Tuesday, October 19, 2010

உயிரின் மதிப்பு?

கடந்த சில பல நாட்களாக (வாரங்களாக!) நடந்த உலக நடப்புகளில் உயிரின் மதிப்பை ஒட்டி நடந்த சில நிகழ்வுகள் பற்றிய பார்வை:

முதலில் பாஸிடிவ் செய்தி:


Trapped miner Edison Pena arrives at Copiapo hospital for a full checkup after he was rescued from the San Jose mine October 13, 2010. REUTERS/Mariana Bazo* 33 சிலே சுரங்கத் தொழிலாளிகள் 69 நாட்கள் தரைக்கு அரை கிலோமீட்டருக்குக் கீழ் சிக்கித் தவித்து வெறும் சாக்லேட் பானம் அருந்தி, கொஞ்சூண்டு பிஸ்கெட் சாப்பிட்டு, உடற்பயிற்சி செய்து, ஆஸ்பிரின் சாப்பிட்டு, கடைசியில் ஓக்லீ கூலிங் கிளாஸ் அணிந்து வெளியே வந்த போது, மனித உயிரின் மதிப்பை அறிய முடிந்தது. 

முக்கியமாக நாசா அணியினர் வடிவமைத்து அளித்த அந்த ஸ்பெஷல் வண்டி! சந்திரனுக்கு விட்ட(விடப் போகும்) நூறு ராக்கெட்டுக்குச் சமம்!

(ஆமா! கோல் இண்டியா IPOவுக்கு அப்ளிகேஷன் போட்டாச்சா?)


* ஜப்பானுக்கும் சீனாவுக்கும் இடையே நடைபெற்றுக் கொண்டிருக்கும் மீனவப்பிடி சம்பவத்தைப் பார்த்தால்...

நம் தென்கிழக்குக் கடலோர மாவட்டங்களிலிருந்து சாண் வயிற்றுக்காக கடலில் சென்று மீன் பிடிக்கச் செல்லும் மக்களை, இலங்கை கடற்படை 'டேய், இன்னிக்கு செவ்வாய்க்கிழமை! வா! போய் கொஞ்சம் தமிழ் நாட்டு மீனவர்களைப் பிடித்து வைத்து விளையாடலாம்!" என்று ஏதோ வஞ்சிரம் பிடிப்பது போலக் கைப்பற்றி, படகை உடைத்து, வலையைக் கிழித்து, மொத்தத்தில் அக்கிரமம் செய்தது குறித்து அரசியல் கட்சிகள் அறிக்கை விட்டு, அம்மக்கள் மாக்களாக பத்து நாட்கள் கழித்து பதைபதைக்கும் குடும்பத்தை அடைந்தது கனமாக மனதில் நிழலாட, மனித உயிரின் மதிப்பற்றதன்மையை அறிய முடிந்தது.* துரித உணவகத்தில் உண்டால் துரிதமாக மருத்துவமனைக்கும் பின்னர் அதைவிடத் துரிதமாக நம்மைப் படைத்தவனையும் பார்த்து விடுவீர்கள் என்று நம் பாட்டி முதல் நேற்று வந்த மால்கம் ஸ்பர்லாக் (Malcolm Spurlock - Super Size Me)வரை எல்லோரும் கதறித் தீர்த்துவிட்டார்கள்.

இப்போது அதைத் தூக்கிஅடிக்கும் விதமாக மெக்டோனல்ட்ஸில் வாங்கிய ஒரு பர்கர் (இரண்டு ரொட்டித் துண்டுகளுக்கிடையே வட்ட வடிவ மாமிசத் தட்டு!) கடந்த - அதிகமில்லை ஜெண்டில்மேன், ஆறு மாதங்களாக அப்படியே இருக்கிறதாம். 'ஙே!'

ஒரு புழு பூச்சி காளான் எதுவும் அண்டவில்லை என்றும், முதல் இரண்டு நாட்களுக்குப் பிறகு வாடை கூட அடிக்கவில்லை என்றும் இந்த கலைப்பணியை (?) செய்துள்ள அம்மையார் தெரிவித்துள்ளார்.

இத்தகைய உணவு வகைகளைச் சாப்பிட்ட பின் அதை செரித்து வெளியே தள்ளும் நம் குடல் நிஜமாகவே 'கல்க்குடல்' தான்! முன்னொரு காலத்தில் மேலே சொன்ன அதே பாட்டி, 'சின்னப்பசங்க நீங்க, எதைத் தின்னாலும் செரிக்கணும்!'னு சொன்னது ஞாபகத்துக்கு வருகிறது.

நம் உயிருக்குக் கண்டிப்பாக மதிப்பே இல்லை :-))

எந்திரன் புயல் இன்னும் முடியவில்லை என்றும், அந்தப் புயலே பிலிப்பைன்ஸ் நாட்டை மெகி என்ற பெயருடன் தாக்கிக் கொண்டிருப்பதாகவும் நம்பத் தகுந்த வட்டாரங்களிலிருந்து செய்தி.  - கண்டிப்பாக நம்ம சன் டிவி ஸக்ஸ் சொல்லலீங்க!


உயிரா? அப்பிடின்னா?

Monday, October 4, 2010

ஏகாம்பரத்தின் பார்வையில் எந்திரன்!

Once you read this, you might want to check the english review here, thus showing that everyone of us is schizophrenic at some level :-))


என் உயிரினும் மேலான பாயும் புலி ரஜினி தலைவனுக்கு,


ராயபுரம் 'ரஜினி' ஏகாம்பரம் எளுதிக்கறது.

நானும் என் குடும்பமும் நல்லா இருக்கோம்.

அங்க அண்ணி லதாம்மாவும், தங்கச்சிங்க ஐசுவரியாவும் சௌந்தரியாவும் நல்லா இருக்காங்களா?  கொளந்த சௌந்தரியா கல்யாணத்துக்கு நம்ம யாரையுமே கூப்பிடல. பரவாயில்ல. நீதான் எவ்வளவு எங்களுக்கு செஞ்சிருக்கே... இது என்னா பெரிசு?

அது போவட்டும்...

அதுக்கு பதிலாத்தான் 'எந்திரன்' குடுத்திருக்கியே...

சிவாஜிக்கு அப்புறம் ரொம்ப ஆசை ஆசையா காத்திருந்தோம். நேத்து வந்தவனெல்லாம் சுறா, எறான்னு பிகிலு வுடும்போது, நீ மட்டும் ரெண்டு வருசமா காணோமா, ரொம்ப பேஜாரா பூடிச்சு. நடுவுல அந்த குசேலன் வேற, இன்னும் உசுப்பேத்திடுச்சி.

ஆனா வெயிட் பண்ணதுக்கு தகுந்த மாதிரி சூப்பர் படம் குடுத்துட்ட தலைவா!


ஒரு நிமிசம் இரு... இந்த கை ஒரே வலி... 

அது வேற ஒண்ணியும் இல்ல...

வியாளக்கிழம நம்ம ஆல்பட் தியேட்டர்ல உன் கட் அவுட்டுக்கு பால் அபிசேகம் செய்யச் சொல்லோ, கொஞ்சம் வழுக்கி வுயிந்திட்டேன். வூட்டுல ஆத்தா 'டேய்!  புத்தூருக்குப் போயி கட்டு போட்டுட்டு வாடான்னு' அளுவுது. நீ வேற அம்மா சொன்னாக் கேக்கணும்னு சொல்லிக்கீறியா... தோ, நாளக்கி நம்ம சிட்டிப்பயல போய் மூணாவது தபா பாத்துட்டு போலான்னுகீறேன்.

ஆனா, படம் டாப் டக்கருப்பா...

உன் தாடி என்ன? சிட்டியா வந்து கருணாசையும் சந்தானம் பயலையும் கலாய்க்கிறது என்ன? சூப்பரு தலைவா!

அப்பறம் நம்ம ஐஸுக்கிட்ட 'நான் குடுத்த முத்தம்லாம் தா'ன்னு சொல்றது பழசுன்னாக்கூட ஷோக்குதான்...

ஆமா! உன் கைக்கு என்னாச்சு? நம்ம சிட்டி ரோபோவுக்கு கண்ணாடி மாட்டச்சொல்லோ அந்த மாதிரி தடவுன? எங்களுக்காக ரொம்ப உழச்சிட்ட தலைவா! இமயமலைக்கு போயி கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துட்டு வா!

நீயும் ஐஸுவும் நம்ம சேரிக்குள்ள வந்தப் பின்னால நம்ம எல்லயம்மா கணக்கா எல்லா பொருளையும் வச்சிட்டு போஸ் குடுத்த உடனே லேடீஸ் எல்லாம் கொலவை கொட்றது படா தமாஸு!

அது என்னா தலைவா? சங்கரு படத்துல யாராவது துணி இல்லாம இருக்கணுமா? பாய்ஸு, முதல்வன், இப்போ எந்திரன்... ஆனாலும் அந்த பேமானி போரா, உன்கிட்ட டகல்பாஜி காட்டும் போதே அவன நாலு தட்டியிருக்கணும்... அடுத்த தபா கவுனிச்சிக்கோ என்ன?

அந்த ட்ரெயின் சண்ட பாத்து என் உடம்பெல்லாம் மயிர் கூச்சாலாயிடுச்சிப்பா! அதுவும் நீ அந்த ட்ரான்ஸ்பார்மர்ல கை வச்ச உடனே எனக்கு ஷாக்கு! அப்புறம் நம்ம கோபாலுதான் சொன்னான்.. நீ மெசினுன்னு... என்னா நடிப்பு!!

இன்ட்ரோலுக்கு அப்பால, நீ ஐஸுவுக்கு சைடு கட்டலான்னு பாக்கறப்போ, ஒரே குஜால்தான்... அதுவும் ஒரு ரஜினிக்கே சிங்கி அடிச்சிக்கிட்டு இருந்த எங்களுக்கு ஒரே சமயத்துல 100 ரஜினி பார்த்தா எப்படி இருத்திருக்கும்... டாஸ்மாக் கடையே வீட்டுக்குள்ள வந்தா மாதிரி ஒரு கிக்கு!

அதுக்கு அப்பால நம்ம சங்கரு உன்ன வச்சி பாம்பு மாதிரியும், ராட்சசன் மாதிரியும், பெரிய சுவர் மாதிரியும் காட்டுனது ஒரே மெரசலாயிடுச்சி! படத்துக்கு முன்னால நானும் கோபாலும் அடிச்ச ரெண்டு குவார்ட்டர் மப்பும் அப்படியே இறங்கிடுச்சின்னா பார்த்துக்கோயேன்...

அப்புறம் சிட்டிய உன்னோட கம்ப்யூட்டர் நாலட்ஜி வச்சி 'மேட்டர் ஓவர்' பண்ணதுக்குப் பிறகுதான் எங்களுக்கு மூச்சு வந்துச்சி... எப்போ கம்ப்யூட்டர் படிச்சே, தலைவா?

போட்ட குவார்ட்டர்லாம் வேல செஞ்சிடுச்சா? அதுனால பாட்டுங்களை எல்லாம் ஒளுங்கா பார்க்க முடியல. ஆனாலும், 'அரிமா, அரிமா' பாட்டுக்கும் 'கிளிமஞ்சாரோ' பாட்டுக்கு மட்டும் அடக்கிட்டு உட்கார்ந்திட்டேன்னா பாரேன்!
ஆனாக்கூட நம்ம சிட்டிப்பயல், ஆடு மாதிரி சிரிக்கறது, 'ரோபோடா' அப்படின்னு ரவுசு வுட்ரறது எல்லாம் 'கமாய் பத்னி ரைட்டு!!'


கடோசில, நீயே உன் கை, கால் எல்லாம் உடைச்சி வைக்கும் போது, அப்படியே போய் ஸ்க்ரீனை கீசிடலாமான்னு தோணிச்சி.. நம்ம கோபாலுதான், 'டேய் ஏகாம்பரம், அது மெசினுடா'ன்னு சொன்னான்.

அதான் இல்ல?

யோசிச்சுப் பார்த்தா, அதான் தோணுது.

நீ பாஷாவுல, ஆனந்தராஜை மொதல் தடவயா போட்டுத் துவைக்கும் போது நானே அவனை நாஸ்தி பண்றாமாதிரி இருந்திச்சு!

அண்ணாமலைல, 'மலைடா, அண்ணாமலை' அப்படின்னு ராதாரவிகிட்ட பிலிம் காட்டும் போது, நானே அந்த ஹோட்டல் முதலாளி ஆயிட்ட மாதிரி இருந்திச்சி!

ஏன், நம்ம பாபாவுல, 'பாபா, கவுண்டிங் ஸ்டார்ட்ஸ்'ன்னு நீ சொல்லும்போது, என்னா சொல்றன்னு புரியலேன்னா கூட, தியேட்டர்ல உன்னோட சேர்ந்து எல்லாரும் ஒண்ணு, ரெண்டு,மூணு சொல்லியிருக்கோம்!

இதோ, இந்த சங்கரு எடுத்த சிவாஜியில நீ 'கண்ணா! பன்னிங்கதான் கூட்டம் கூட்டமா வரும்! சிங்கம் சிங்கிளாத்தான் வரும்'னு சொல்லி எங்க வயித்தில பீர் வார்த்தியே, அது பஞ்ச் டயலாக்!

எந்திரன் சூப்பர்தான். புத்தூர்ல கட்டு போட்டுகிட்டு இன்னும் ரெண்டு தபா பார்த்திடுவேன். என்ன? வூட்டுல கொஞ்சம் குண்டான்லாம் அடகு வெக்கணும். அதுக்கென்னா, உன் படம் பார்க்க இது கூட செய்யலயின்னா எப்படி? அது தாண்டி, நம்ம கலைஞர் இருக்கும் போது என்னா கவலை? சன் டிவி காட்டியே நம்ம வயித்த ரொப்பிடுவாரு இல்ல?

ஆனா பாரு, நடுவுல கொஞ்சம் டாஸ்மாக் இல்லாதவே தூக்கம் வருது. இந்த விஞ்ஜானி எல்லாம் ஒரே ப்ரைம் நம்பரு, பிபோனக்கியா - அது என்னா கருமாந்தரமோ தெரியல, ஒரே கொட்ச்சலு :-(

கொஞ்சம் புரியறாப்போல, 

'நம்ம நமீதா இடுப்பு சைசு என்ன?' 
'பிரபு தேவாவும் நயன் தாராவும் கண்ணாலம் கட்டிக்குவாங்களா?' 
'அடுத்த தபா எலீக்சன்லே ஒரு ஓட்டுக்கு எவ்வளவு துட்டு தருவாங்கோ?

இப்படி நல்ல ஜெனரல் நாலட்ஜி கேள்வி கேட்டிருந்தா நல்லா இருந்திருக்கும்... நானும் தூங்கியிருக்க மாட்டேன்...

ஆமா? அது என்னா ஆ, ஊன்னா 'டெர்ரா, ஜெட்டான்னு' ஏதோ சொல்லிக்கினே இருந்தியே! படா ஷோக்குப்பா! அதெல்லாம் தானா வர்றது இல்ல!


அதுனாலதானோ என்னாவோ இங்கிலீஷு படம் பார்க்கறாமாதிரியே இருந்துது... வெள்ளக்காரன் படம்ன்னாக்க பலான சீனு ஒண்ணு ரெண்டு இருக்கும் - உன் படமாச்சே, அதெல்லாம் எதிர்பார்க்கக் கூடாது.... தப்பு, சாமி கண்ணக் குத்திடும்...


ஆக மொத்தம், சங்கரு உன்ன அவன் படத்துல நடிக்க வெச்சிட்டான். நாங்களும் எங்களால முடிஞ்ச அளவுக்கு படத்துக்கு துட்டு சேர்த்துட்டோம். பாவம்! நீ கூட படத்துக்கு சம்பளம் வாங்கலியாம்! நம்ம கோபாலுதான் தந்தியில படிச்சு சொன்னான்...

பொண்ணுக்கு கண்ணாலம் செஞ்சிருக்கே!
ரெண்டு வருசம் ஒரு படம் நடிச்சு அதுக்கு டப்பு வாங்கல!
தலைவா! உன் தியாகமே, தியாகம்!

முடிக்கிறதுக்கு முன்னாடி ஒரு சின்ன சந்தேகம், தலைவா! தப்பா நெனச்சுக்காதே...

நம்ம கோபாலுதான் சொன்னான்... நீ என்னவோ அரசியலுக்கு வரவே மாட்டியாம். உனக்கு துட்டுதான் முக்கியமாம். அத்தோட நாங்கள் எல்லாம் அம்பேல்தானாம்...

உண்மையா தலைவா?

நீ 'உம்'னு சொல்லு... உடல் மண்ணுக்கு, உயிர் உனக்கு, கோட்டை நமக்கு!

உடம்பை பார்த்துக்கோ தலைவா! ரொம்ப சிகரெட் பிடிக்காதே! சீமை சரக்காவே சாப்பிடு!

இப்படிக்கு - டாஸ்மாக் கடை 916லிருந்து
உனக்காகவே உயிரோடு இருக்கும்,
ராயபுரம் ஏகாம்பரம்.