தமிழ்க் காந்த வாழ்த்து!

கடந்த வாரம் இரண்டு மூன்று தமிழ் தொடர்பான நிகழ்வுகளைச் செய்திகளில் காண முடிந்தது. அவற்றைப் பற்றி அவதானிக்கையில், சில விடயங்கள் புலப்பட்டன. (எப்புடி, நாங்களும் எலக்கிய வார்த்தை எல்லாம் போட்டு எளுதுவோமில்லே!?) 😊

அந்த அவதானிப்புகள் பற்றிப் பேசுமுன் அவை எவை என்று பார்ப்போம்.

 காசியில் மோடி


மோடி யோகி. யோகிதான் அடுத்த மோடி. மோடி கேடி. மோடி போல வருமா? இப்படி எல்லாம் மக்கள் பட்டி தொட்டி எல்லாம் பட்டிமன்றம் நடத்தினாலும், அந்த மனிதர் நன்றாகச் சந்தனம் பூசிக் கொண்டு எல்லாருக்கும் விபூதி பூசி (ஊதி?) நாட்டை ஆண்டு கொண்டிருக்கிறார்.

கடந்த வாரம் காசியில் சில நூறு கோடிகளைக் கொண்டு விசுவநாதர் கோவிலைப் புதுப்பிக்க ஏது செய்த போது பேசுகையில் இரண்டு சமாச்சாரம் நன்றாக இருந்தது.

வள்ளலார் ‘தனித்திரு, பசித்திரு, விழித்திரு’ என்று கூறியதைப் போல, மோடியும் ஒரு மும்மந்திரத்தை மக்கள் முன் வைத்தார்: தூய்மையாயிரு, படைத்திரு, புதுமையாயிரு [Cleanliness, Creation & Innovation].

அது ஒரு புறமிருக்க, காசியைப் பற்றி அவர் மக்களுக்கு (கொஞ்சம் சந்தேகாஸ்பதமான 😃) வரலாற்றுப் பாடங்கள் எடுக்கையில் (ஓளரங்கசீப் வந்தாஹ; சலார் மஸூத் வந்தாஹ; வாரன் ஹேஸ்டிங்ஸ் வந்தாஹ; ஆனா காசியை ஒண்ணியும் அசைச்சுக்க மிடிலே!), ஒரு நல்ல பாடமும் எடுத்தார்.

மஹாகவி சுப்பிரமணிய பாரதியார்

‘காசி நகர் புலவர் பேசும் உரைதான் காஞ்சியில் கேட்பதற்கோர் கருவி செய்வோம்!’

என்று தொலைத்தொடர்புத் தொழில்நுட்பம் பற்றிப் பாடியதை நினைவுகூர்ந்தார்.

கை கொடுத்த தெய்வம் படத்தில், சிவாஜி பாரதியார் வேடமிட்டு, செம கிராஃபிக்ஸோடு மலையாளப் பெண்கள் தோணியில் ஆட, ராகவலு ‘வலபுல உல்லாசம்’ என்று பாடியதை மட்டும் கண்டு களித்து இன்றும் முணுமுணுத்து வரும் மக்களுக்கு, மோடி கூறிய இவ்வரிகள் அந்தக் கவிதையிலேயே வரும் என்பது அவ்வளவாகத் தெரிய… வாய்ப்பேயில்லை, ராஜா!




யார் யாருக்கோ தமிழில் அலட்டக் கை கொடுத்த/கொடுக்கும்/கொடுக்கப் போகும் தெய்வமான பாரதி இந்த சமயத்தில் மோடிக்கும்… ஹி, ஹி!

இதன் மூலம் மோடி ஒரே கல்லிலே இரண்டு மாங்காய் அடித்தார் என்பது திண்ணம்.

ஒன்று, தமிழ்கூறும் நல்லுலகம் அவரைப் போற்றும் – ’ஒரு இந்திக்காரன் என்னமா தமிழ்ப் பாட்டு படிக்கிறான்! நம்ம ஊர்லேயும்தான் இருக்குதே, துண்டு சீட்டு!’ இரண்டு, ‘காசியைப் பார்த்தாயா? எவ்வளவு பேர் போன இடம்? நாளைக்கு இதுதான் சூப்பர் ஊராகப் போகுது!’ என்ற கெத்து!


இருப்பினும், எனக்குத் தெரிந்து இதுவரை இருந்த பாரதப் பிரதமர்கள் ‘வணுக்கம், நெல்லா இர்க்கீங்கலா? எங்கல்க்கு வோட்டு போடுங்கோ’ என்பது தவிரப் பேசியதில்லை. ஆனால், இந்த விஷயத்தில் இவர் கொஞ்சம் எக்ஸ்ட்ராவாகவே இருக்கிறார். நல்லதுதான். குறைந்த பட்சம் வட இந்தியப் பத்திரிக்கையாளர்கள், ‘யே பார்த்தி கோன் ஹை? உஸ்கே பாரே மே தோடா ஜான்காரி கர்லே!’ என்று பாரதியைப் பற்றித் தேட வைத்தமைக்கு நன்றி.

தமிழ்த்தாய் வாழ்த்து

சிறு வயதில் வேலூரில் ந. கிருட்டிணசாமி உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் போது தினமும் நடக்கும் பிரார்த்தனைக் கூட்டத்தில் மூன்று/நான்கு பத்தாம் வகுப்பு மாணவிகள், கொஞ்சம் போலப் பிசிறு தட்டினாலும், கேட்பதற்கு நன்றாக இருக்கும் இரண்டு பாடல்களைப் பாடுவர்.

ஒன்று சுத்தானந்த பாரதி எழுதிய மதசார்பற்ற ‘அருள் புரிவாய் கருணைக்கடலே!’, மற்றொன்று, மனோன்மணீயம் பெ சுந்தரனார் எழுதிய (மீண்டும் மதசார்பற்ற) ‘நீராரும் கடலுடுத்த’ என்ற தமிழ்த்தாய் வாழ்த்து.

ரொம்ப நாள் கழித்துத்தான் சுந்தரனார் எழுதியதைக் கொஞ்சம் வெட்டி வெறுமனே தேவையானதை மட்டும் கலைஞர் வைத்துவிட்டார் என்பது தெரிந்தது.

You see… முதல் பத்தி, தமிழ்த்தாயை வருணித்து – ‘நீதான் பரதக் கண்டத்துக்கே முகம். உன் நெற்றி சந்திரன் மாதிரி. உன் திலகத்தோட வாசனை ஊரையே கூட்டும். நீ ரொம்ப யூத்து!’ இப்படி எல்லாம் சொல்லி, ‘நீ நல்லா இரு! எங்களையும் நல்லா இருக்க வாழ்த்து!’ என்று பாடினார். அதில் பிரச்சினையே இல்லை.

ஆனால், அடுத்த பத்திதான் எல்லோருக்கும் கொஞ்சம் பீதியைக் கிளப்பிவிட்டது என்று நினைக்கிறேன்.




அப்படி என்ன சொல்லியிருக்கிறார் இரண்டாம் பத்தியில் அவர்?

நீ எல்லாம்வல்ல கடவுள் மாதிரி. (கழகங்களுக்குக் கடுக்காய்!)

நீதான் மலையாளம், தெலுங்கு, கன்னடம், துளு போன்ற மொழிகளுக்குத் தாய்! (ஒரே அடியில் மொத்த ஸ்டேட்டும் சண்டைக்கு வந்துவிடும்! ஏற்கனவே அவிய்ங்களுக்கும் நமக்கும் வாய்க்கால் பிரச்சினை!)

நீ அந்த சமஸ்கிருதம் போல ஒண்ணுமில்லாமல் போகாமல் இன்னிக்கும் கலக்குகிறாய்! (போச்சு!  ஆரியர்கள் சண்டைக்கு வருவாங்களே!)

நடுவில் சில பேர் தமிழ்த்தாய் வாழ்த்து பாடும் போது எழுந்து நிற்கவில்லை என்ற சிலபல சச்சரவுகள் வேறு!

ஆகையால் திரு ஸ்டாலின் இரண்டு நாட்களுக்கு முன், ’இனிமேல் தமிழ்த்தாய் வாழ்த்துதான் தமிழ்நாட்டின் மாநில கீதம்; இதுதான் ராகம் (முல்லைப் பண்/மோகனம்); இதுதான் தாளம் (மூன்றன் நடை; திஸ்ரம்); பாடும் போது எல்லோரும் எழுந்து நிற்க வேண்டும்’ என்று அரசாணை பிறப்பித்தவுடன் வழமை போல இரண்டாம் பத்தியைப் பற்றி மறந்த (என்னையும் சேர்த்து) பலர் விழித்துக் கொள்ள… அரசியலிலே இதெல்லாம் சாதாரணமப்பா!

ந.கு. (நடுக்குறிப்புங்க!): 

ஐயா முனைவர் ரமணி நாயுடு இது பற்றி எழுதிய கருத்து... மற்றும் தொல்காப்பியத் தமிழில் அவர் குரலில் தமிழ்த்தாய் வாழ்த்தும்...

வியாபார காந்தம்

அன்பே சிவம் படத்தில் ஒரு தெருநாடகப் பாடல்! 

‘இய்யாங், இய்யாங்!’ என்று நல்ல ஒரு பறைக்கொட்டுடன் நாட்டுக்கொரு நற்செய்தி சொல்ல விழையும் அந்தப் பாடலில், ஒரு கோரஸ் வரும்.



‘வெள்ளுடை வேந்தே வாழ்க!

வியாபார காந்தமே வாழ்க!’

வெள்ளுடை வேந்தே?

ஓ! வெள்ளை உடை போட்ட ராஜாவே! ஓகே!

அது என்னடா வியாபார காந்தம்?

பாட்டிலேயே கமலும் கேட்பார்.

அதற்கு அவருடன் இருந்த ஒரு கருப்புச்சட்டை சகா, ‘Business Magnetன்னான்!’ என்பார். அதற்குக் கமல் Magnateஐ Magnet என்று புரிந்து கொண்ட அரைகுறையைப் பார்த்துத் ‘தூ!’ என்று துப்பிவிட்டு மேலே கம்யூனிச சுவிசேஷம் பரப்பச் செல்வார்.

நகைச்சுவைக்காக வைக்கப்பட்ட அந்த ஒரு சொற்றொடர், கடந்த 18 ஆண்டுகளாக தமிழ் பேசும் நல்லவர்கள் மத்தியில் ‘Business Magnet’ ஆகவே உருவெடுத்து, இப்போது நாடி, நரம்பு, மொழிபெயர்ப்பு இப்படி எல்லா இடத்திலும் ‘Magnate’, ‘Magnet’ ஆக மருவித் தழைத்துக் கொண்டிருக்கிறது. யாரோ சொன்னது போல, ‘இங்கிலீஷ்தான் ததிங்கிணதோம் என்றால் தமிழும் தளாங்கு ததிங்கிணதோம்!’ ஆக இருக்கிறது!

ஆக மொத்தம், தமிழை தமிழனுக்குச் சரியாக நினைவுறுத்த மொதல்லே சொன்னோமே, அந்த ஒரு இந்திக்காரன்தான் வரணும் போல இருக்கு!

#sriGINthoughts

Comments

Post a Comment