அன்புள்ள தலைவன் ரஜினிக்கு
பேட்ட ஏகாம்பரம் எளுதிக்கறது.
தீபாவளிக்கு அண்ணாத்தே வருதுன்னு ஒரே அல்லோலகல்லோலம் – அட
நம்ம சன் டிவியிலேதாம்ப்பா! வெளியிலே தான் ஒரே கொரோனா படுத்துதே! என்னா கேட்டே? தடுப்பூசியா?
போட்டுக்கினேன் தலைவா! கோவாசீனாவா எதுவோ? ரெண்டு தபா போட்டுகினேன். நம்ம கோபாலுதான்,
‘டேய் ஏகாம்பரம்! உனுக்கு லிவரு அப்பீட்டு ஆயிடுச்சு! கொரோனா வந்துச்சுன்னா அம்பேல்’னு
பயமுறுத்தினான். ஒரே பேஜாரு, இந்த மாஸ்க்கு போடுறதுதான். ஆனாலும் நான் போட்டுக்கினு
போயிடறது கண்ணு! எனுக்கு ஏதாவது ஆயிடுச்சுன்னா அப்பாலே தனத்தோட நெலமை? அதுதொட்டு கவனமா
இருக்குறேன்.
வளக்கம் போல இன்னிக்கு காலீலே எண்ணை தேச்சு குளிச்சுட்டு
ஆல்பர்ட்டாண்ட ஜகா வுட்டேன். என்னா கேட்டே? கூட யாரா? வேற யாரு, நம்ம தனமும் கோபாலும்தான்.
சேகரு வேலைக்கு போறாம்பா. கம்பூட்டர் கம்பேனிலே வேலை. புள்ள ராப்பகலா வேலை செய்யுது.
இன்னாடான்னு கேட்டா ஏதோ மலைப்பாம்புன்னுறான்; நம்ம புல்லட்டு ஜாவான்னுறான்; எதைக் கேட்டாலும்
பக்கு பக்குன்னுறான். நான் கூட இன்னாடா இது சேகரு, ஏதோ கெட்ட வார்த்தை மாதிரி கீதேன்னு
கேட்டேன். அவன் சிரிச்சிக்கினே, ’நைனா, கம்பூட்டரு தப்பாச்சுன்னா பக்குன்னு சொல்லுவோம்.
பக்குன்னா பூச்சி!’ன்னான். நானும் சிரிச்சுக்கினே ‘பூச்சின்னா அந்துருண்டை போடுங்கடா’ன்னு
சொன்னேன். பின்னே, சும்மாவா! நானும் ரொம்ப இண்டெலிஜெண்ட்லிதானே!
அண்ணாத்தே படம் கொஞ்சம் போல பரவாயில்லே கண்ணு! உனுக்காக உக்காந்துக்கினேன்.
அந்த சிவா பையன் அசித்து குமாரை வெச்சு நெறைய படம் வெச்சு
செஞ்சிட்டு இப்போ உன் பக்கம் வந்துக்கினான்.
வழக்கம் போல நம்ம பாலு உனுக்காக பாட்டு பாடும் போது கண்ணுலே
தண்ணி வந்துடுச்சிப்பா! என்னா கொரலு!
அதுக்கப்புறம் ஒரே அழுவாச்சி கண்ணு! உனுக்கு உன் தங்கச்சின்னா
அவ்வளவு இஷ்டமா கண்ணு? வெங்காயம் நறுக்கி கண்ணுலே தண்ணி வந்திடும்னு சொன்னாலே வரப்
போவற மாப்பிள்ளையை நொறுக்குறியே அங்கதான் நிக்குறே நீய்யு!
ஆமா, நடுவுலே நம்ம கிஸ்பூவும் மீனாவும் எதுக்கு வந்தாங்க?
அவங்க வூட்டுக்காரங்களை போட்டுத் தள்ளிட்டு உன்னைய திரும்பவும் கட்டுறோம்னு சொன்னதும்,
தனத்துக்கு ஒரே கோவம்! ‘அடி செருப்பாலே! இன்னா நெனச்சுக்கினாங்க இவளுங்க! இத்தையும்
கேட்டுக்கினு உன் தலைவன் சிரிச்சிக்கினு இருக்கானே? தூ!’ன்னவும் எனுக்கே ஒரு மாதிரி
ஆயிடுச்சுப்பா? இன்னாச்சு கண்ணு? நீ இந்த மாதிரி சீன் எல்லாம் செய்யவே மாட்டியே?
பிரகாசு ராசு உன் கூட ராசி ஆகி, அவன் காலிலே விழவும்
எனக்கு பகீல்னு ஆயிடுச்சு. இன்னாடாது இருந்த ஒரு வில்லனையும் தலைவன் பேசியே கரீக்டு
செஞ்சிட்டாரேன்னு!
உன் படத்துலே எப்பவுமே காமெடி நல்லா இருக்கும். இதுலே சுத்தம்!
தேட்டருலேயே ஒரே ஒரு இடத்துலேதான் அல்லாரும் சிரிச்சோம்! உன் தங்கச்சி கடோசிலே அடி
வாங்கினவன் கிட்டே போயி, ‘உன்னை யாரு அடிச்சாங்க, சொல்லுங்க பிளீஸ்’னு கெஞ்சிச்சா,
ஒரே டமாஸு!!
அந்த வில்லனுங்க ரெண்டு பேரும், பேரு இன்னா, பர்கரா – சும்மா
சவுண்டுதாம்பா! உனுக்கு அந்த பயலுங்க எல்லாம் ஈக்குவலே இல்லப்பா! அதுனால நமக்கு நெறையவே
போர் அடிச்சுச்சுப்பா!
உனக்கும் பஞ்ச் டயலாக்கு கிடையாது. எக்கச்சக்கமா மெகா சீரியல்
கணக்கா அளுவறே! எதுக்கெடுத்தாலும் தங்கச்சி தங்கச்சின்னு உருகறே! நானும் எத்தனை நேரம்தான்
முட்டு கொடுக்குறது? ஏதோ தனத்துக்கு கொஞ்சம் புடிச்சிருந்துச்சோ பரவாயில்லே! நானும்
கோபாலும் அப்படியே நீ எப்போ ஃபைட்டு போடுவேன்னு வாயைப் பொளந்துக்கினு இருந்தோம். அவ்வளவுதான்!
பாட்டுலே ‘தங்கம், தங்கம்’ நல்லா இருந்துச்சுப்பா. படம் முடிஞ்சவுடனே
அதையே முணுமுணுத்துக்கினே வந்தோம்.
படம் முடிஞ்சதுக்கு அப்புறம் தனம் அவ அண்ணன்கிட்டே போன் போட்டு
பேசுச்சு. ஒரே பாசமலர்தான்னு வெச்சிக்கயேன். உன்னை ஒரேயடியா தலைலே வெச்சுக்கினு ஆடுச்சி.
நானும் கோபாலும் பேசாம மோட்டுவாயை பார்த்துக்கினு இருந்தோம். அப்படியே அண்ணாத்தேலே
எல்லாரும் பக்கம் பக்கமா பேசுற மாதிரியே, இதோ, இன்னும் பேசிக்கினே இருக்காங்க!
ஒரே பசி கண்ணு! நான் இப்பவே முடிச்சுக்கிறேன். போய் ஜொமாட்டொவுலே பிரியாணி சொல்லணும். தமிழ் பேசுற ஆளா, நம்ம சாப்பாட்டை ஆட்டையப் போடாத ஆளா கிடைக்கணும். சூரக்கோட்டை மதுர வீரனை வேண்டிக்கிறேன் கண்ணு!
திரும்பவும் சொல்றேன் தலைவா! உன்னோட ரசிகருங்க அல்லாருக்கும்
நாப்பது அம்பது வயசாயிடுச்சு. இளவட்டம் எல்லாரும் உன்னைய வயசாளியாத்தான் பாக்குது!
அதுனாலே உன் வயசுக்குத் தோதா நல்ல ரோல் பண்ணு. இனிமே துட்டு பண்ணி இன்னா செய்யப்போறே?
போதும் தலைவா! உடனடுத்த ஸ்டாலினைப் பாரு தலைவா! ஒரேயடியா சிக்ஸர் அடிக்குதாம். நீ மட்டும்
டக்கவுட்டு ஆயிடாதே கண்ணு!
எங்களைப் பத்திக் கவலைப்படாதே! பழைய படத்தை ஓட்டி ஓட்டி பார்த்துக்கிறோம்.
அதுக்குதான் எத்தினி சேனல் இருக்குது, அது போதும்!
உனக்கு புத்தி வரணும்னும் மதுர வீரனை வேண்டிக்கிறேன்.
மாஸ்க்கு போட்டுக்கோ. வெளியே போவாதே. வூட்டோடயே இரு.
இப்படிக்கு,
உன் நலம்விரும்பி
ஆர் கே நகர் ஏகாம்பரம்.
#sriGINthoughts #reviews #tamilmovies
Comments
Post a Comment