ரஜினி – கமல்: நிகழ முடியாத அற்புதங்கள்!

 

******************

இதை November 2020 தேக்கா எக்ஸ்பிரஸ் இணைய இதழிலும் படிக்கலாம். இல்லை, வழி தவறி வந்திருப்பின் இங்கேயேயும் படிக்கலாம். :-)

https://thekkaexpress.com/rajini-kamal-srig

******************

தமிழில் ஒரு பழமொழி உண்டு.

ஒரே உறையில் இரண்டு கத்திகள் இருக்க முடியாது.

சரி, இரண்டு கத்திகளும் வெவ்வேறு மாதிரி இருந்தால், ஒரே உறையில் இருக்கலாமே!

தமிழகத்தின் கடந்த 75 ஆண்டுகளின் வரலாற்றைப் பார்க்கும் போது இப்படிப்பட்ட பல இரட்டைக் கத்தி ஆளுமைகள் இருந்துள்ளனர்; இருந்து வருகின்றனர்.

எம்ஜிஆர்-சிவாஜி, எம்ஜிஆர்-கலைஞர், கலைஞர்-ஜெயலலிதா என்று ஆரம்பித்த இந்தக் கத்தி விளையாட்டு இப்போது அஜித்-விஜய் என்ற அளவில் ரத்தம் சொட்டச் சொட்ட ஆடப்பட்டு வருகின்றது.

இதில் ஒரு முக்கியமான ஜோடி: ரஜினி-கமல்!

நடிப்பின் மீதும், தொழில் மீதும் அதீத பக்தி; நெஞ்சத்து அகம் நகும் நட்பு; பாலச்சந்தர், சிவாஜி, நாகேஷ் என்று திரைத்துறை ஜாம்பவான்களிடம் உள்ள தீவிர மரியாதை; தமிழகம் மட்டுமல்லாமல் இந்திய, அனைத்துலக அளவிலும் இவர்கள் பெற்றிருக்கும் அன்பு, மரியாதை; நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக ரசிகர்களை தங்களுக்கே உரிய வழிகளில் மகிழ்வித்து வருவது என்று இவ்விருவரும் நம் அனைவரின் நினைவடுக்களிலும் முன்னால் இருப்பது நாம் அறிந்ததே!

கே பி பள்ளியிலிருந்து கிளம்பிய இந்த இரு ரயில் வண்டிகள், பல்வேறு பாதைகள், வளைவுகள், மலைகள், பள்ளத்தாக்குகள், விபத்துக்கள் எனப் பயணித்து இப்போது அரசியல் என்னும் ரயில் சந்திப்பை அடைய உள்ளன.

அவர்களின் கடந்த காலத்தைக் கண்ணோட்டமிட்டால் இவ்விரு ரயில்களும் எதிர்காலத்தில் எங்ஙனம் பயணிக்கும் என்பதைக் கிரகிக்க உதவும்.

சினிமாஹாசன்!

சொல்லத்தான் நினைக்கிறேன்! 1973ல் வந்த திரைப்படம். சின்னப் பையனாக இருக்கும் போது அந்தப் படத்தைப் பார்த்ததாக நினைவு.

இரண்டு விடயங்கள் அப்படத்தில் என் கவனத்தை ஈர்த்தன. ஒன்று மெல்லிசை மன்னரின் கொணகொண குரலில் ‘சொல்லத்தான் நினைக்கிறேன்’ என்ற அந்தப் பாடல். இரண்டாவது, ‘தட் ஈஸ் கமல்’ என்று ‘எரியும் லம்போர்கினி’யுடன் (Flaming Lamborghini) அதீத வில்லத்தனத்தைக் காட்டிய கமல்ஹாசன். அந்த வில்லன் கதாபாத்திரமே அவர் திரை வாழ்க்கைக்கு ஒரு மைல்கல்லாக இருந்தது.

அதை இயக்கியவர் இயக்குனர் சிகரம் கே பாலச்சந்தர் என்பதைச் சொல்லத் தேவையில்லை! பின்னர் அரங்கேற்றம், அவர்கள், நினைத்தாலே இனிக்கும், மூன்று முடிச்சு, பதினாறு வயதினிலே, உணர்ச்சிகள், சிகப்பு ரோஜாக்கள் என்று ஆரம்ப காலத்திலேயே தன்னுடைய பாதையை வித்தியாசமாக்கிக் கொண்டார் கமல்.

ஒரு வகையில் அவருக்கு அவருடைய குடும்பப் பின்புலம் ஒரு பக்கபலமாக இருந்தது என்பேன். ஓரளவுக்கு வசதியான குடும்பம், வழக்கறிஞர்களான தந்தை மற்றும் அண்ணன்கள், படிப்புக்கு முக்கியத்துவம் கொடுத்தது என்று வெவ்வேறு காரணிகள் கமல்ஹாசனை ‘வந்தால் மலை, போனால் முடி!’ என்று துணிந்து திரைத்துறையில் இறங்கச் செய்துவிட்டது எனலாம். யார் கண்டார்கள்? கமல் ஒருவேளை திரைத்துறையில் தோற்றிருந்தால் (?!), பரமக்குடியில் பெட்டிக்கடை வைத்துக் கூடப் பிழைத்து இருக்கலாம்! நம்ம சிங்கம் சூரியா மாதிரி!

அந்த மனப்பான்மையே அவரை மீண்டும் மீண்டும் வித்தியாசமான கதாபாத்திரங்களையும் களன்களையும் தேர்ந்தெடுக்கத் தூண்டின; வெள்ளித்திரையினால் கிடைத்த பணத்தை மீண்டும் வெள்ளித்திரையிலேயே கொட்ட மனமும் வந்தது. திரும்பத் திரும்ப இயக்குனர் திலகத்திடம் சென்று மோதிரக் கையால் குட்டுப்படவும் வைத்தது.


ஆனால், ஒவ்வொருவருக்கும் ஏதோ ஒரு குறையை ஆண்டவன் – இது ஆழ்வார்பேட்டையில் இருக்கும் ஆண்டவன் இல்லை 😊 - வைத்து விடுகிறான். எவ்வளவுதான் வித்தியாசங்கள் காட்டினாலும், முகத்தை அழித்துப் பன்முகம் காட்டினாலும், உலகத்தரத்திற்கு ஒரு மாற்று குறைவாகவே அவரது படங்கள் நிற்கின்றன. அன்பே சிவம், குணா, உத்தம வில்லன் போன்ற படங்களில் சில பகுதிகள் நம்மை இருக்கையின் நுனிக்குக் கொண்டு சென்றுவிடும் ஆனால் அடுத்து வரும் காட்சிகள் ’தொப்’பென்று நம்மைக் கீழே தள்ளுவது  நிதர்சனம். அரங்கேற்றம், அவள் ஒரு தொடர்கதை, வறுமையின் நிறம் சிவப்பு, கல்கி, சிந்து பைரவி போன்று காலத்துக்கு முந்தைய படைப்புகளைத் தந்த கே.பி.யிடம் இருந்த அந்தத் துணிச்சலை கமல் ஓரளவு மட்டுமே கற்றுக் கொண்டதனால் அவர் ஒரு நிகழ முடியாத அற்புதமாகவே போய்விட்டார்.

ரஜினியிசம்


கமலுக்கு மாறாக ரஜினி ஒரு சாதாரண குடும்பத்தில் இருந்து வந்து, கூலியாக, பேரூந்து நடத்துனராகப் பணியாற்றி, திரைப்படக் கல்லூரியில் நடிப்பு கற்று சிறு வேடங்களில் தோன்றி தனக்கென ஒரு பாணியை - வேகமான நடை, கன்னடம் கலந்த வசன உச்சரிப்பு, சிகரெட்டைத் தூக்கிப் போடுவது, மாட்டுடன் கராத்தே - உருவாக்கிப் பாமர மக்களை (என்னையும் சேர்த்துத்தான்) கவர்ந்தது உண்மை.

எழுபதுகளின் இறுதியில் தமிழ்த்திரையின் இரு இமயங்களான சிவாஜியும் எம்ஜிஆரும் கதாநாயக விளையாட்டிலிருந்து ஓய்வு பெற்றுவிட்ட நிலையில் இவ்விரு இளைஞர்களும் அந்த இடங்களை நிரப்ப நிறைய மெனக்கெட்டார்கள். அதில் பெருமளவுக்கு வெற்றியும் பெற்றார்கள்.

அதிலும் ரஜினியின் வெற்றி நம்ப முடியாத அளவுக்கு வளர்ந்தது. கறுப்பு நிறம்; அழகு குறைவுதான்; எவரையும் எளிதில் கவராத கண்கள்; தமிழ் உச்சரிப்பு; விடாத லாகிரி வஸ்துக்களின் பயன்பாடு, ஆரம்ப காலத்தில் சக நடிகைகளுடன் காதல் போன்ற தொடர்புகள், திடீர் வெற்றி தலைக்கேறியதால், மன அழுத்தம் கூடி, ‘இனிமேல் நடிக்கவே போவதில்லை!’ என்று எடுத்த முடிவு (அதைத் திரும்பப் பெற்றார் என்பது இன்னொரு கதை!), இப்படிப் பலதரப்பட்ட குறைகள் இருப்பினும் அவருடைய கடும் உழைப்பும் தொழில் பக்தியும் அவரைப் புகழின் உச்சிக்கே கொண்டு சென்றது.


இப்படி அவர் வாழ்க்கையில் அடிப்படையாகப் பட்ட கஷ்டங்களினால் ஏற்பட்ட ஜாக்கிரதை உணர்வின் வெளிப்பாடு அவருடைய பின்னாள் நடவடிக்கைகளுக்குக் காரணமாயின.

அதனாலேயே அவரால் பாலச்சந்தரின் இயக்கத்தில் ஆரம்பக்கட்டத்தில் நடித்த அளவுக்கு பின்னால் மாறுபட்ட பாத்திரங்களில் நடிக்க முடியாமல், தனக்கென இட்டுக் கொண்ட மசாலா கதாநாயக பிம்பத்தை உடைத்து வெளிவர முடியாமல் போயிற்று.

முள்ளும் மலரும், ஆறிலிருந்து அறுபதுவரை, புவனா ஒரு கேள்விக்குறி, நினைத்தாலே இனிக்கும், தில்லுமுல்லு என்று ஒரு சில அக்காலப் படங்களில் ’நடித்த’ அந்த சிவாஜிராவ் கெயிக்வாட், சமீபத்தில் அவருடைய நடிப்புக்காக ஓரளவு (ஓரளவு மட்டுமே!) பேச வைக்கக் கூடிய படங்களாக கபாலியும் காலாவும் அமைந்தது துரதிருஷ்டமே!

எப்போதும் ‘தோற்று விடுவோமோ?’ என்ற அந்த மத்தியம உணர்வுதான், அவர் ரத்தமும் வியர்வையும் சிந்தி ஈட்டிய செல்வத்தை சினிமாவிலேயே திரும்பப் போடாமல் வேறு இடங்களில் முதலீடு செய்ய வைத்தது. அந்த மத்தியமத்தனமே இப்போது அவருடைய அரசியல் வாழ்வையும் தொடங்குவதற்கு முன்னரே முடித்துவிடும் போலத் தெரிகிறது.

இறையா? சிறையா?


இப்படித் திரைப்படங்களில் மட்டுமல்லாமல் தம் சொந்த வாழ்விலும் ரஜினியும் கமலும் மாற்றுப்பாதைகளில் பயணித்தனர். முதலில் ரோமியோவாகத் தோன்றினாலும், சீக்கிரம் மணமுடித்து ஒரு பசுவாக மாறியது ரஜினி என்றால், ‘காதல் இளவரசன்’ என்ற பட்டத்தைத் தக்கவைக்க கமல் பல்லாண்டுகள் பாடுபட்டதைத்  தமிழ்கூறும் நல்லுலகம் அறியும்!

இமயமலையில் உள்ள மஹா அவதார் பாபாவுக்காகப் படம் எடுத்த ரஜினிக்கு பதிலாக ‘கடவுள் இருந்தால் நன்றாக இருக்கும்!’ என்று ரங்கநாதர் சிலையின் மேல் சாய்ந்து வசனம் பேசியவர் பார்த்தசாரதி என்கிற கமல்.

மதத்தை அவரவர் அறைக்குள் வைத்திருப்பது நல்லது என்று கமல் கூறினால், ரஜினி ஆன்மிக அரசியல் தருவேன் என்று கூறுகிறார்.

கமல் அரசியலில் இருக்கிறார். அவரது மய்யம் அரசியல்வெளியின் மையத்துக்கு வரப்  பாடுபட்டுக் கொண்டு இருக்கிறது.

ரஜினியின் கட்சி சீக்கிரம் ஆரம்பிக்கப்படும் என்று கொஞ்ச நாள் முன்னால் அறிக்கை வந்தது. அதற்கான முஸ்தீபுகள் பல வருடங்களாக நடந்தும் வருகின்றன.

தமிழகத்தில் திரைத்துறையிலிருந்து அரசியலுக்கு வந்து வெற்றி பெற்றவர்கள் இருந்தாலும் (எம்ஜிஆர், கலைஞர், ஜெயலலிதா), தோற்று விட்டவர்களும் (சிவாஜி, விஜயகாந்த் உள்பட) உள்ளனர். மொத்தத்தில் அந்தக் களத்தில் வெற்றி பெறுவது அவ்வளவு சுலபமில்லை.

தமிழகத்தில் (ஏன் இந்தியாவிலேயே கூட) சாதி அரசியல் மிகவும் தீவிரமானது. அதை உடைக்க பணபலத்தைத் தவிரத் தேவையானது:

  • முதலாவதாக, தீவிரமான கட்சிக் கட்டுக் கோப்பு.  
  • இரண்டாவதாக மக்களின் மனதைக் கவரக்கூடிய ஒரு ஆளுமை.

கமலும் கட்டுக்கோப்பும்

தமிழகத்தின் கட்சிகளுள் திமுகவில் கட்டுக்கோப்பு அதிகம். அதை நடத்திச் சென்ற கலைஞரிடம் அரசியல் சாணக்கியத்தனம் அதிகம். அதனால் அவரால் முக்கால் நூற்றாண்டுக்கு மேலாக அரசியலில் கோலோச்ச முடிந்தது.

கமல் திமுகவைப் போல ஒரு கட்டுக் கோப்பான கட்சியாக மய்யத்தை உருவாக்க முயற்சி செய்கிறார்.

படித்தவர்களை பொறுப்பு நிலைகளுக்கு அமர்த்த விழைகிறார்.

பிக் பாஸில் உயிர் கொடுத்துப் (மற்றவர்களின் உயிர் எடுத்து?) பணம் பண்ணி அப்பணத்தைக் கட்சி நடத்தச் செலவிடுகிறார்.

படித்த, நகர்புற வெள்ளைச்சட்டை மென்பொருளாளர்களுக்கு கொஞ்சம் போல நம்பிக்கை கொடுக்கிறார்.

அவர் திரைப்படத்துறையில் காட்டிய ஒரு வகை சர்வாதிகாரத் தன்மையைக் கட்சி நடத்துவதிலும் காட்டுகிறாரோ என்று எனக்குத் தோன்றுகிறது. அது ஒருவகையில் நல்லதுதான். (இதை எழுதும் போது, பிக் பாஸில் அவர் கூபாவின் முன்னாள் அதிபர் ஃபிடெல் காஸ்ட்ரோவினைப் போன்று சீருடை அணிந்து வந்த புகைப்படம் வாட்ஸாப்பில் வந்தது!)

அவரிடம் உள்ள ஒரே குறை. அவருக்கும் திராவிடக் கட்சிகளுக்கும் இடையே உள்ள வேற்றுமை எதுவும் நமக்குத் தெரியவில்லை. ’ஊழலை விட்டுவிட்டாயே!’ என்று நீங்கள் உச்சு கொட்டுவது கேட்கிறது. ஊழல் இன்று மக்களிடையே பழக்கமாகிவிட்டது. குக்கர், மோதிரம், பணம் என்று பல்வேறு வகைகளில் இலவசங்களுடன் தில்லாகத் துட்டு பெற்று மக்கள் ஓட்டு போடுவதை மாற்றுதல் அவ்வளவு சுலபமில்லை. தமிழகத்தைப் பார்த்து வட இந்திய மாநிலங்களிலும், ஏன் – அமெரிக்கத் தேர்தலில் கூட இதே முறை பின்பற்றப்படுவது கேட்டு நம் தமிழ் நெஞ்சம் ‘தமிழனென்று சொல்லடா! தலைநிமிர்ந்து நில்லடா!’ என்று விம்மியது உண்மை!

இதற்கிடையில் அவரது அறிக்கைகள்! அதைப் புரிந்து கொள்ள முனைவர் பட்டம் பெற வேண்டும் என்று மீம் உலகம் சொல்வது உண்மைதான்.

ஜெயலலிதா அம்மையார் இறந்த போது ’சார்ந்தோர் அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்’ என்று மொட்டையாக ட்வீட்டிய கமல் சொல்வது கள்ளக்குறிச்சிக்குப் பக்கத்தில் இருக்கும் கச்சிராயபாளையத்தில் உள்ள கரும்பு விவசாயிக்கு புரியுமா?

மக்களின் அறிவை ஒரே இரவில் உயர்த்தப் போகிறேன் என்றால், அதற்கு அவர் நடித்த தேவர் மகனில் செவாலியே சிவாஜி பேசும் தங்க வசனமே பதிலாகும்: ’எல்லாப் பயபுள்ளையும் மெதுவாத்தான் வருவான்!’

ரஜினியும் தகதக ஆளுமையும்


எதற்கு ஒளிவு மறைவு? எம்ஜிஆர்/ஜெயலலிதா போன்றதொரு தகதக ஆளுமை ரஜினியிடமே இருக்கிறது என்பது உ.கை.நெ.க.

ரஜினிக்கு மக்களிடம் உள்ள அந்தக் கவர்ச்சி ஓட்டுக்களாக மாறும்தான். விஜயகாந்துக்கே விழும்போது ஏன் ரஜினிக்கு விழாது என்கிறீர்களா? வாஸ்தவம்தான்!

(அப்படி அவர் நினைக்கிறாரோ இல்லையோ அவருக்குத் தூபம் போட்டு விபூதி பூசும் கூட்டங்கள் கண்டிப்பாக நினைக்கின்றன.)

ஆனால், அவர் கொக்கொக்க கூம்பும் பருவத்துக்குக் காத்திருந்து காத்திருந்து காலங்கள் போனதும், அவர் மட்டுமல்லாமல் மற்றவரையும் குழப்பியதும்தான் மிச்சம்.

அதனால் அவர் அவ்வப்போது அரை மனதோடு கோளாறு அறிக்கைகள் விட. நேற்று வந்த கோமாளிகூட, ‘இதை இவரு இன்னுமா சொல்லிக்கிட்டு இருக்காரு!?’ என்று காலை வாருகிறார்.

இப்படி சட்டென ஒரு முடிவு எடுக்க முடியாமல் ஜவ்வாக இழுத்துப் பறிக்கும் அந்த ஒரே ஒரு குறைதான் அவரையும் நிகழ முடியாத அற்புதமாக ஆக்கிவிட்டது.

அடிப்படையில் ரஜினி ஒரு பயந்தாங்கொள்ளி என்றே சொல்வேன். படம் ஜெயிக்க பயம். ஆட்சியைப் பிடிக்க பயம். ஊழல் கண்டால் பயம். அதிகாரத்தைக் கண்டால் பயம். தொண்ணூறுகளின் மத்தியில் ‘கடவுளே காப்பாற்ற முடியாது’ என்று சொன்னது கூட பயத்தின் வெளிப்பாடுதான்.

அது அவர் வந்த பாதையைக் காட்டுகிறது. கமல் படத்தில் இடம்பெற்ற இரண்டு அருமையான வசனங்களை ரஜினிக்குப் பொருத்தமாக வைக்க முடியும் என்று நான் நினைப்பதுண்டு.

முதலில் தெனாலியில் கமல் கொடுக்கும் பயப் பட்டியல். அதை ரஜினி சொல்லியிருந்தால் ‘அரசியலைக் கண்டு பயம். அரசியல்வாதியைக் கண்டும் பயம்.’ என்று கூட்டியிருப்பார்.

அடுத்ததாக, ’தலைவா, தலைவா’ என்று கூவியழைக்கும் மக்கள் சக்தி அவர் பக்கம் இருந்தும், எதையும் செய்யாத இயலாமையைக் காணும் போது, நாயகன் படத்தில், ARSஐப் பார்த்து கமல், ‘என்ன போலீஸ் நீங்க! எல்லா பவரும் உங்க கிட்டே தானே இருக்கு! உள்ளே போட்டு முட்டிக்கு முட்டி தட்ட வேண்டாமா?’ என்று வெடிப்பது தான் நினைவுக்கு வருகிறது.

 என்னதான் நடக்கும்?

 நோக்கம் உயர்வாக இருப்பினும் கமலின் மக்கள் நீதி மய்யம், கம்யூனிசத்தை ஒட்டி இருப்பதால், ஓரத்துக்குத் தள்ளப்பட்டு ஒரு சிறு புள்ளியாக மாறவே வாய்ப்புகள் அதிகம்.


சினிமாப் பந்தயத்தில் இரண்
டாவதாக வந்த கமல், அரசியல் பந்தயத்தில் தற்போது முன்னிலை வகிக்கிறார். என்ன, ரஜினி இன்னும் களத்தில் இறங்கக்கூட இல்லை. 😊

ரஜினி அரசியலுக்கு வரமாட்டார். உடல்நலம் தவிர அரசியல் கொடுக்கக் கூடிய மன உளைச்சல்களைச் சந்திக்க அவருக்குத் திராணி இல்லை என்பது என் கணிப்பு.

அரசியல் என்னும் இரண்டாம் இன்னிங்ஸில் வெற்றி பெற இவ்விருவருக்கும் தேவை கடும் உழைப்பு, விடா முயற்சி மற்றும் நிறைய நேரம். இவையனைத்தும் இருப்பதாகத் தோன்றினாலும் அதை நிறைவேற்ற அவர்களுக்குத் ‘தம்’ இருக்குமா?

எது எப்படி இருப்பினும் கோவிட் காலத்திலும் அண்ணாத்தே, விக்ரம், தலைவன் இருக்கிறான், இந்தியன் 2 என்று வேஷமிட்டு ரசிகர்களைக் களிக்க வைக்க அவர்களுக்கு எம் வாழ்த்துக்கள்!


Pictures courtesy: Various Internet sources.

Comments