96 படத்தின் இயக்குனர் - பிரேம்குமார் (இவருக்கு ஆன விபத்தை வைத்துத்தான் நடுவுல கொஞ்சம் பக்கத்துலே காணோம் படமே எடுத்தாங்க!), மெய்யழகன் படத்தையும் சுட்டு இருக்காரு. கதாநாயகன் (கார்த்தி அல்ல, அர்விந்த் சாமி), தஞ்சையை விட்டு வெளிச் செல்லக் காரணமாயிருந்த அந்த வீடும் அதன் சார்ந்த உறவும் அவரை மீளாச் சோகத்தில் ஆற்றிவிட, அதைத் துணைக் கதாநாயகன் (இப்போ கார்த்திதான்!), எப்படி மறக்கச் செய்கிறார் என்பது கதையின் knot.
'ஆட்டோகிராஃப்' மாதிரி படங்களுக்கு இந்த வயசாளிகளுக்கு இடையே நல்ல வரவேற்பு இருக்கும். கடந்த காலம் எப்போது செழிப்பானதாகவும், சிறப்பானதாகவும், செபியா (sepia) வண்ணத்தில் நினைவுக்களஞ்சியமாக இருப்பது நிஜம்.
அப்போது பட்ட கஷ்டங்கள் காலம் மாற மாற மறந்துவிட, கிழிந்த டவுசர் அளித்த அவமானங்களும், அப்பாவின் அடிகள் அளித்த வலிகளும், நண்பர்கள் உடைத்த பற்களும், 20 வருடங்களுக்குப் பிறகு சரக்கு அடிக்கும் போதோ, ஏதோ ஒரு ஏசி ஓட்டலில் உட்கார்ந்து பன்னீர் பட்டர் மசாலாவைக் கழிக்கும் போதோ, சிரிப்புடனும் கும்மாளத்துடனும் ஏக்கத்துடனும் நினைவு கொள்ளப்படும்.
காலம் சோகத்தை மறக்கடித்துவிடும் என்பது பொய். நம்மைச் சுற்றி இருக்கும் மக்களும், அவர்தம் அன்புமே சோகத்தை மறக்கடிக்கச் செய்வர்/செய்யும். அதுவே மெய்.
22 வருடமானாலும் தான் துரத்தப்பட்ட ஊருக்குப் மீண்டும் போக அருள்மொழி விரும்பாத காரணம், அவனைச் சுற்றி இருந்த அனைவரும் அந்தச் சோகத்திலேயே இறுகி, மூழ்கி, மூச்சுத் திணறி இருந்ததே. அதே அருள்மொழி அதே ஊருக்கு ஒரே வாரத்தில் மீண்டும் சென்றதற்குக் காரணம், மெய்யழகனின் நிபந்தனையற்ற அன்பும் அரவணைப்பும்தான்.
அமரன் படம் காதல்னு சொன்னே! சரி, ஏதோ புதுசா சொல்றேன்னு ஒத்துக்கிட்டோம். இப்போ இந்தப் படத்தையும் அன்பு, கம்புன்னு ஏதோ சொல்றியேன்னு கேட்டா, அதுக்கு பதில்:
அன்பு இறை
அன்பு நிறை
அன்பு மறை
சரியா?
எனக்கு பிடிச்சது:
- அந்த முகம் தெரியாத கனகராசு ('பக்கத்துலயே போலீஸ் ஸ்டேஷன் இருக்கு. பத்திரமா இருக்கும். அங்க சார்ஜு போடவா?' 'அடுத்த ஃபோன் வாங்கற வரைக்கும் சார்ஜு போட்டாச்சு!'),
- ஊரைவிட்டு சென்னையில் வாய்க்கப்பட முடியாத லதாவின் ஏக்கம் ('இங்கேயேதான் நான் இருக்கேன்! ஆனா யார் கண்ணுக்கும் தெரியறதில்லை!'),
- ஊர்விட்டுச் சென்ற வெறுப்பை இன்னும் மறக்காதவரைக் கண்டு கோபம் கொள்ளும் ஜக்கு கண்டக்டர் ('உங்களுக்கு எல்லாம் என் சீட்டைக் கொடுத்தேன் பாருங்க!'),
- கடவுளை உருவாக்கியது நாம் என்பதைப் பூடகமாகச் சொல்லும் அந்தப் பூக்காரியின் மனமுதிர்ச்சி ('குளிக்கலேன்னா என்ன? நம்ம சாமிதான், தைரியமாப் போங்க!')
- 25 வருடங்களுக்கு முன் ஒரே ஒரு மாதம், கூட இருந்த அந்த நினைவுகளுக்காகவே ஒருவரை மனதில் கோவில் கட்டி வைத்திருக்கும் அந்த மெய்யான வெள்ளந்தித்தனம் ('உங்க பேரைத்தான் என் குழந்தைக்கு வைக்கப் போறோம்!'),
- ஊரில் நடக்கும் அனைத்து நிகழ்வுகளும் அனைவருக்கும் தெரியும் அந்த ஆகாசவாணி கிராமத்து வாழ்க்கை ('சொக்கு பெரியப்பாதான் சொன்னாரு, உங்களுக்குப் பணம் வேணும்னு! என் கிட்டே வாங்க மாட்டீங்களா?')
- நகர வாழ்க்கை நமக்குத் தரும் போலி கெளரவம், அலட்டல் ('அவன் யாருன்னு எனக்குத் தெரியாது. அவன் கிட்டே போய் கேட்க எனக்குத் தயக்கமா இருக்கு!')
நெட்ஃப்ளிக்ஸில் கொஞ்சம் போல எமோஷன் படம் பார்க்கணும்னு தோணிச்சுன்னா பாருங்க.
கார்த்தி நடிப்பு சூப்பர் அப்படி இப்படின்னு சொல்லுவாங்க. (முதல் காட்சியிலேயே கண்ணை மூடும் போது, அரிக்கும் விரலைச் சொரியும் அந்த விதரணை... ஆனா ஒரே toneல பேசி மனுசன் கொன்னுட்டாரு! )
அர்விந்த் சாமி அப்படியே அருள்மொழியாவே வாழ்ந்துட்டாருன்னும் சொல்லுவாங்க (ஒரு anti-social போல மனிதர்களிடம் சற்றுத் தள்ளியே இருந்து கொண்டு, நாய், பூனை, கிளி இவற்றுடன் பேசும் அளவுக்கு நெருக்கமாகவும், பேசும் போது உணர்வுகளற்று சீராகப் பேசுவதும்...nubbad!)
தஞ்சை மண்ணோட மணத்தைக் கொண்டு வந்துட்டாங்கன்னு சொல்லுவாங்க.
பெரியாரையும் முருகனையும் பக்கத்து பக்கத்துலே படமா தொங்க வெச்சுட்டு, காளை மாட்டுக்கு தோணின்னு பேரு வெச்சுட்டு வந்தாரை வாழவைக்கும் சமத்துவத் தமிழினம்னு ஒரே கல்லுலே மூணு மாங்கா அடிச்சிட்டதா சொல்லுவாங்க! (ஆனா அந்த மண் சொம்பு, மண் பாட்டிலிலே பீர் ஊற்றிக் குடிக்கற புது டெக்னிக்... எப்புடி சார்!? அதுவும் தமிழ்க் கலாச்சாரம்தானோ?)
ஆக...
தியேட்டரில் பார்த்து காரித் துப்பிய அளவுக்கும் இல்லை.
ஓடிடியில் பார்த்து ஓகோ என்று புகழும் அளவுக்கும் இல்லை.
ஏதோ நடுவாந்தரமாக, என் அம்மா கூறுவது போல, காமாசோமாவென்று ஒரு படம்.
ஆங்கிலத்தில் Curate's Egg என்பார்களே - கொஞ்சம் வெந்து, கொஞ்சம் வேகாமல்...
எதையும் நம்பிடாம 2 மணி நேரம் பாருங்க. சில பல இடங்கள் பிடிக்கும்.
பி. கு. மலையாளத்தில் இப்படி வந்திருந்தா புகழ்ந்து இருப்பியேன்னு கேட்டா இதேதான் சொல்லியிருப்பேன் ;-)
And don't even compare this with Anbe Sivam. Plisssss...
#sriGINthoughts #reviews #TamilMovies #மெய்யழகன் #Netflix
Anbesivam review kedaikuma?
ReplyDelete