆகியவற்றைச் சேர்ந்த தலை சிறந்த
நடனமணிகளின் நடனம் – பரதம், ஜாவா, சமகால நடனம் என அறுசுவை விருந்தாக அமைந்தது. அழகுக்கு
அணிசேர்க்கும் விதமாய், சுற்றிச் சுழன்றடித்த நவீன ஒலியமைப்பு, காட்சிகளைக் கண்முன்
நிறுத்திய பிரம்மாண்டமான பிரமிப்பூட்டும் ஒளியமைப்பு, இலைகள் விழுவதைக்கூடத் தத்ரூபமாகக்
காட்டிய கணினி வரைகலை, வண்ணமும் புதுமையும் பொலிந்த நகை, உடையலங்காரங்கள் என அனைத்தும்
நிகழ்ச்சியின் பெருந்தூண்களாய் விளங்கின.
ஆஞ்சனேயம்
நிகழ்ச்சி ஒரு மூன்று வருடக் கனவு என்கிறார், அப்சராஸ் ஆர்ட்ஸ் தலைவர் அரவிந்த் குமாரசாமி.
சிங்கையின் கலாச்சாரப் பதக்கம் பெற்ற அவருடைய அந்தக் கனவை நனவாக்க அவரும் அவர்தம் குழுவினரும்
இட்ட உழைப்பு வீண் போகவில்லை என்பதற்கு, நிகழ்ச்சி முடிந்தவுடன் கூடியிருந்த ரசிகர்களின்
தொடர் கரகோஷமே பெரும் சான்றாகும்.
சிங்கையின்
திறமைகளை வெளிச்சமிட்டுக் காட்டிய இந்நிகழ்ச்சி ஒரு நாள் மட்டும் நடந்தது ஒரு குறைதான்.
கலா உத்சவம் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் இன்னும் ஒரு நாள் நடத்தியிருக்கலாமோ?
உலகத்தரம்
வாய்ந்த இந்தியக் கலைநிகழ்ச்சிகளை சிங்கப்பூரால் நடத்த முடியுமா என்ற கேள்விக்கு,
‘இந்த நிகழ்ச்சி போதுமா? இன்னும் கொஞ்சம் வேண்டுமா?’ என்று எதிர்க்கேள்வி கேட்டு ‘முடியும்!’
என்று வலுவாகப் பதிலளித்திருக்கிறது ஆஞ்சனேயம்.
படங்கள்: (c) Apsaras Arts, Singapore
Comments
Post a Comment