#சூரரைப்_போற்று!
அமேசான் ஒளிக்காட்டில் இப்படம் வெளிவந்த பிறகு இது பெற்றிருக்கும்
வெறுப்பும் பாராட்டும் நம் சமூகம் எவ்வளவு பிளவு பட்டிருக்கிறது என்பதைத் துல்லியமாகக்
காட்டுகின்றன.
######
- பார்ப்பனீய எதிர்ப்புக்கு எதிர்ப்பு! / ஏன் தாழ்த்தப்பட்டவர்கள் முன்னேறக்கூடாதா?
- கார்ப்பொரேட் எதிர்ப்புக்கு எதிர்ப்பு! / சன் டிவி கார்ப்பொரேட் கிடையாது, ரிலையன்ஸ் மட்டும்தான்!
- ஒரு ரூபாய்க்கு எவன் விமான டிக்கெட்டு கொடுப்பான்? / மலிவு விலையில் ஃபினாயில் கிடைத்தால் கூடக் குடிக்க மாட்டீர்களா?
- பெயரிலேயே சாதி வைத்துக் கொண்டு இவர்கள் எப்படி சாதியை ஒழிப்பார்கள்? / அது எங்கள் அடையாளம்.
- ஒரு ரூபாய்க்கு டிக்கெட்டு கேட்கும் இந்தக் ‘கூத்தாடிகள்’
சினிமா டிக்கெட்டுக்களை ஒரு ரூபாய்க்குக் கொடுப்பார்களா? / அதான் அமேசானில்
ஒரு நாளைக்கு ரூ.4/-க்கு கொடுத்துட்டாங்களே, ப்ரோ!
- பிராமணத் திருமணம் காட்டாமல் சுயமரியாதைத் திருமணம் காட்டி விட்டார்களே? / கடவுள் மறுப்பு என்பது 2000 ஆண்டுகளுக்கு முன்னரே இருந்து வருகிறது…
######
இப்படிப் பல கூக்குரல்கள் கேட்டாலும், ஒன்று மட்டும் நிச்சயம்.
இதே திரைப்படம் திரையரங்குகளில் வெளி வந்திருந்தால் இந்நேரம் இந்த இரைச்சல்களால் படம்
பப்படம் ஆகியிருக்க பல வாய்ப்புகள் உண்டு. ஆனால் அமேசானில் வந்ததால் என்னதான் குய்யோ
முறையோ என்று கூவினாலும், மக்கள் பார்க்கத்தான் போகிறார்கள். இத்தனை இரைச்சலுக்கும்
பின்னால் உள்ள நல்ல விடயங்களைப் பார்க்கத்தான் போகிறார்கள்.
######
கேப்டன் கோபிநாத்தின் Simply Fly என்ற சுய சரிதை மற்றும்
பல்வேறு நிகழ்வுகளை ஒட்டி எடுக்கப்பட்ட இப்படம், இந்தக் கோவிட்-19ஆல் அடிபட்டு, திண்டாடித்
தெருப் பொறுக்கிக் கொண்டிருக்கும் பல்வேறு மக்களுக்கு ஒரு நம்பிக்கை டானிக்!
பேக்கரி வைத்து நடத்துவதாகட்டும், விமானச் சேவை நடத்துவதாகட்டும்
அதற்குத் தேவையான முதல் மூலதனம்: அதைச் செய்து முடிக்க வேண்டும் என்ற தன்னம்பிக்கை.
அதைச் சூரியாவும் அபர்ணாவும் மாறனாகவும், சுந்தரியாகவும் வாழ்ந்தே காட்டியுள்ளனர்,
தன்னம்பிக்கையுடன்.
#சுதா_கொங்கரா (அப்படி ஒரு சாதியாமில்லே! தெரியலேன்னாகூட
சொல்லிடுவாங்க போல!) மீண்டும் ஒரு நல்லதொரு படத்தைக் கொடுத்துள்ளார். பல இடங்களில்
அழகான ’டச்’கள்
(முதல் காட்சியில் அபர்ணா, சூரியாவின் ஆட்டத்திற்கு இசைய அளிக்கும் அட்டமி, தெருவிலேயே
எல்லோரும் கேட்கும்படி ஆட்டோவில் இருவரும் பேசும் காதல் மொழி, குறைப் பிரசவமான முதல்
விமானச் சேவைக்குப் பரிசாகக் கிடைக்கும் நிறைப் பிரசவக் குழந்தை, அரசாங்க அலுவலகத்தின்
அலைக்கழிக்கும் அலப்பறைகள், முதல் முதலாக விமானத்தை விட்டு வெளியே வரும் அந்தப் பாம்படம்
தொங்கும் சிறுவாட்டு ஆத்தாக்கள்…)
######
குறைகள் இல்லாமல் இல்லை…
- நீஈஈளம்;
- சில பல காட்சிகள் déjà vu போலத் திரும்பத் திரும்ப வருவது போன்ற உணர்வு,
- ஒரு விமானச் சேவை நடத்த சு, சூ, செ, சே என 4 பேர் போதுமா? (CEO-cum-pilot-cum-security-cum-janitor: சூரியா; Catering: சுந்தரி; Software++: செபாஸ்டியன்; Pilot: சே)
- இந்திய விமானப் படைத்தளங்களும், வீரர்களும் ஏதோ புறம்போக்கு நிலம் மற்றும் அடியாட்கள் போலப் பயன்படுத்தப்படுவது…
######
இருப்பினும்…
மீண்டும் மீண்டும் மாறன் அடிபட்டு வரும்போது நமக்கே ஏற்படும்
அந்த ‘கொஞ்சம் விட்டுக் கொடுத்துப் போனால் என்ன?’ என்ற எண்ணத்துக்கு பதிலளிக்கும் வண்ணம்
வைக்கப்பட்ட அந்தக் காட்சிகள் (’வித்துருந்தேன்னா விஷம் வெச்சிருப்பேன்!’ ‘நூறு கோடி
பேர் பறக்கணும்னு நாம சொன்னதை மறந்துட்டியா?’) நம்மை மீண்டும் கட்டிப் போடுகின்றன.
படத்தில் நெடுமாறன் மீண்டும் மீண்டும் அழுகிறார்; கண்ணீர்
சிந்துகிறார். ஆனால் அவர் தந்தை (நிழலும் நிஜமும் 😊) இந்தத் #திருக்குறளை சொல்லிக்
கொடுத்திருப்பார் என நினைக்கிறேன்!
அழக்கொண்ட எல்லாம் அழப்போம் இழப்பினும்
பிற்பயக்கும் நற்பா லவை
######
ஒரே ஒரு ஆதங்கம். அந்தப் பொண்ணு அபர்ணா நடிச்ச நடிப்புக்கு
அந்த பொண்ணு ஏர் டெக்கானையும், சூரியா பேக்கரியும் வெச்சு நடத்தி இருந்தா இன்னும் அமோகமா
இருந்திருக்கும்! என்ன செய்யுறது? ஹூம்!
######
சூரரைப் போற்று, பாரதியின் 30வது புதிய ஆத்திச்சூடி. 29வது:
‘சுமையினுக்கு இளைத்திடேல்’; 31வது: ’செய்வது துணிந்து செய்’…
தடைகள் தரும் சுமையால் இளைக்காமல் துணிந்து செய்ய நல்ல முயற்சிகளை
எடுக்கும் எந்த ஒரு சூரரையும் போற்றத்தானே வேண்டும்? போற்றுவோம்!
#சூரரைப்_போற்று #நம்பிக்கை
Comments
Post a Comment