கர்ணன் – பேரடையாளம்




(5 min read)

(tl:dr)

Karnan is the story of how a celebrated life in an oppressed village turns into a bloody denouement. Even after 50 years of Indian independence (do you say even after 74 years?), the nature of struggle that such people face/d is something to be ashamed of, as a human. It will take a number of such movies to right-shift the narrative so that the quotient of oppression reaches zero eventually. Karnan is a movie full of symbolisms – animate and inanimate. Mari Selvaraj has drawn heavily from the folklores, Mahabharata, and the contemporary life. Though a bit preachy and draggy at times, it is an important (second) film for him.

 
As Bhargav said, Dhanush is a shoe-in😜 for yet another National Award. And in the movie-cookie time after the show last night, we discovered many symbolisms/directorial touches courtesy Maanasa. 💓  

******

சமீப காலங்களில் தமிழில் வந்துள்ள ஒடுக்கப்பட்டவர் பற்றிக் குறிப்பிடப்படக்கூடிய படங்கள் ஐந்து.

மெட்ராஸ், கபாலி, காலா, பரியேறும் பெருமாள், மற்றும் இப்போது கர்ணன். (அசுரனையும் சேர்த்துக் கொள்ளலாம்தான்; ஆனால் அது இவையளவுக்கு அரசியல் பேசவில்லை).

மெட்ராஸ், இலைமறை காய்மறையாக தலித்துகளுக்கும் ஒரு அடையாளம் வேண்டும் என்பதை ஒரு சுவரின் வாயிலாக வரைந்தது.

ஒருவரைப் பார்த்தவுடன் முதலில் நாம் கவனிப்பது அவர்களின் ஆடைகளைத்தான். தலையில் துண்டா, கக்கத்தில் துண்டா? வேட்டியா, கால்சட்டையா? செருப்பா, ஷூவா? என்று அவற்றைப் பார்த்தே நாம் அவர்களை எடை போடுகிறோம். கபாலியில் ஒரு மனிதனின் ஆடைகளை வைத்து ரஜினி முழங்கிய ‘நான் சூட்டு போடுவேன்டா! கெத்தா இருப்பேன்டா!’ அம்பேத்கருடைய சூட் கோட்டை மீண்டும் நினைவுபடுத்தியது.

காலா, அவர்களின் வாழ்விடத்தை வைத்து நடக்கும் அரசியலைக் கூற முற்பட்டது. அழுக்கு, குப்பை, காலனி என்று எல்லோராலும் பழிக்கப்படும் இடம் கூடப் பறிக்கப்பட இருக்கும் நிலைக்குத் தள்ளப்படும் போது ஏற்படும் வானவில் எதிர்வினைகள் காலா.

பரியேறும் பெருமாள், தலித்துகளின் கல்வியைக் குறிவைத்து அதன் முக்கியத்துவத்தை கொஞ்சம் சர்க்கரை அதிகமாக உணர வைத்தது.

இப்போது, கர்ணன்.

ஆடை, வாழ்விடம், கல்வி – எல்லாமே ஒரு மனிதனின் பெயருக்கு முன்னால், அவன் முகத்துக்கு முன்னால் நிற்கும் போது இரண்டாமிடத்தையே பெறுகின்றன.

பொடியன்குளம் கிராமத்தில் ஒரு பேரூந்து நிறுத்தம் இல்லை என்பது ஒரு முகப்புதான். ஆனால் அதனைச் சுற்றி நடக்கும் அனைத்து நிகழ்வுகளும் ஒடுக்கப்பட்டவரின் இப்போதுள்ள பெயர், முகம் பற்றிய அடையாளங்கள் மாற வேண்டும் என்பதை நோக்கியே கர்ணனில் பின்னப்பட்டிருக்கின்றன.

முதல் பாதி முழுவதும், அவ்வூர் மக்களின் வாழ்வியலைக் காட்டி - பன்றி வளர்த்தல், மூட்டம் போடுதல், மாடு மேய்த்தல், (மேற்குடியினரின்) நிலத்தில் உழைத்தல், படிக்க நினைத்தால் அதற்கு ஏற்படும் முட்டுக்கட்டைகள், எப்படியாவது போலீஸ்/மிலிட்டரியில் ‘செலக்‌ஷன்’ ஆகி முன்னேற வழி தேடுதல், பொம்மை முகம் வைத்து கன்னி பூசை, கிராமங்களுக்கே உரிய வினோதமான பூசை/சாங்கியங்கள்… இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம்.

ஆனால் இவை அனைத்துக்கும் ஆதார சுருதி அந்த பேரூந்து நிறுத்தப் பிரச்சினை. அது படீரென வெடிக்க, கர்ணன் வாள் ஏந்தி நிற்க, முடிவில் ஒரு சோகம் கலந்த சுபம்.

முகமே அடையாளம். பெயரே அடையாளம். உன் பெயர் ஸ்ரீ கணேஷா? நீ பிராமணனாகத்தான் இருக்க வேண்டும். உன் பெயர் மாடசாமியா? நீ தலித்தாகத்தான் இருக்க வேண்டும். உன் பெயர் பேச்சியப்பனா? நீ செட்டியாராகத்தான் இருக்க வேண்டும்.

இப்படி நூற்றாண்டுக் கணக்காக பெயரை வைத்தே ஒருவரின் சாதியையும் இனத்தையும் அடையாளம் கண்டு, பின் எவரும் பெயரை மாற்றி வைக்கும் போது, அதனால் ஏற்படும் வன்மத்தையும் வெளியாகும் வன்முறையும் இப்படத்தின் அடிநாதங்கள்.







இயக்குனர் மாரி செல்வராஜ் தன்னால் இயன்ற அனைத்து சிம்பாலிசங்களையும் படத்தில் புகுத்தியுள்ளார். சாம்பிளுக்கு சில:

  • முன்னங்கால் கட்டப்பட்ட கழுதை (பரி. பெருமாளில் நாய்; இதில் கழுதை)
  • ஸ்டேஷனில் அடி பின்னப்படும் போது ஆடும் அம்பேத்கரின் படம்
  • இறந்து போன தங்கை குறி சொன்னபடி வீட்டில் கிடைக்கும் அந்த உண்டியல் வெளிவருவது போல தனுஷின் தங்கைப்பாசம் மனதின் ஆழத்திலிருந்து வெளிவருவது
  • படமெங்கும் முகமற்று அந்த பொம்மையின் வாயிலாகக் காட்டப்படும் அச்சிறுமி (faceless millions)
  • கண்ணபிரான் சூது கவ்வச் செய்யும் போது வரும் மீன்பிடிக் காட்சிகள்
  • ஒரு உயிர் பிறக்கும் போது வரும் அன்னையின் அலறல்கள் அதே சமயத்தில் மற்ற உயிர்கள் சித்திரவதைப் படுவதின் அலறல்களை அழுத்தி மேலெழும் பின்னணி
  • தரையில் வரைந்த பிணத்தைச் சுற்றிய கோட்டில் தலை மட்டும் வரையப்படாமல் உரைந்த ரத்தம்
  • ‘ஒருத்தன் ஜெயிச்சுட்டான்!’ என்ற உவகை வசனம்
  • ‘அதுக்கப்புறம் யார் யாரோ வந்தாங்க; நீதி வாங்கித் தரோம்னு சொன்னாங்க!’ என்ற தலித் அரசியலின் நிதர்சன வசனம்
  • சம்பவஙகளின் உக்கிரம் அதிகமாக அதிகமாக, அந்தக் குதிரையின் நடை, ஓட்ட வேகமும் அதிகரித்தல்
  • இறுதியில் கட்டவிழித்துவிடப்பட்ட கழுதையுடன் குட்டிக் கழுதையும் சேர்தல்

  • மேலே சுற்றிக் கொண்டிருக்கும் drone போல கழுகு எப்போதும் கிராமத்தாரைக் கண்காணித்துக் கொண்டிருக்கிறது
  • இன்னும் பல…


குறிப்பாக மகாபாரதக் குறியீடுகள்:

  • ஆங்காங்கே சூரியக் காட்சிகள் விரவிக் கிடக்க…
  • கர்ணனும் திரெளபதியும் மாறி மாறி தளபதி ரஜினி டி-ஷர்ட் போட்டுக் கொள்ள…
  • திரெளபதி சுயம்வரத்தில் மீனைக் குறி பார்த்து அம்புவிடுவதைப் போல, இங்கும் கர்ணன் மீன் வெட்டி வாள் வெல்ல, அவ்வாளை அவன் பாண்டவர்கள் போலவே தன் தாயிடம் கொடுக்க…
  • ’குருடனின் பிள்ளை குருடன்’ போலவே இங்கும் சூதாட்டத்தின் போது யோகிபாபுவின் ஒரு வசனம் ‘உன் அக்காளை ரெண்டாம் தாரமாகக் கட்டிக்கிறேன்!’ என்ற ஒரு வசனம் தொடர் சங்கிலி விளைவுகள் ஏற்படுத்த…
  • பாண்டவர்கள் (நால்வர்தான்) – தர்மம் ஏ(எ)மராஜாவின் உருவில் கர்ணன் பக்கம் நிற்க…
  • ஏமராஜாவே பீஷ்மராகவும் விளங்க – அவர் இறப்புக்கு அவரே நாள் குறிக்க…
  • கண்ணபிரான் வழக்கம் போல சூதுகள் பல புரிய…
  • கிராமப் பெரியவர் துரியோதனன் எப்போதும் கர்ணனுக்கு ஆதரவாகப் பேசவே, இறுதியில் கர்ணனால் அவர் சொல்லைத் தட்ட முடியாமல் போக..

 

சரி, படம் அவ்வளவு சிறப்பா?

  • பல இடங்களில் வசனங்கள் ரிபீட்டு! தேவையா? அதுவும் நல்ல வட்டார வழக்கில் பேசிக் கொண்டிருக்கும் போது, திடீரென இலக்கண சுத்தமாக பிரச்சார வசனங்கள் அரிசியில் கல்!
  • வாளேந்தி நின்னான் பாரு என்று தனுஷ் போலீஸை வெட்டுவதை – துப்பாக்கி இருந்தும் - பார்த்துக் கொண்டே இருந்த மற்ற போலீஸ்!
  • படத்தில் தனுஷ், லாலுக்குப் பிறகு அந்தக் கழுதைக்குத்தான் நிறைய கால்ஷீட் தேவைப்பட்டிருக்கும். அது தவிர மற்ற மிருகங்கள்… ஒரு சமயத்தில் National Geographic பார்க்கிற மாதிரியே ஒரு ஃபீலிங்கி!
  • அதே போல தனுஷிற்கு அடுத்த படியாக மக்கள் நடந்து போகும் பாதக் காட்சிகள் – ஒரு நூறு வகை செருப்புகளைப் பார்த்திருப்போம்.
  • அந்த கபடிக் காட்சி மட்டும் விஜய் கையில் கிடைத்திருந்தால்… சே! வடை போச்சே!
  • கற்றவை, பற்றவை! என்று அம்பேத்கர் முழங்கினார். அறிவுத்தீயை வளருங்கள் என்று அவர் சொன்னதை, ’வாள் எடுத்தால்தான் சரி!’ என்று மாரி செல்வராஜ் கூறியது பார்க்கின், வெறுமனே ‘தீயை வளருங்கள்!’ என்று மக்கள் புரிந்து கொள்வது சாத்தியமே.

 இருப்பினும்…

மாரி செல்வராஜுக்கு இது இரண்டாவது படம். தனுஷ், லால் (மற்றும் அந்தக் கழுதை!) ஆகியோரின் பலத்தில், சந்தோஷ் நாராயணனின் இசைப் பின்புலத்தில் நல்லதொரு அனுபவத்தைக் கொடுத்துள்ளார்.  

திரைப்படம் என்பது பொழுதுபோக்குச் சாதனம் மட்டுமில்லை. நம் வாழ்வை பிரதிபலிக்கும் ஒருவகை இலக்கியமும்கூட. அதனால் வெறும் பஞ்ச் டயலாக்குகள், வெத்துச் சண்டைகள், குலுக்கல் நடனங்கள் என்று அறிவை மழுங்க அடிக்கும் பப்படங்களுக்கு இடையே, ‘கர்ணன்’ ஒரு நல்ல ஆனையடி அப்பளம்.

கர்ணன்: பெயர் அடையாளமே பெருமை - பேரடையாளம்!

அமேசானிலும் வரும்.

#sriGINthoughts #review #Karnan


Comments