அன்புள்ள தம்பி ரஞ்சித்துக்கு,
ராயபுரம் ஏகாம்பரம் எளுதிக்கறது.
நல்லா கீறியா தம்பி? எல்லாத்துலேயும் நீலம் நீலம்னு சொல்லிக்கினு
உஜாலா சொட்டு நீலம் மாதிரி ஆவலியே கண்ணு?
நேத்து நம்ம அம்மாசாணியிலே சார்பட்டா பரம்பரை பாத்துகினேன்ம்பா!
சும்மா சுகுரா இருந்துச்சுப்பா!
ஒடனே உனுக்கு கடுதாசி எளுதணும்னு தோணிச்சா, அதான் உக்காந்துகினேன்.
பாக்ஸிங் பத்தி கதை கட்டச் சொல்லோவே சும்மா ஜிவ்வுன்னு இருந்திச்சுப்பா.
நான் சின்ன புள்ளையா இருந்தப்போ நம்ம நைனா இந்த மேட்சுக்கெல்லாம் இட்டுகினு போவாரு.
நீ சொன்ன அத்தினி பரம்பரையும் அப்புடியே கண்ணு முன்னாடி ஆடுச்சுன்னா பார்த்துக்கியேன்!
நம்ம ஆரியா உரிச்ச வாளப்பளம் கணக்கா இருந்தாக்கூட நல்லா பாடி
ஏத்தியிருக்குது! இன்னா, அளுவாச்சி சீன்லே எல்லாம் கொஞ்சம் சிரிப்பாச்சி ஆயிடுச்சி!
ஆனா சும்மா கால்பாடம் குடுத்துக்குனு பட்டாம்பூச்சி மாதிரி தாவித் தாவி அடிக்கச் சொல்லோ
நானே எழுந்து அடிக்கலாம் போல இருந்துச்சு! ஆனா, முடியலே கண்ணு! ஒரே முதுகு வலி! வயசாயிடுச்சு
இல்லே! கூட கோபாலுதான் இருந்தான். ‘டேய்! செவுள்லே வுட்டேன்னா! ஏளு களுத வயசாச்சு,
பாக்ஸிங் கேக்குதா உனுக்கு!’ அப்டீன்னு சவுண்டுவுடவே கம்முனு ஒக்காந்துக்கினேன்.
அந்த ‘டாடி’ பீட்டர் வுட்டுக்கினே ஆரியாவ உசுப்பேத்திக்கினே
இருந்தானா… அவன மாதிரியே எங்கூட்டாண்ட கூட ஒரு டிங்கு ஆளு இருந்தாப்பல! அவரும் இப்டிதான்
ஒரேயடியா பீட்டர் உடுவாரு. அவங்க வூட்டுலே கேக்கு, மாட்டுக்கறி எல்லாம் கெடைக்கும்.
எங்க நைனாவுக்கு நல்ல தோஸ்த்துகூட. இப்போ அவரு புள்ளகூட கல்ப்புலே பாய்ங்க ஊருக்கு,
அதாம்பா துபாய், போய் நல்லா துட்டு பாத்துக்கினான்.
நான்தான் எங்கம்மா பள்ளிக்கூடப் பையைத் தூக்குடான்னு திட்டச்
சொல்லோ, ஆர்பராண்ட போய் சின்ன சின்ன வேலை செஞ்சு, துட்டு பாத்து, பீடி வலிச்சுக்கினு,
எம்ஜிஆர் படம் மொதல் ஷோவுக்கு அடாவடி செஞ்சி டிக்கட்டு வாங்கிக்கினு, சல்பேட்டா அடிச்சு,
வவுறு காய்ஞ்சு… எல்லாம் பாளாப் போச்சுப்பா! அப்பத்து இருந்து ஏதோ எலீக்சன் வருதா,
கொஞ்சம் தோதாக் கீது! கைலே கொஞ்சம் துட்டும் புரளுது.
எம் பொஞ்சாதி தனமும் இத்தினி நாளு, உன் படத்துலே கபிலன் பொஞ்சாதி
மாரியம்மா திட்டறாமாதிரி திட்டி திட்டி பையன் சேகரை ஒளுங்கா படிக்க வெச்சி ஏதோ அவன்
ஒரு நெலமைக்கு வந்துட்டான்.
ஆரியாவை அவங்க அம்மா தொடப்பக்கட்டைலே பொளக்கும் போது, நம்ம
அம்மாவும் இப்டி பொளந்து இருந்தா நாமளும் ஒளுங்கா இருந்திருப்போமோன்னு தோணிச்சு ரஞ்சித்து!
சோக்கா காமிச்சுக்கினே கண்ணு! நல்லா இரு.
ஒரு நிமிட் இரு. கண்ணு வேர்க்குது…
அது யாருப்பா அது – ஆரியாவோட பொஞ்சாதி? பஷ்ட் நைட்டுலே ஒரு
குத்தாட்டம் போட்டுச்சு பாரு! அல்லு வுட்டுடுச்சி எனுக்கு! பக்கத்துலே தனத்தாண்டே கேட்டென்:
‘இன்னாமே! நீ இப்டி எல்லாம் ஆடவேயில்லையே?’ அதுக்கு அது, ‘ஆமா! நீ ஆரியா மாதிரி இருந்தா
நான் கூடத்தான் ஆடியிருப்பேன்! புள்ளைக்கு கடாமாடு வயசாயிடுச்சு! கெளத்துக்கு குத்தாட்டம்
கேக்குதா?’ அப்டீன்னவே நான் கம்முனு குந்திக்கினேன். இருந்தாலும் நான் அப்போ கேட்ட
அந்த பறைக் கொட்டு நியாபகம் அப்படியே வந்துடுச்சிப்பா! அந்தப் புள்ளை சந்தோசு அட்டகாசமா
மீஜிக் போட்டுக்கீது! நல்லா எஞ்சாய் பண்ணட்டும் எஞ்சாமி!
அப்பாலே அதே பொண்ணு, மேட்சுக்கு முன்னாலே தொடுப்பு வெச்சுக்கக்கூடாதுன்னு
கட்டுப்பாடியோட இருந்தப்போ, எனுக்கு உடம்பு சரியில்லாதப்போ தனம் வெரதம் இருந்ததுதான்
நெனப்பு வந்துச்சுப்பா! புருசனும் பொஞ்சாதியும் ஒண்ணா இருக்க எவ்வளவோ வளி இருக்குது
இல்லே?! சூப்பரு கண்ணு!
அவங்களுக்கு நிச்சயம் பண்ணும்போது அந்தப் பெருசு, ’நிலம்
சாட்சியாக, சுத்தி இருக்கும் கடல் சாட்சியாக, 42 வகை அரிசி சாட்சியாக…’ அப்டீன்னு சொல்லிக்
கடோசிலே சாமி பேரு எல்லாம் சொல்லும் போது மயிர்கூச்சலாயிடுச்சுப்பா. நமக்கு சாமி நம்மளச்
சுத்தி இருக்கிறது தான் இல்லே?! டக்கரு!
ஆமா!? படத்துலே இன்னா ஒரு ஐநூறு பேரு இருப்பாங்களா? ஒரே ஜனம்.
எவனைப் பார்க்கறது? எவனை வுடறது? ஒரே கன்பீசனா
ஆயிடுச்சு. அப்பறம் கோபாலுதான் சொன்னான், ‘ஏகாம்பரம், நம்ம ஏரியாவே ஒரே நசநசன்னுதானே
இருக்குது. அதான் காட்டியிருக்கான்!’ அதுகூட சர்தான்.
எப்பவும் போல ஆரியா அவன் கோச்சரு – அதாம்பா ரங்கன் வாத்தியார்
மானத்தைக் காப்பாத்த பெட்டு கட்டி வேம்புலிய அடிக்கிறேன்னு சொல்ல, அதுக்குள்ளே ஆயிரம்
கஷ்டம் வர, ஆரியாவுக்கு தொப்பை வெளியே வர, நமக்கு கொஞ்சம் கொட்டாவி வர, இண்ட்ரோலுக்கு
அப்பாலே தனம் உள்ளார போயிடுச்சி. இன்னாமேன்னு கேட்டென். ‘ஐயே! துண்றதுக்கு சோறு வடிச்சிட்டு
வரேன்’னு சொல்லிச்சா. நானும் வாட்ஸாப்புலே நித்தியானந்தா வீடியோ கொஞ்ச நேரம் பார்த்துகினேன்.
(அந்தாளு குஜாலா கைலாசத்துலே கீறாரு! அவரப் பத்தி படம் எடேன்!?)
அந்த ஆளு பசுபதி இன்னா ஆக்ட்டு குடுத்துக்கீறாருப்பா! கண்ணுலியே
அம்மாம் ஜனத்தையும் கண்ட்ரோல் பண்ணிக்கினு… ப்ப்ப்பா!
கூடவே அந்த டான்ஸிங் ரோஸ் – யம்மாடி! இன்னா ஒடம்பு அது! சும்மா ரப்பர் மாதிரி வளையுது! நான் கூட சேகரை கூப்புட்டுப் பாருடான்னு சொன்னேன். அவன், ‘இரு நைனா! டிக்டாக் வீடியோ போட்டுட்டு வரேன்!’னு சொன்னான். இந்த காலத்து புள்ளீங்களுக்கு மருவாதையும் கெடையாது, பளசோட அருமையும் தெரியாது. எல்லாம் பட்டாதான் தெரியும்.
ஆனா, அந்த லாஸ்ட்டு ஃபைட்டு செம செம செம! இன்னா ஆக்ரோசமா
இருந்துச்சி தெரியுமா? எல்லாம் முடிஞ்சப்போ ரோஸு, ‘இன்னிக்குதான் நீ நெசமா கெலிச்சுக்கினே’ன்னு
சொல்றதும், மாரியம்மா ‘எதுக்கு பரம்பரை, பெருமைன்னு அடிச்சுகிறீங்க! வெளையாட்டுதானே
இது?ன்னு சொல்றதும், சும்மா குவார்ட்டரு அட்ச்ச மாதிரி ஜிவ்வுன்னு ஏறிச்சுப்பா!
கரீட்டுதான். வெளையாட்டுக்கு நடுவுலே எதுக்கு பால்டிக்ஸு?
காங்கிரஸ்காரன் வர்றான். தீம்கா வர்றான். அதீம்கா வர்றான். அல்லாரும் கபிலன் மாதிரி
அப்பாவி ஜனத்தைப் போட்டு வாங்கறாங்க. அத்த அலேக்கா சொல்லிக்கினே பாரு, அங்கதான் நீ
நிக்கிறே!
கொஞ்சம் படத்தை இளுத்துப் புடிச்சிருந்தீன்னா சூப்பரா இருந்திருக்கும்.
ஆனா நடிச்ச எல்லாரும் சும்மா வெளுத்து வாங்கிட்டாங்க. ஃபைட்டு எல்லாம் சூப்பரு. அந்தகாலத்து
மணிக்கூண்டு, குடிசைங்கோ, பெல்பாட்டம் சராய், ஸ்டெப்பு கட்டிங்கு, இப்டி எல்லாம் ரொம்ப
கண்ணு குத்திப் பாம்பு கணக்கா செஞ்சிருக்கறது நல்லா இருந்துச்சு. ஏன்? அந்த சல்பேட்டா
காய்ச்சுற தொட்டி, அந்த செவுப்பு தண்ணி… சூப்பருப்பா! யாரு கண்ணு ஆர்ட்டு?
ஆக மொத்தம், காலா, கபாலின்னு போயி என் தலீவன் ரஜினிக்குப்
படம் எடுத்ததுக்கு அப்பாலே இப்போ நெஜம் ஜனத்தைப் பத்திப் படம் திரும்பவும் எட்த்துக்கிறே!
அதுக்கு ஒரு சல்யூட்டு கண்ணு!
படம் நீலம் எல்லாம் இல்லே! பச்சைதான்!
நல்லா இரு!
இப்படிக்கு
ராயபுரம் ஏகாம்பரம்.
பி.கு. நடுவுலே இட்லர் ஆட்சின்னு பசுபதி சொல்லுவாரே, அது
யாரு? இந்திரா காந்தியா, மோடியா? மோடின்னு கண்டி சொல்லிடாதே! அப்பொறம் வடசென்னை நாடுன்னு
தனியா கேட்க ஆரம்பிச்சிடுவாங்க! 😊
Comments
Post a Comment