Saturday, February 2, 2013

விஸ்வரூபம் - போய் பாருங்கப்பா!

If you want in English...

பல நாட்களாக கண்ணாமூச்சி ஆடிக்கொண்டிருந்த விஸ்வரூபத்தை நேற்று தரிசனம் செய்ய முடிந்தது.

பாகவதத்தின்படி, பகவான் விஷ்ணு மூன்று முறை விஸ்வரூப தரிசனம் அளித்ததாகப் படித்த ஞாபகம்.

  1. வாமன அவதாரத்தின் போது மகாபலிக்கு செய்த 'உஷார் பத்தினி ரைட்'
  2. 'ஊசி முனை நிலமும் கிடையாது' என்று அழிச்சாட்டியம் செய்த துரியோதனாதியரை பயமுறுத்த செய்த 'கமாய் பத்தினி கை', 
  3. மற்றும் கீதோபதேசத்தின்போது அர்ஜுனனுக்குத் தான் எவ்வளவு பெரிய அப்பா டக்கர் என்று உணரவைத்தது


இதைத்தான் கமல்ஹாசனும் தன் லேட்டஸ்ட் நூறு கோடி படத்தில் சற்று டாபிக்கலாகக் காட்டியிருக்கிறார் என்று தோன்றுகிறது.
(போச்சுடா! இந்து முன்னணி அடுத்த பிளைட் பிடிச்சு சிங்கப்பூர் வந்து நம்மள தாக்கப் போறாங்க!)

கதைதான் முன்னாடியே சொல்லிட்டோமே? தவிர, படத்தின் மொத்த bound script இப்போது அண்ணா நூலகத்தில் வாடகைக்கு கிடைப்பதாகக் கேள்வி (ஏம்ப்பா? அது இன்னும் நூலகம்தானே? இல்ல, எதாவது கீழ்ப்பாக்கம் ஆஸ்பத்திரியா ஆக்கிட்டாங்களா?). அதனாலே, கதைக்கு மெனக்கெட வேண்டாம்.

தொழில் நுட்பம்: திரும்பத் திரும்ப, ஒளி/ஒலிப்பதிவு சூப்பர், எடிட்டிங் சுமார், ஹாலிவுட் தரம் என்று சொல்லி சொல்லிப் புளித்துவிட்டது. இந்தியத் திரையுலகில் இப்போது (எப்போதும்) நிறைய திறமைசாலிகள் இருக்கிறார்கள். பணம் ஒரு பற்றாக்குறையாக இருந்தது. அதுவும் இப்போது கொஞ்சம் கொஞ்சமாகக் மாறுகிறது. சன்டிவி, விஜய்டிவி என்று தமிழாக்கம் செய்யப்பட்ட பலப்பல ஹாலிவுட் படங்களை மக்கள் பார்ப்பதால், தத்ரூபத்தை எதிர்பார்க்கிறார்கள். அதனால், கண்ணி வெடி, பட்டாசு போல வெடித்தால் உடனே, 'என்னாபா டுபாக்கூர் வுடறான்?' என்று நம்ம ஏகாம்பரமே அங்கலாய்க்கிறான். விளைவு: பஸ் விபத்துக்கள் நடந்தால் நாமே அங்கு இருப்பது போல இருக்கிறது!

ஆதலினால், கமலிடம் எதை எதிர்பார்த்தோமோ அது இந்த டிபார்ட்மென்ட்டில் கிடைத்துவிட்டது. Fully meeting expectations. இருந்தாலும், கடைசிக்காட்சியில் vibrate ஆகும் தொலைபேசியின் அதிர்வுக்கு ஏற்ப சலனிக்கும் ரத்தம் - ரொம்ப டூ மச்!!!

1. வாமன அவதார விஸ்வரூபம்:

கதக் நடன ஆசிரியராக இருந்து (பிறவிக் கலைஞன்யா அவன்!) பின்னர் அந்த கிடங்கில் (அதாங்க, warehouse!), அடிவாங்கி, புகைப்படம் எடுக்க முடியாமல் தவிக்கவிட்டு, ஒவ்வொரு அடிக்கும் Tawfeeq, Nazar என்று தன்னுள் இருக்கும் இருள் சமாச்சாரங்களை கொஞ்சூண்டு காட்டி, கட்டு அவிழ்ந்தபின் 12 செகண்டில் 12 பேரை அடித்து, வெட்டி, கொட்டி, சாத்தும் ரூபம்  அபூர்வம்.இன்றும் ரஜினி ரசிகர்கள் (நான் உள்பட) பாட்ஷா படத்தில் வரும் இதேபோன்ற காட்சியை கண்ணில் ஆனந்த பாஷ்பம் வடிய விவரிப்பார்கள். கமலின் இந்தக் காட்சியும் அது போல வரும் என்பது திண்ணம்.

By the way, படத்தில் இந்த ஒரு காட்சி மட்டும்தான் உண்மையான டிஷூம் டிஷூம் காட்சி. So...

2. அழிச்சாட்டிய விஸ்வரூபம்:

இந்த ரூபத்தைப் பாதிதான் தரிசனம் செய்ய முடிந்தது என்று நினைக்கிறேன். மீதியை V2வில் பார்க்கலாம் என்றே தோன்றுகிறது.

ஆப்கானிஸ்தானில் அல் கொய்தாவிடம் சேர்ந்து, அவர்களிடையே ஒற்று வேலை செய்து, சில பல பேர்களின் கொலைகளைப் பார்த்து, அதற்குக் காரணமாகவும் இருந்து, மனப்பாரங்களை (emotional baggage பாருங்க!) ஏற்றிக் கொண்டு, மீசையில்லாமல் தாடி வைத்துக் கொண்டு, முகமும் மனமும் கருமையாகி, தீவிரவாதத்தின் மூலகாரணத்தின் விளிம்பை மட்டும் தொட்டு வரும் பாதி விஸ்வரூபம் இது.

இந்தப் பகுதியில், ஒரு இயக்குனராகக், எழுத்தாளராக கமலுக்கு நிறைய full tossகள் கிடைத்துள்ளன. இருப்பினும், எல்லாவற்றுக்கும் மைதானத்துக்கு வெளியே அடிக்க ஆசைப்படாமல், நிறைய இடங்களில் நயத்துடன் கையாண்டிருப்பதற்கு ஒரு ஷொட்டு.


  • ஊஞ்சலில் ஏற மறுக்கும் எட்டு வயது சிறுவன் (அவன் இன்னும் சாகலே - V2வில் வருவான் என்பது நம்ம வீட்டு ஹேஷ்யம்!) - அதே சமயத்தில் ஊஞ்சலில் தள்ளிவிடு என்று கேட்கும்  தற்கொலை இளைஞன்
  • 'ஏன் இத்தனை ரத்தம் சிந்த வேண்டும்?' என்று உமர் கேட்கும் போது, 'உன் கேள்வியிலேயே பதில் இருக்கிறது; போர் என்றால் ரத்தம் இருக்கும்.' என்று பலபொருள் பதிந்து கொடுக்கும் இடம்.
  • AK47 குழல் முனையில் அமர்ந்திருக்கும் அந்தத் தேனி/குளவி (பூக்கள் இல்லாத இடத்தில், ரத்தம் கொட்டும் இடத்தில் தேனுக்கு எங்கே போவது? ருசியை மாற்றிக் கொள்ள வேண்டியதுதான்!)


Delicious.

3. அப்பா டக்கர் விஸ்வரூபம்:

சாதாரணமாகவே கீதோபதேசம் கொஞ்சம் bore அடிக்கும் - நல்லது சொல்றாங்க இல்லையா! பொறுமை வேண்டும். பொறுத்தால் பூமி ஆள முடியும். அது போலவே இந்தப் பகுதியை சற்று நிதானத்துடனும், பொறுமையுடனும் பார்க்க வேண்டும்.

மிகவும் கவனமாகத் தீவிரவாதிகளின் நடைமுறைகள், FBIஐ அவர்கள் 'பயன்'படுத்தும் இலைமறை முறை, நிருபாவுக்கும் அந்த போலீஸ் அம்மையாருக்கும் நடக்கும் கடவுள் டயலாக்குகள், ஜிஹாத் என்றால் டக்கென்று சாவதற்குத் தயாராவது மட்டுமில்லை கொஞ்சம் கொஞ்சமாக புற்றால் சாவதற்குத் தயாராவதும்தான் என்றுணர்த்துவது...list goes on.

இவ்வளவுக்கும் காரணம் மதமாக இருக்க முடியாது. நோய்நாடி அதன் முதல்நாடி என்று வள்ளுவர் சொன்னது தான் நினைவுக்கு வருகிறது. இப்படி நினைக்கவைத்த இந்த ரூபத்திற்கு நன்றி.கீதோபதேச விஸ்வரூபம், கிருஷ்ணன் தன் வேலையை இன்னொருத்தன் வாயிலாக செய்ய வைக்கவே காட்டப்பட்டது. அதுபோலவே நிருபமா என்னும் அர்ஜுனனுக்கு Faraday Shield/Microwave idea வரவைத்து உலகைக் காக்க வைத்ததற்காக இந்த ரூபம் ஓகே ;-)

மற்றபடி:

1. இங்கு படத்துக்கு இடைவேளை விடவில்லை. அதனால் கடைசியில் தியேட்டரில் விளக்கு போட்ட பிறகு, நம் வீட்டில் 'போய் பாப்கார்ன் வாங்கிட்டு வாங்க' என்று கூறியதைக் கவனத்தில் கொண்டால், எல்லோரும் படத்தில் ஐக்கியம் ஆகிவிட்டார்கள் என்றே தோன்றுகிறது. இருப்பினும், இவ்வளவு மெதுவான த்ரில்லரை (?) நான் பார்த்ததில்லை.
2. நிறைய பழைய புதிய நட்சத்திரங்கள் (கமலுக்கு ஜரினா வகாப் பிடிக்கும் போல...ஐந்து நிமிடத்துக்கு அம்மா வந்திருக்கிறார்கள்!)
3. ஆப்கானிஸ்தான் பகுதி முழுதும் ஒரு ஆவணப்படம் (Documentary மச்சான்!) போலவே இருந்தது.
4. கமலுக்கே உரித்தான அழகான மெல்லிய நகைச்சுவை
5. கமல் முதலிலேயே இரண்டு பாகமாகப் பிரித்துவிட்டார் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. அதனால், நிறைய கேள்விகள். பதில் வர அடுத்த வருடம் வரை 'வெயிட்டீஸ்'.
6. 'படத்தில் முத்தம் கிடையாது - கன்னத்தில் கூட ! என்ன கொடுமை சரவணன் சார்!' என்று நாம் பேஜார் ஆகும்போது 'கண்ணா! இரண்டாம் பகுதியில் லட்டு தின்னலாம்!' என்று கொடுக்கப்பட்ட உத்தரவாதம் ;-)
7. ஏங்க, இது தமிழ் படம் தானே! தமிழ், ஆங்கிலம், பஷ்தோ, அரபி, ப்ரெஞ்ச், இந்தி, உருது... கண்டிப்பாக V2வில் இந்திய மொழிகளில் இன்னும் 4/5 வந்துவிடும். அதனால், நெய்க்காரன்பட்டியில் படம் ஓடுவது ரொம்பவே கஷ்டம்தான். (அங்க ஏன்! ராயபுரத்துல ஓடுறதே கஸ்டம்ப்பா! கோச்சடையான கூப்புடு! என்று எட்டாம் நம்பர் கடையில் நம்ம ஏகாம்பரம் அலம்பல் கொடுப்பது கேட்கிறதா?)

மொத்தத்தில் கமலின் திரைப்பட வரலாற்றில் இந்தப்படம் நிச்சயம் ஒரு மைல்கல்தான்.
- சும்மா கிடந்த DTH சங்கை எடுத்து ஊதியது
- அல் கொய்தாவைப் பற்றிய இவ்வளவு விரிவான பதிவினால் பெற்ற எதிர்மறை விளைவு
எல்லாவற்றையும்விட:
- இந்தப் படம் அவருக்கு ஒரு பன்னாட்டு அறிமுகத்தைக் கொடுத்துள்ளது என்பது சரிதான். Osborne மாமா இவரை வைத்துப் படம் எடுப்பதாகப் பேச்சு ஓடிக்கொண்டிருக்கிறது. இதனால், அது நடந்தால், கமல் என்னும் பெரும்வீச்சு கொண்ட அற்புதம் நிஜமாகவே நிகழும்.

அதுவரை... ஏழு கட்டோ, எண்பது கட்டோ - போய் படத்தை தியேட்டரில் பார்த்து நம் திரைப்பட கஜானாவை நிரப்புவீராக!